தொடர்கள்
நெகிழ்ச்சி
நாடு சிரம் தாழ்த்திய தருணம் - பால்கி

20231030160916966.jpeg

அந்த பதினேழு நாட்கள், பதினேழு யுகங்களாய், .. என்ன ஒரு கொடுமை.

உயிரிருந்தும் சரியான மன நிலையில் வாழமுடியாமல், ..அதை விடக் கொடுமை.

அதிலும் தேசமே தீபாவளி கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கையில் அந்த நாற்பத்தியொருவர்க்கு அன்று ஒன்றும் புதிதாயில்லாமல் தன் பணி செய்து கொண்டிருக்க… ..

தாங்கள் மாட்டிக்கொண்டு இருக்கின்றோம் என்ற நிலையே தெரியாது…நன்றாக மாட்டிக்கொண்டு…

பல சமயங்களில் இந்த மாதிரி ஏன் ஏற்படுகிறது? எவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி? அது ஏன் நமக்கு மட்டும்? நாம் மட்டும் தனியில்லை..கூட இருப்பவர்கள் யார் ? என் உறவினர்களா? என்ன பந்தம்? இந்த கணம் முதல் முன் பின் பரிச்சயமற்றவர்கள் ஒரு சேர ஒரு பதினேழு நாட்கள், 400 மணிகளுக்கும் மேலாக ஒரே இடத்தில், ஒரே மன நிலயில், கிடைக்கும்(?) அனைத்து இயற்கை வசதிகளை அனிச்சையாகப் பகிர்ந்து கொண்டு….இன்னும் எத்தனையோ? நம்மைச் சுற்றி மண் மூடிக்கொண்டதும், எத்தனை நேரம் கடந்ததோ,,சுற்றி ஏதோ மீட்பு பணிகளில் பலரிருக்க…ஒரு வேளை தைரியம் வந்திருக்கலாம்.

பாறைகளில் கசியும் நீரும் பொரியும் தான் முதன் ஒரு வார உணவாயிருந்தது என்று கூறுகிறார் அனில் பேடியா என்ற மீட்கப்பட்ட தொழிலாளி.

நிலையற்ற நிலை. அடுத்து என்ன நடக்கும் என்று உள்ளே இருந்த 41 வருக்கும் தெரியாமல் போகலாம் அது அவர்களின் துக்க நிலை. ஆனால் வெளியே இருந்த 653 பேருக்குமா…ஆம், ராணுவம், மீட்பு பணியினர் என அந்த 653 பேருக்கும் அடுத்து என்ன செய்யலாம் என்பதே ஒரு தெளிவான முடிவாக இருக்கவில்லையே. எடுக்கும் செயல் அவர்களுக்கு சாதகமாகவே இருக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு.... ஒரு வேளை ஏதேனும் செய்யப் போய் மணல் மொத்தமாக கொட்டி மூடி விட்டால் ????

140 கோடி பாரத மக்களின் ஒரு மனதான பிரார்த்தனை, மத்திய மாநில அரசுகளின் 24x7 நேர பணியில் அந்த கடுங்குளிர் வனப்பகுதியில் கண நேர தாமதமும் இருக்கக்கூடாது என்பதில் இருந்த அக்கறை....

பிரதமரின் தூதராக ஜெனரல் வீ கே சிங், உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி அந்த இடத்திலேயே இருந்தது…இந்த மீட்பு பணியில் ஆலோசனை வழங்க ஆர்னால்ட் டிக்ஸ், போன்ற உலக அளவில் புகழ் பெற்ற இரு சுரங்க நிபுணர்களை வரவழைத்தது, ஆகர் மிஷின் என்ற ராட்ஷத அளவில் எளிதில் துளையிடும் மிஷினை இந்திய வான் படை விமானம் மூலம் ஸ்லோவேனியாவிலிருந்து வரவழைத்தது, (ஆனால் அது வேலைக்காகாமல் அங்கேயே தான் இருக்கிறது பாவம்) ப்ளாஸ்மா கட்டர் வேண்டும் என்றதுமே அமெரிக்காவுக்கு ப்ளேன் அனுப்பி கொண்டு வந்தது, இன்னும் நாலு மிஷின்கள், ரோபோக்களை சுவிட்சர்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் வரவழைத்தது, அந்த சுரங்கம் பக்கத்திலேயே ஒரு ஆக்சிஜன் ப்ளாண்ட் நிறுவியது…என்று அடுக்கிக் கொண்டே போகலாம்…

29 நவம்பர் மதியத்துக்கு முன்னர் நமது பாரத பிரதமர் மோடி அந்த மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்களிடம் போன் மூலம் பேசி இருந்தார். அது நாட்டு டீ வீ சானல்களில் ஒளி பரப்பப்பட்டது.

20231030161021526.jpg

இறைவனுக்கு நன்றி. மீண்டு வந்த உங்களுக்கு நன்றி. உங்களின் புண்ணியங்களுக்கு நன்றி. 140 கோடி மக்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. அத்தனை பிரார்த்தனைகளுக்கும் செவி சாய்த்த இறைவனுக்கு மீண்டும் நன்றி.

இத்தனை நாள் சோதனையில் ஒன்றும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தது அந்த பத்ரினாதருக்கும், கேதாரனாதருக்கும் நன்றி என்ற பிரதமரின் குரல் தழு தழுத்தது.

அந்த 41 பேரில் ஃபோர்மேனாக பணியாற்றிய கப்பர் சிங் நேகி, மற்றும் சபா அஹமத்

20231030161113801.jpg

மற்ற பணியாளர்களை நேர்மறை எண்ணம் மாறாமல் இருக்கச் செய்ததில் ஆற்றிய பங்கு மிகப் பெரிய ப்ளஸ் என்ற பிரதமர், இந்த பதினேழு நாட்களில் தொழிலாளர்களை நேர்மறை எண்ணங்களோடு இருக்கச் செய்ததில் உங்கள் இருவரின் ஒத்துழைப்பு மற்றி யுனிவர்சிடி "கேஸ் ஸ்டடி" செய்யலாம் என்றும் சொன்னார்.

பதிலுக்கு " யோகாவும் நடைப்பயிற்சியும் எங்களை ஒரு நிலப் படுத்தியது" என்றனர் அவ்விருவரும்.

20231030161438123.jpg

[மருத்துவ மனையில் 41 பேரும் செக்கப்புக்காக]

இது இப்படி இருக்க இரண்டு நாளுக்கு முன் நடந்த நிகழ்வின் ஃப்ளாஷ் பேக்.

ஆஸ்த்ரேலியாவின் ஆர்னால்ட் டிக்ஸ் பத்திரிகையாளர்களை சந்த்தித்தபோது கூட, எடுக்கும் முயற்சிகள் தோல்வி மேல் தோல்வியிலேயே முடிகிறது. நேரம் கடக்கிறது. எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வே அதிகரித்தது. எனினும் வரும் கிறுஸ்துமசுக்குள் அவர்கள் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்றே கூற எவர் முகத்திலும் ஒரு நம்பிக்கை ரேகை காணமுடியவில்லை.

திடீரென, உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி விரைவிலேயே, அதி விரைவிலேயே 41 பேரும் மீட்கப்பட்டு விடுவர். கூடவே இந்த ரேட் மைனர்ஸ்களையும் இந்த பணியில் அமர்த்தி உள்ளோம் என்ற செய்தியும் வருகிறது.

28ஆம் தேதி முழுதும் அதற்கு முன் நாளும் அந்த ரேட் மைனர்கள் தம் பணியினை, அதாவது எலி எப்படி பூமிக்குள் துளையிடுமோ அது போலே தோண்டும், தோண்டிய மண்ணை பின்னே தள்ளிவிட்டு முன்னேறும்..என்ற பாணியில் மண்வெட்டி, கடப்பாரை, பாண்ட் சஹிதம் தம் வேலையில் 12 பேர் குழு இறங்கியது.

பதினேழு நாளாக கிட்டத்தட்ட தொடர் நேரலை செய்து வந்த செய்தி டீ வீ சானல்களில் திடீரென்று அபரிதமாக நம்பிக்கை தரும் விதத்தில் அந்த எலி தோண்டலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர்களால் அந்த 41 பேரின் இடத்தை அடைய முடிந்ததாகவும் கூற 140 கோடி உள்ளங்களில் லப் டப் எக்கச்சக்கமாக எகிறித்தான் போனது.

அங்கே ஆர்னால்ட் டிக்ஸ் அருகாமையில் இருந்த பாறை சிற்பத்தில் உள்ளூர் வாசி பிரார்த்தனை செய்த போது, அவரும் பிரார்தனையில் ஈடுபட்டிருந்ததை தொலைக்காட்சி சானல்கள் ஒளி பரப்பின.

உலகமே கூர்ந்து கவனிக்கையில், வந்தார்கள், தோண்டினார்கள், மண்ணை வாரினார்கள், பின்னுக்கு தள்ளினார்கள்......

20231030161325751.jpg

உள்ளேயிருந்த 41 பேரும் லாவகமாக ஒவ்வொருவராக வெளியே இழுக்கப்பட்டனர். சில்கியாரா சுரங்கம் பக்கத்திலிருந்து 60 மீட்டர் தொலைவுக்கு மூடிக்கொண்ட பாறை கற்கள் பகுதியில் துளையிட்டது இவர்களின் சாதனை.

இந்த 12 பேரின் பணி பெரிய டெக்னிகல் இயந்திரங்கள் இல்லாமல் கை வினை பொருட்களைக் கொண்டே 'சல்லிசாக' வேலையை முடிச்சிட்டாங்க என்ற போது…..140 கோடி கண்கள் அந்த 12 பேரை தன் நெஞ்சத்தில் இருத்திக்கொண்டு விட்டார்கள்.

இந்த வேலை கடினமானது தான், ஆனால் எங்களுக்கு இது ஜுஜூபி தான் என்கிறார் ஃபெரோஸ் குரேஷி எங்கின்ற ரேட் மைனர். இவர் தான் முதன் முதலில் தான் வெட்டிய துவாரத்திற்குள் சென்று அடைபட்டவர்களைப் பார்த்தவர்.

அவர்களைக் காப்பாற்றிய புண்ணியம் ஒன்றே போதும், பணம் ஒன்றும் வேண்டாம் என்றும் மறுத்து விட்டனர் எலி துளையிடும் யானை மனதுக்காரர்கள்.

இந்த சுரண்டல் முறை விஞ்ஞன முறையல்ல, கொடூரமானது, போதிய பாதுகாப்பு இல்லாதது, குழந்தை தொழிலாளிகள் இதில் அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள், காடு அழிப்பு, மண் அரிப்பு போன்ற சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணங்களால் தேசீய பசுமை தீர்ப்பாயத்தால் 2014 ல் தேசீய அளவில் தடை செய்யப்பட்டது.

இதனால் வரும் நாட்களில் பாராளுமன்ற அவைத் தொடரிலும், அரசியல் சுரங்கத்திலும் சம்பந்தப்பட்ட அரசுகள் கழுவில் தள்ளப்படலாம் என்று கௌளி சொல்கிறது.

தலைப்புக்கு வருகிறேன்.

இரண்டாம் உலகப்போரில் வான்படையின் பராக்கிரமத்தால் இங்கிலாந்து வென்றபோது அப்போதைய பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகள் இங்கு இவர்களுக்கும் பொருந்தும்.

NEVER IN THE HISTORY OF HUMAN KIND WAS SO MUCH OWED BY SO MANY TO SO FEW.

(மனித சரித்திரத்தில் இவ்வளவு சிறிய குழுவிற்கு இவ்வளவு பேர் இத்தனை பெரிய கடன் பட்டதில்லை)

28 நவம்பர், 2023 , சுரங்கத்தில் மாட்டிகொண்ட 41 பேரை இவர்கள் நலமாக மீட்ட கணம், இந்தியர்கள் அனைவருமே எலி சுரங்கம் தோண்டும் அந்த 12 பேருக்கும் என்றென்றும் கடன்பட்டவர்கள் தான் !!