தொடர்கள்
ஆன்மீகம்
கல்லிடைகுறிச்சி குளத்தூரிலைய்யன் கோயில் கும்பாபிஷேகம்

20230614211707780.jpg

[பூரணா புஷ்களா சமேத குளத்தூரிலைய்யன் மூலஸ்தானம்]

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, ஸ்ரீ வராஹபுரம் தெருவில் இருக்கும் கரந்தையர் பாளயம் ப்ராம்மண சமூகத் தைச் சேர்ந்த ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் பூர்ணா புஷ்களை சமேத ஸ்ரீ குளத்தூரிலைய்யன், ஸ்ரீ பூதனாதர், ஸ்ரீ மஹாகணபதி, ஸ்ரீவிசாலாக்ஷி சமேத ஸ்ரீகாசி விஸ்வனாதர் முதலிய மூர்த்திகளுக்கு கடந்த வாரம் 5ஆம் தேதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

20230614214757498.jpg

[காசி விஸ்வனாதர் சன்னிதி]

20230614214938318.jpg

[அருள்மிகு விசாலாக்ஷி சன்னிதி]

ஜுன் 28 அன்று மிதுன லக்னத்தில் ஸ்தம்ப ப்ரதிஷ்டையுடன் ஆரம்பமானது கும்பாபிஷேக கோலாகலம்.

ஜூலை 2 அதிகாலை மகாகணபதி ஹோமம் நவகிரஹ ஹோமம், சுதர்ஷன ஹோமம், பசு, குதிரை மற்றும் யானைகளுக்கும் பூஜையிட்டு மற்றும் இதர அங்கங்களான பூஜைகளையும் செய்து யாகசாலை ப்ரவேசம் நடந்தேறியது. வேத பாராயணத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. இப்படியாய் அடுத்த இரு நாட்களிலும் நாளொன்றுக்கு வேத பாராயணங்களுடன் இரு கால பூஜைகள் பூரணாஹுதி தீபாராதனைகளுடன் நிறைவேறின.

ஜூலை 5ஆம் தேதி அதிகாலை ஆறாம் கால பூஜை பூரணாஹுதி தீபாராதனைகளுடன் நிறைவேறியபின் காலை ஆறரை மணிக்கு அனைத்து சன்னிதிகளுக்கான விமானகளுக்கு மேலே விவரிக்கப்பட்ட படி யாகசாலைகளில் ஆகம விதிகளின் படி இயற்றப்பட்ட ஆறுகால பூஜை, யாக சடங்குகள் மூலம் புனிதப்படுத்தப்பட்ட நீர்க் குடங்களினால் ஓரே நேரத்தில் ஒரு சேர அபிஷேகமும் கற்பூர ஆர்த்திகளும் நடந்தேறின. இந்தச் சிறப்பினில் உரிமையுடன் பங்கு பெற்று கண்டு களித்துக் கொண்டாடிட பூகோளங்களையும் மீறி வந்திருந்து நாற்புரமும் கூடியிருந்த அய்யப்ப பக்தர்களின் ஸ்வாமியே ஸரணம் அய்யப்பா என்ற சரண கோஷங்கள் விண்ணைப் பிளந்திட, தென் மலைத் தொடர்ச்சியின் குளு குளு மேகங்களின் சிறு சிறு மழைத் துளிகள் பெய்யத் தொடங்கி தொடர்ந்து வானவரும் கண்டு அமுத மழை பொழிந்தது இறை சாட்சியுடன் இவ்வைபவம் நடந்தேறியதைக் குறித்தது. விமானங்களை அபிஷேகம் செய்த புனித நீரும் வான் மழையும் கலந்து கோயிலைச் சுற்றி குழுமியிருந்த பக்தர்கள் மீதும் பொழிந்தன. இதனைத் தொடர்து அந்தந்த மூர்த்திகளின் மூலஸ்தானங்களுக்கும் புனித நீர் நிறம்பிய குடங்களினால் அபிஷேகம் நடந்தன. அலங்காரம் கற்பூர ஆராதனைகளை வேத விற்பன்னர்கள் முன்னின்று இயற்றிட கலந்துகொண்ட பக்தர்கள் பரவச நிலைக்கே வந்துவிட்டனர்.

முத்தாய்ப்பாய், வயது ஒரு வரம்பேயில்லையென வந்திருந்த பக்தர்கள் செண்டை மேளத்தின் வேகத்திற்கு பம்பரமாய் சுழன்று ஆடினர். இவ்விதமாய் 2003ம் ஆண்டிற்குப் பிறகு இந்த கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது. கிராமமே திறண்டு வந்து தன் வீட்டு கல்யாணத்தை நடத்திக் கொண்டது போன்றே இந்த ஆறு தினங்களும் வீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

இந்த கும்பாபிஷேக தினத்தன்றே நெல்லையில் அருகருகே இருந்த ஆயிரம் வருஷங்களுக்கும் குறையாத வயதுடைய கோயில்களில் குடமுழக்குகள் குதூகலமாய் நடந்தேறின என்று மலர் நாளிதழ்கள் பக்தியுடன் பரைசாற்றின. மாவட்டமே திரண்டிருந்து ஆன்மீகப் போர்வையில் தன்னை ஆரவாரித்து அணைத்திக்கொண்டது.

இந்த வைபவத்தின் நேரலயை இணைய தளத்திலும் பூகோளங்களைக் கடந்து வர இயலாதவர் கண்டு மகிழ்ந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என அறியப்படும் கிராமமே கரந்தையர் பாளையம். ஜீவநதியாம் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்த அழகிய கிராமம் இது. பொதிகை மலையின் அடிவாரத்தில் உள்ளது. ஊரின் வடப்புரம் கன்னடியன் கால்வாய் ஓடுகின்றது. நீர்வளம் நிலவளம் மிகுந்த ஊர். இவ்வூர் கரந்தை நகர், கரந்தாபுரி, தென்கரந்தை என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றது. தாமிரபரணி மஹாத்மியத்தில் இது சிலாசாலிபுரம் என்று வர்ணிக்கப்படுகின்றது.

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ அபினவ நரசிம்ம பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அருள் சுரந்து சூட்டிய நாமங்கள்: கல்யாணபுரி, அழகாபுரி, மற்றும் குபேரப்பட்டினம். இது தவிர, ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம், தென் பீடாகை, க்ஷத்ரிய சிகாமணிபுரம் சேரமான் வேளாகுறிச்சி என்றெல்லாம் கூட இந்த இடம் அறியப்படுகின்றது. ஆதி தெய்வம், ஸ்ரீதர்மசாஸ்தா பூர்ண புஷ்கலை சமேதனாக உருவமின்றி ஒரு அடியந்திரக்கல் பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டுள்ளார். அவரது திருநாமம் ஸ்ரீகுளத்தூரிலைய்யன்.

கோயில் மிகச் சாதாரண அமைப்பில் தான் இருக்கும். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கேற்ப இச்சாஸ்தாங்கோயில் அளவில் சிறியதாயினும், எத்தனையெத்தனையோ பெருமைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்த புராதனமான ஆலயம் கம்பங்குடி ஆலயம் எனவும் அறியப்படுகிறது என்றும் கம்பங்குடி பரம்பரையினருக்கு இவர் தான் குலதெய்வம் என்று பகிர்கிறார் திருநெல்வேலியில் உள்ள சாஸ்தா கோயில்கள் மற்றும் சாஸ்தா பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பல எழுதியும் இன்னும் எழுதியும் வரும் தற்போது கொல்கட்டாவில் வசித்துவரும் திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள்.

குறிப்பாக, இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை ஒட்டி தேஜோவதி என்ற தலைப்பில் சாஸ்த்தாவைப்பற்றி பல அரிய தகவல்களை தொகுத்து அளித்த நூல் 4ஆம் தேதி மாலை சூழ்ந்திருந்த பக்தர் முன்னிலையில் வெளியடப்பட்டது.

20230614212318749.jpg

20230614212250386.jpg

[புத்தகத்தின் பின்னட்டை]

இந்த புத்தகத்தை சந்தோஷ் என்ற பள்ளி ஆசிரியர் ஆய்வு செய்கிறார்.

20230614214140609.jpg

[மத்தியில் இருப்பவர் நூலாசிரியர் ரா. ராதாகிருஷ்ணன், தற்சமயம் கொல்கட்டாவில் வசிக்கிறார்]

தேஜோவதி என்பது சாஸ்த்தா வசிக்கும் பட்டினம். விஷ்ணுவின் உறைவிடம் வைகுண்டம், ஆதி சிவனாரின் கைலாசம் போன்றே சாஸ்த்தாவின் உறைவிடம் தேஜோவதி என்று கூறுகிறார் நூலாசிரியர். ஸ்ரீதர்ம சாஸ்தா பெயர்காரணம் என்ன? என்பதில் தொடங்கி அவரது வாசஸ்தலங்கள் பட்டாபிஷேகம், தேஜோவதியில் ஸ்ரீதர்மசாஸ்தா என்று விரிந்து, அய்யப்பனின் திருவாபரணங்கள், அவரது சைனியங்கள் பற்றி என 125 தலைப்புகளில் பற்பல அரிய தகவல்களைத் தொகுத்து கொடுத்திருக்கிறார். இதற்கென ஸ்ரீதர்ம சாஸ்தாவினைப்பற்றி புராணங்கள் மற்றும் அய்யனின் நேரடி அருள் பெற்ற கம்பங்குடி வம்சத்தினரின் பாடல்கள் ஆகியவற்றின் மேற்கோள்களையும் தந்திருக்கின்றார். இது ஸ்ரீதர்ம சாஸ்தா ஐய்யப்பன் பற்றிய ஒரு அகராதி என்றே சொல்லலாம். இந்த நூலைப் பற்றி அடுத்த இதழில் விவரிக்கின்றேன்.

2023061421382698.jpg

[கம்பங்குடி வம்சத்தினர் அமர்ந்திருக்கின்றனர்]

இப்பொழுதும், இக்குடும்பத்தினர் டில்லி, மும்பை, கொல்கத்தாட் கொச்சின் போன்ற பல இடங்களில் இனிதே வாழ்ந்து வருகின்றனர். பகவான் ஸ்ரீ தர்மசாஸ்த்தவினால் அருளப்பெற்ற ஸ்தானம் உடைய அக்குடும்பத்தின் ஆண்-பெண் யாராயினும் வந்தனத்திற்கு உரியவர்களாய் அய்யன் அடியார்களால் போற்றத் தக்கவர்களாய் இப்போதும் விளங்கி வருகின்றனர்.

பகவான் ஸ்ரீதர்ம சாஸ்த்தா மீதுள்ள தண்டகம் இந்த வம்சத்தினர் சம்பந்தமாகவும் கூறுகிறது என்றும், ஆரியங்காவு பஞ்சகத்தில் இக்குடும்பத்தினரின் பெருமைகளாக,

கருணாம்புதே உனது சரணாரபுஜங்களே

கதியென்று காத்திருக்கும் கம்பங்குடிக்கு

உடமை உன் பொன்னடிக்கு அடிமை

கண்டலிகிதப்படிக்கும்………

என்றும் பதிந்திருப்பதைப் பெருமையாகக் கூறும் இவரும் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே.

ஸ்ரீகுளத்தூரிலைய்யன் விருத்தம், “கம்பங்குடிக்கு உடைமை உன் பொன்னடிக்கு அடிமை என்று சாசனம் செய்தாய் இல்லையோ” இந்த குடும்பத்தின் பெருமையை விவரிக்கின்றது.

தாழைமங்கலம் தந்திரி (சபரிமைல மேல்ஷாந்தி), ”என்றைக்கும் ஸ்தானம் கம்பங்குடிதன்னை” என்றுள்ளார்.

இத்தகு பெருமை படைத்த கம்பங்குடி பரம்பரையினரின் குலதெய்வம்மே கரந்தையர் பாளையத்தில் குடி கொண்டு அருள்பாலித்திடும் ஸ்ரீகுளத்தூரிலைய்யன்.

இந்த கோயில் சுமார் ஆயிரம் வருடங்களாக உள்ளது. ராஜாக்களின் உபயம் பற்றிய விவரம் தெரியவில்லை. ஆயினும் கம்பங்குடி வம்சத்தினரின் ஆதரவினால் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.