சக்தி வழிபாடு என்பதே மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இருளையெல்லாம் விலக்கும் ஒளியெனத் திகழும் காளிகாம்பாள் கோயில், சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று. ஒருகாலத்தில், கோட்டைப் பகுதியில்
இருந்ததால் இவருக்கு கோட்டையம்மன் என்ற பெயரும் இருந்ததாகச் சொல்கிறார்கள். நகரத்தின் காவல் தேவதையாக வணங்கப்படுகிறார்.
இங்கே அன்னை காமாட்சியே காளிகாம்பாளாக மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வீற்றிருக்கிறார். திருவடியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சக்கரம் அர்த்தமேருவாக அமைந்துள்ளது.
இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
காளியானவர் எப்போதுமே எல்லா இடங்களிலும் உக்கிரத்துடன் இருப்பார், ஆனால் இங்கே உள்ள காளிகாம்பாள், சாந்த சொரூபியாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
“ஜெய் காளி” என்று சத்ரபதி சிவாஜி 1677ம் வருடம் இந்தக் கோயிலில் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதேபோல மகாகவி பாரதியார் “சுதேசமித்திரனில்” வேலை பார்த்த போது அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வந்து காளிகாம்பாளை வந்து வணங்குவார்.
புராணங்களில் காளிகாம்பாள் கோயில்:
ஒருகாலத்தில் பரதபுரி என்றும் ஸ்வர்ணபுரி என்றும் பெயர் கொண்டதாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளது. இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் வழிபட்டு அம்பிகையின் அருள் பெற்ற தலம் என்கிறது ஸ்தல புராணம். வருண பகவானும் பராசரரும் இங்கே தவமிருந்து வணங்கி மகாசக்தியை ஆராதனை செய்திருக்கிறார்கள். வியாசர், அகத்திய மாமுனிவர், ஆங்கீரசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாகப் பெற்றிருக்கின்றார் என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்தல சிறப்பு:
ஆதிசங்கரர் இங்கே வந்து, ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அருளியுள்ளார். காளிகாம்பாளின் தேரும் ஸ்ரீசக்ரத் தேராக அமைந்துள்ளது. சக்ரராஜ விமானம் என்று சொல்லப்படும் இந்தத் தேர், கிண்ணித் தேர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கிண்ணித் தேர் போல வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.
சத்ரபதி சிவாஜி. 1677-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் எனக் கோயிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்க் கவிஞர் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கி இருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவார்.
யாதுமாகி நின்றாய் -காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம்--காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் --காளி
பொறிக ளைந்து மானாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
என்ற அவரது பாடலில் வருவதும் இந்த காளிகாம்பாள்தான்.
ஆண்டவன் பிச்சி என்பவர் 1952 ஆம் ஆண்டு “உள்ளம் உருகுதையா” என்ற பாடலை, காளிகாம்பாள் கோயிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து எழுதிப் பாடியுள்ளார்.
ஸ்ரீசக்ரநாயகியான காளிகாம்பாளைப் பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் இங்கு வந்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இக்கோயிலில் கொடுக்கப்படும் குங்குமப்பிரசாதம் வாழ்வில் உயர்வும், மோட்சமும் அளிக்கக்கூடியது.
ஸ்தல வரலாறு:
காளிகாம்பாள் கோயில் சுமார் மூவாயிரம் ஆண்டு பழமையானது. இக்கோயில் முதலில் இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிருக்கும் இடத்தில் கடல் கரைக்கு அருகில் அமைந்திருந்தது. அப்போது கோட்டையம்மன் என்றும் சென்னியம்மன் என்றும் பக்தர்கள் அழைத்து வணங்கினார்கள்.
1640ல் ஆங்கிலேயர்களின் காலத்தில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியபோது கடற்கரையிலிருந்து தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போதுள்ள கோயிலை 1640-ம் ஆண்டு முதல் விஸ்வகர்மா குலத்தவரால் இன்றுவரை சிறப்பாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
கோயில் அமைப்பு:
காளிகாம்பாள் கோயில் நான்கு நிலை இராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயில் தம்புச்செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.
கோயில் நுழைவாயிலில் கொடிக் கம்பத்தின் கிழக்கே காளிகாம்பாள் கருவறையில் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளார். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் நீலோத்பலமலரும், இடது கீழ் கையை அருள்பாலிக்கும் விதமாக அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகின்றார். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அர்த்த பத்மாசனத்தில் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறார். சோமன், சூரியன், அக்னி என்று முக்கண் கொண்ட சாந்தமே உருவாய்த் தோற்றமளிக்கிறார். காலடியில் ஸ்ரீ ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட அர்த்தமேரு உள்ளது
காளிகாம்பாள் திருவடியில் பிருங்கி முனிவரின் கொள்ளுப் பேரனான ஸ்ரீவிராட் விஸ்வபரப் பிரம்மத்தின் மூன்று தலைகள் (திரிசிரம்) செதுக்கப்பட்டுள்ளன. காளிகாம்பாள் சந்நிதி யின் முன்னால் பன்னிரண்டு கால் மண்டபம் உள்ளது.
இந்த கோயிலில் இரு பிரகாரங்கள் உள்ளன. உட்பிரகாரத்தில் அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீ துர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கே உள்ள ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதியும் ஸ்ரீமுருகப்பெருமான் சந்நிதியும் விசேஷமானது. மேற்கே உற்சவர் மண்டபத்தில் பெரியநாயகி என்ற பெயரில் உற்சவர் காளிகாம்பாள் லக்ஷ்மியும் சரஸ்வதியும் வலப்பக்கமும் இடப்பக்கமும் நிற்கச் செல்வமும் கல்வியும் ஒருங்கே அளிப்பவள் என்பதற்கு விளக்கமாகப் பொலிவுடன் காட்சி அளிக்கின்றார்.
இத்தலத்தின் ஸ்தல விருட்சமாக மாமரம் உள்ளது. தீர்த்தம் கடல் நீர்.
வழிபாட்டுப் பலன்கள்:
காளிகாம்பாள் கோயிலுக்கு நம்பிக்கையுடன் வந்து வழிபடும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சந்ததியைப் பெறுவார்கள். திருமணத் தடைகள் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றும் கலைத்துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கும் இக்கோவில் அருள் செய்கின்றது. நல்ல ஆரோக்கியமும் மன அமைதியும் கிடைக்கின்றது.
திருவிழாக்கள்:
காளிகாம்பாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் தமிழ் மாதமான வைகாசியில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் தனிச்சிறப்பு ஒன்பதாம் நாள் இரவில் வெண்கலக் கிண்ணிகளால் நிறைந்திருக்கும் திருத்தேர். இங்கு ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவராத்திரி நாட்களில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். மற்றும் ஆருத்ரா தரிசனம், மாசி மகம், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை: காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை: மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயிலுக்குச் செல்லும் வழி:
விமானம் மூலம்:
சென்னை விமான நிலையம் காளிகாம்பாள் கோயிலிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் டாக்ஸி அல்லது ஆட்டோ மூலம் இந்த கோவிலுக்கு எளிதாகச் செல்லலாம்.
இரயில் மூலம்:
சென்னை கடற்கரை ரயில் நிலையம் காளிகாம்பாள் கோயிலிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.
பேருந்து மூலம்:
சென்னை எழும்பூர், மாம்பலம், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர் போன்ற இடங்களிலிருந்து காளிகாம்பாள் கோயிலுக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன.
வாழ்வில் உயர்வு தரும் சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கிற சக்தி மிக்க காளிகாம்பாளைத் தரிசிப்போம்!!
ஓம் சக்தி.. பராசக்தி…
Leave a comment
Upload