பூஜை, ஹோமம், வழிபாடு, சம்பிரதாயம், சடங்கு என்பவை எல்லாம் ஏன்? என்ற கேள்வியோடு நமது சங்கரனை அணுக இதோ அவர் தந்த பதில்.
இதுவரை பார்த்ததில் சநாதன தர்மம் என்பது நமது வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஒரு கோட்பாடாகவே காண்கிறோம். அதைச் செய்யும்போது அது சமூக நெறியையும் மனித குல வரைமுறைகளையும் சேர்த்தே சொல்கிறது. தனிமனித நெறியும் சமூக நெறியும் மனிதகுல நெறியும் வெவ்வேறாக இருந்தால் விளையும் அனர்த்தங்களை நாம் இன்றைய ஜன நாயக அமைப்பில் காண்கிறோம்.
அது சரி, இந்த சனாதன தர்மக் கட்டமைப்பில் இவ்வளவு பூஜை, ஹோமம், வழிபாடு, சம்பிரதாயம், சடங்கு என்பவை எல்லாம் ஏன்? இந்த கேள்வி புத்திசாலித்தனமாக புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆராய்ந்து பார்த்தால் அவை மிகத் தேவை என்பது புரியும்.
உதாரணமாக, பள்ளிகளில் சீருடை ஏன்? வேறு ஆடைகள் அணிந்தால் படிப்பு ஏறாதா என்று கேட்கிறோமா? கல்வி கற்கும் நேரத்தில் கவனம் சிதறாமல், அங்கே இருக்கும் எல்லாரும் சமம் என்ற மனோநிலையை – தாற்காலிகமாக – ஏற்படுத்துவதே அதன் நோக்கம். அதோடு சீருடை என்பது ஒரு அடையாளமாகவும் பெருமையாகவுமே பல இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.
அதேபோல சனாதன தர்மத்தின் செயல்பாடுகள் எல்லாம் பல காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்டன. மனதையும் புலன்களையும் கட்டுப் படுத்தவும், வாழும் நாளெல்லாம் இந்த மனிதப் பிறவியின் இலக்கு மோட்சமே என்பதை நினைவு படுத்தவும், இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழத் தூண்டுவதுமாக சநாதன தர்மம் இந்தச் செயல்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமாதக் குழந்தையிடம் உன் தந்தை இந்த மாநில ஆளுனர் என்று சொன்னால் புரியாது. (படித்த வளர்ந்த பலருக்குமே அவரது பதவியின் தேவை புரிவதில்லை என்பது வேறு). அந்தக் குழந்தைக்கு வெறும் அப்பாவாகவே அவர் அறிமுகமாகிறார். வளர வளர அந்தக் குழந்தை தனது தந்தையைப் பற்றி அறிகிறது. என்றாலும் அது முழுவதுமாக அறியுமா என்றால் அது சந்தேகமே. அதனைப் புரிய வைக்க மற்ற குடும்பத்தினரும், அலுவலகத்தினரும் பொது மக்களும் தேவைப் படுகின்றனர்.
அதேபோலத்தான் சனாதன தர்மத்தின் செயல்பாடுகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. மனிதப் பிறவியின் இலக்கு மோட்சம். அதற்கு நீ நல்ல கர்மாக்களை மட்டும் செய்து அவற்றின் பலனையும் துறக்க வேன்டும் என்று ஒற்றை வரியில் சொன்னால் யாருக்கும் புரியாது. அந்த நினைவை அதன் முக்கியத்தை தினசரி வாழ்க்கையில் இழையோட விட்டு, மனதினைப் பக்குவப் படுத்தினால் விவரம் தெரியும் வயதில் அதனை உணர்ந்து அந்த தர்மம் காட்டும் வழியில் செல்ல அறிவு விழையும், மனமும் ஒத்துழைக்கும்.
ஒரு கட்டிடம் கட்டும்போது முதலில் சாரம் கட்டப்பட்டு சுவர்கள் எழுப்பப்படும். மேற்கூரை கான்கிரீட் ஆனால் அதற்கு அடிப்பலகைகள் அமைக்கப்படும். நூறு வருடம் நிலைக்க வேண்டிய ஒரு வீட்டை இந்த சாரங்களும் அடிப்பலகைகளுமா தாங்கும். அவையெல்லாம் கட்டுமானம் நடக்கும் வரைதான். பின்னர் அவை நீக்கப் படும்.
அதே போலத்தான் சநாதன தர்மத்தின் செயல்பாடுகள் உண்டாக்கப் பட்டிருக்கின்றன. முதல் பார்வைக்கு மேலோட்டமாகப் பார்த்தால் இந்த சடங்குகள் எல்லாம் அர்த்தமற்றவையாகத் தெரியும். ஆனால் அவற்றை பயன்பாட்டில் கொண்டு வந்தால் அவற்றின் தாக்கம் தெரியும். நமது ஆன்ம பலம் எனும் வீடு கட்டி முடிக்கப் படும்வரை இவை தேவை, அதன்பின் தேவையில்லை என்பது தெளிவாகும்.
மனோ வாக் காயம் என்ற முறையே மனம் மொழி மெய் என்ற மூன்றையும் நம் வசப் படுத்தி நமது எண்ணம் பேச்சு செயல் என்ற எல்லாமே அறத்தின் வழியே மட்டுமே இருக்க வேன்டும் என்பதே இந்த சடங்குகளின் முக்கிய குறிக்கோள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று சுருக்கமாகச் சொல்லும் தமிழ்ப் பழமொழியே இதன் சான்று.
அது சரி, இந்த சடங்குகள் எல்லாம் மிகத் தொன்மையான காலத்தில் வகுக்கப் பட்டவை. இன்றைய நவீன விஞ்ஞான காலத்திற்கு அவை ஏற்புடையதல்ல என்று ஒரு வாதம் அடிக்கடி எழுகிறது. சநாதனத்தின் செயல்பாடுகள் எல்லாமே காலத்திற்குக் கட்டுப் பட்டவை அல்ல. ஏனெனில், அவை எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் பொருந்துபவையே. அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலும் அவற்றின் பயனைத் தெரிந்து கொள்ளாததாலும் அவை பழையவை என்ற அலட்சியத்தாலும் பொதுவாகவே பெருகி வரும் சோம்பேறித் தனத்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தாலும் மக்கள் இந்த சநாதன தர்மத்தின் செயல்பாடுகளைப் புறக்கணிக்கின்றனர். கேட்பதற்குச் சிறிது கடுமையாக இருந்தாலும் உண்மை அதுவே.
புறக்கணித்தவர் படும் பாடும், கோட்பாடு பழையதாய் இருப்பினும் அதன் பயன் நம் முன்னோர் சொல்லிவிட்டுச் சென்ற அனுபவத்தைத் தவறாது பின்பற்றி சின்னாபின்னமாகாத அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருபவரையும் கண்ணெதிரே பார்த்துக்ககொண்டி தான் இருகின்றோமே. என்ன படாடோபமான வாழ்க்கை இருக்காது இங்கே. இருக்கட்டுமே. மன அமைதி அதனால் த்ருப்திகரமான சந்தோஷமான சுகமான உடல் சுகத்துடன் வாழ்வது கிடைக்கின்றதே.
பழமையான தங்கம் தங்கம் தானே.
Leave a comment
Upload