தொடர்கள்
அரசியல்
ஃபிரான்சில் திருவள்ளுவர் சிலை - மாலா ஶ்ரீ

20230615072353795.jpg

பிரான்ஸ் நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக கடந்த 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். பாரீஸ் நகரின் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வரவேற்றார்.

பிரதமர் மோடி பேசுகையில், ‛‛பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை விரைவில் நிறுவப்படும். இது, இந்தியாவுக்கான பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ்தான். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட நமக்கு பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும்? இன்று உலகம் புதிய ஒழுங்கை நோக்கி நகர்கிறது. இதில் இந்தியாவின் பங்கும்கூட மிக வேகமாக மாறி வருகிறது. இந்தியா தற்போது G20 கூட்டமைப்பின் தலைமைத்துவ பாத்திரம் வகிக்கிறது. இந்தியாவில் சந்திரயான்-3 விண்கலம் இன்னும் சில மணி நேரங்களில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுகிறது.

பருவநிலை மாற்றம், தீவிரவாதம் அல்லது தீவிரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும், இந்தியாவையே உலகம் உற்றுநோக்குகிறது. நாம் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடமாட்டோம், நேரத்தை வீணாக விடமாட்டோம். எனது ஒவ்வொரு நொடியும் நமது நாட்டு மக்களுக்கானது எனத் தீர்மானித்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இந்தியர்கள் இனி பிரான்சில் UPI பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி, இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம். பிரான்சில் UPIஐப் பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டுள்ளன. இனி ஈபிள் கோபுரத்தில் இருந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாய்களில் கட்டணங்களை செலுத்த முடியும்!" என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு மோடியை அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிகர் மேக்ரானுடன் வரவேற்றார்.

பிரதமர் மோடியை அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு இருவரும் இரவு விருந்து வழங்கினர். பின்னர் பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் தனித்து பேசினர். இப்பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு தொழில், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்து, இரு நாடுகளும் பரஸ்பர ஒப்பந்தங்கள் மேற்கொள்ள தீர்மானித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023061507255349.jpg

பிரான்ஸ் நாட்டின் மிகவும் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்' விருதை பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வழங்கினார். இதன்மூலம் 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்' விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். பின்னர் பிரான்ஸ் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

இந்த 'கிராண்ட் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்' விருது, பிரான்ஸ் நாட்டின் சார்பில் ராணுவம் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் உயரிய விருதாகும். இதற்குமுன் இவ்விருதை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, மாஜி வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பட்ரோஸ் காலி ஆகியோர் பெற்றுள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது வழங்குவது இது முதன்முறையல்ல. இதற்கு முன், கடந்த சில மாதங்களில் எகிப்தின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல்', பப்புவா நியூ கினியாவின் 'கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு', பலாவ் குடியரசின் 'எபகல்' விருது, 'ஆர்டர் ஆஃப் தி 2021 விருது' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே பூடானின் 'டிரக் கியால்போ', அமெரிக்காவின் 'லீஜியன் ஆஃப் மெரிட்', பஹ்ரைனின் 'கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினாய்ஸ்சன்சன்', ரஷ்யாவின் 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ', ஐக்கிய அரபு எமிரேட்சின் "ஆர்டர் ஆஃப் சயீத்', பாலஸ்தீனத்தின் 'கிராண்ட் காலர்', ஆப்கானிஸ்தானின் 'காஜி அமீர் அமானுல்லா கான் ஸ்டேட் ஆர்டர்', சவுதி அரேபியாவின் 'ஆர்டர் ஆஃப் அப்துல் அஜிஸ் அல் சவுத்' போன்ற பல்வேறு உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார் எனக் குறிப்பிடத்தக்கது.

இந்த விருதெல்லாம் அவருக்கு பழகி போயிருக்கும்.

அவருக்கு வேண்டியதெல்லாம் இப்போதைக்கு அடுத்த வருடம் பொதுமக்களின் ஓட்டு தான் !!!!

மாலாஸ்ரீ