தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 43- பரணீதரன்

2023101715094835.jpg 20231017151012330.jpg

சொல்லுக்குத் தான் எத்தனை வலிமை.

நமது பரணீதரனும் தயாராகி விட்டார். இந்த தலைப்பில் அலச.

அடுத்ததாக உயிர்காக்கும் சொற்களைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கின்றார்.

இனி வரும் சொல்கள் அவர் வசமிருந்து.

பொதுவாக நாம் ஒரு மொழியை பேசும்பொழுது நாம் கூற வேண்டிய விஷயத்தை பல நேரங்களில் வழ வழா கொழ கொழா என்று இழுத்துதான் பேசுவோம். சுருக்கமாக பேச வேண்டும் என்ற விஷயத்தை தற்போது உள்ள காலகட்டங்களில் பலரும் மறந்து விட்டனர். ஆனால் சொற்களை மிதமாக பயன்படுத்தி பல பேருடைய உயிரை காப்பாற்றிய சம்பவங்கள் நமது இலக்கியங்களில் உள்ளது.

உதாரணமாக கம்பராமாயணத்தில் “கண்டேன் சீதையை” என்று கூறி ராமரின் மனது துன்பத்தை ஒரு நொடியில் ஹனுமார் அழித்தார். சீதையைக் கண்டேன் என்று கூறியிருந்தாலும் அதனுடைய பொருளும் சரியாகவே இருந்திருக்கும். ஆனால் ‘சீதையை’ என்று அனுமார் கூறும் பொழுது ‘கண்டேன்’ என்ற வார்த்தையை சொல்வதற்கு முன்னால் சீதையை பார்த்தாரா பார்க்கவில்லையா என்று ஒரு குழப்பம் ராமருக்கு வந்துவிடும். அந்த குழப்பம் வராமல் இருப்பதற்காகத்தான் அவர் ‘கண்டேன்’ என்ற வார்த்தையை முதலில் கூறுகிறார். ஒரு நொடி குழப்பம் கூட தமது வார்த்தையால் வந்து விடக்கூடாது என்பதனை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். அதனாலேயே அவருக்கு சொல்லின் செல்வர் என்ற பெயர். அதேபோல் ராம நாடகத்தில் அருணாச்சலகவிராயர் பரதனிடம் அனுமார் ‘ராமர் வருகிறார்’ என்பதை கூறுவதை பாடலாக பாடியுள்ளார். “வந்தான் வந்தான் பரதா-ரகுராமன் வந்தான் வந்தான் பரதா” என்று ராமன் வந்தான் என்று கூறாமல் வந்தான் ராமன் என்று கூறுகிறார். ஒரு நொடி தாமதித்தாலும் பரதன் நெருப்பிற்குள் விழுந்து விடுவான் என்பதால் முதலில் வந்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தி அதன் பிறகு ராமன் என்று கூறுகிறார். இப்படியாக ஒரு சொல் சரியாக பயன்படுத்தப்பட்டால் பல நேரங்களில் உயிரை காப்பாற்றும். இதேபோல் பொது மொழி, இடக்கரடக்கல், மங்கலம் (கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - பகுதி 16) போன்று தகுதி வழக்குகளையும் நாம் சொல்லின் வலிமைக்காக பயன்படுத்துகிறோம்.

சொல்லின் வலிமையை கூறும் திருவள்ளுவரும்,

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்,

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

என்று கூறுகிறார். இதை காப்பாற்றவில்லை என்றாலும் நாவினை (சொல்லினை) காப்பாற்ற வேண்டும் (சரியாகப் பயன்படுத்த வேண்டும்). அப்படி பயன்படுத்தவில்லை என்றால் நமக்கு வாழ்வில் பிரச்சனைகள் வரும். அந்த சொல்லே நம்மை கொல்லும் என்றும் கூறுகிறார்.

தன்னுடைய நாவினை சரியாக பயன்படுத்தியதால் தான் அப்பர் பெருமானுக்கு திருநாவுக்கரசர் (திரு + நாவுக்கு (நாக்கிற்கு) + அரசர்) என்ற பெயரும் உண்டு. அதேபோல் வாதவூரர், மாணிக்கவாசகர் ஆனதும் சொல்லினால் தான். மாணிக்கம் போன்ற சிறந்த வாக்கினை உடையவர் என்பதே மாணிக்கவாசகர் என்று கூறுகிறோம்.

20231017151143400.jpg

வடமொழியிலும் சொல்லின் உடைய பலத்தினை நாம் பல இடங்களில் பார்க்க முடியும். மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரை வீழ்த்த முடியாத பாண்டவர்கள், தர்மபுத்திரர் வாயிலாக “அஶ்வத்தாமா ஹதஹ குஞ்ஜரஹ (அஶ்வத்தாமா ஹதஹ குஞ்சரஹ)” என்று கூறினர். அதாவது அஶ்வத்தாமன் இறந்தான், அது ஒரு யானை என்பது அதன் பொருள். இதில் அஶ்வத்தாமன் இறந்தான் என்பதை மட்டுமே துரோணர் கேட்டார். அது ஒரு யானை என்று தர்மபுத்திரர் கூறும் பொழுது கிருஷ்ணர் தன்னுடைய சங்கினை ஊதி அதைக் கேட்க விடாமல் செய்து விட்டார். இப்படி ஒரு சொல்லை வைத்தே ஒரு மாபெரும் வில்லாளியை, கௌரவர்களின் படைத் தளபதியை பலம் இல்லாதவர் ஆக்கிவிட்டனர்.

20231017151225429.jpg 20231017151301256.jpg

கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் தன்னுடைய அந்தப்புரத்தில் தன்னுடைய மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனைவியாகிய பட்டத்து ராணி தன்னுடைய தம்பியை ராயருடைய மஹா மந்திரியாக (பிரதம மந்திரி) வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டாள். எவ்வளவு எடுத்துக் கூறியும் ராணி கேட்டுக் கொள்வதாக இல்லை. அதனால் ராயரும் ஒரு பந்தயம் வைப்பதாகவும் அதில் அவளுடைய தம்பி வெற்றி பெற்றால் அவனை மஹா மந்திரியாக வைத்துக் கொள்வதாக கூறினார். அடுத்த நாள் காலையில் கிருஷ்ணதேவராயர் தன்னுடைய மைத்துனனையும், தன்னுடைய மஹா மந்திரியான அப்பாஜியையும் அழைத்து இருவர் கையிலும் இரண்டு பொட்டலங்களை கொடுத்தார். இருவரிடமும் அந்த பொட்டலங்களை எந்த காரணத்தைக் கொண்டும் திறந்து பார்க்கக் கூடாது என்றும் மைத்துனனை கன்னட தேசத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அப்பாஜியை தெலுங்கு தேசம் செல்ல வேண்டும் என்றும் கூறினார். அந்த தேசங்களில் உள்ள மன்னர்களிடம் இந்த பொட்டலங்களை கொடுத்து அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

இருவரும் தத்துமது விதிக்கப்பட்ட தேசங்களுக்கு சென்றனர். கன்னட தேசத்தில், கன்னட மன்னர் பொட்டலங்களை திறந்து பார்த்தார். அதில் சாம்பலும் முடியும் இருந்தது. அதைக் கண்டு கோபப்பட்ட கன்னட தேசர் இது என்ன என்று ராயரின் மைத்துனரிடம் கேட்டார். அதற்கு அவரோ உன் தேசத்தை என் மன்னன் சாம்பலாக்கி விடுவார் என்றும் உன் தேசம் இந்த முடிக்கு சமமானது என்றும் கூறினர். என்னுடைய அரசரின் ஆட்சிக்கு முன்னால் நீர் அரசர் என்று பெயர் வைத்துக் கொள்வதை விட இந்த சாம்பலை தொட்டு முடியை புடுங்கி உங்களுடைய வாழ்க்கையை வாழலாம் என்பதற்கு இந்த பொட்டலங்கள் அடையாளமாகும் என்றும் கூறினார். அதைக் கேட்டு கோவப்பட்ட கன்னட மன்னர் உடனடியாக தன்னுடைய படையை பெருக்கிக் கொண்டு விஜயநகர பேரரசின் மீது படை எடுத்தார். தூதுவனை கொல்லக்கூடாது என்ற அறம் இருந்ததால் ராயரின் மைத்துணனைக் கொல்லவில்லை.

அதே நேரத்தில் அப்பாஜி அவர்கள் தெலுங்கு தேசத்தில் இதே போன்றதொரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். தெலுங்கு மன்னர் பொட்டலத்தை பிரித்தவுடன் மிகுந்த கோபம் கொண்டார். அதை கண்ட அப்பாஜியோ, எங்கள் மன்னர் உலக நன்மைக்காக ஒரு பெரிய யாகத்தை செய்தார். அந்த யாகத்தினுடைய சாம்பல் தான் இது. அந்த யாகத்திற்கு பலி கொடுக்கப்பட்ட உயிரினங்களின் முடிதான் அது. உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நன்மை பயக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஹோம பிரசாதனங்களை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார் என்று கூறினார். அதை கேட்டு மகிழ்ந்த மன்னனும் அப்பாஜிக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் நிறைய பரிசு பொருட்களையும் மற்ற விஷயங்களையும் கொடுத்து கவுரவப்படுத்தி தன்னுடைய யானையின் மேல் அப்பாஜியை அமர வைத்து விஜய நகரத்திற்கு அனுப்பி வைத்தார்.

கன்னட படைகளை வெற்றி கொண்ட பின் கிருஷ்ணதேவராயர் தன்னுடைய மனைவியிடம் நடந்த அனைத்து விஷயத்தையும் கூறினார். விஷயத்தைக் கேள்விப்பட்ட மகாராணி தன்னுடைய தம்பிக்கு மஹா மந்திரி பதவி வேண்டும் என்று இனிமேல் கூறவே மாட்டேன் என்று கூறிவிட்டாள்.

இப்படி ஒரே செயலை ஒரு முட்டாளிடமும் ஒரு புத்திசாலியிடமும் கொடுத்தால், முட்டாள் தன்னுடைய சொல்லினால் கெடுவான். புத்திசாலி தன்னுடைய சொல்லினால் மேலும் புகழை அடைவான். இதுதான் சொல்லின் வலிமை.

இதை சொல்லிவிட்டு இதற்கு ஒரு அட்டவணைப் படத்தையே கொணர்ந்துவிட்டார் படிக்கும் வாசகர்கள் அவரைத் தெளிவாய்ப் பின்பற்றிட.

20231017151614900.jpg

சொல்லுக்குத் தான் எத்தனை வலிமை. அதனால் தான் கல்லடி பட்டாலும் படலாம் சொல்லடி மட்டும் படக்கூடாது என்று இதற்குத்தான் சொல்கிறார்களோ?!

தொடருவார் .....