சொற்கள் பற்றிய கேள்வி-பதில் அமர்வு தொடர்கிறது.
அடுத்த கேள்வியாக,
வடமொழி கலவையில் வந்த சில முக்கிய சங்க கால இலக்கியங்களைப் பற்றி கூறுங்களேன். எந்தெந்த இடங்களில் அந்த கலவைகள் நிகழ்ந்துள்ளன? சீர்கள் தப்பாதா?
என்று முன்வைக்க,
பரணீதரன், "நான் முன்பே கூறியிருந்தது போல சங்க கால இலக்கியங்களில் பல நூல்களில் வடமொழி சொற்கள் உள்ளன. வேர் சொல்லிற்கான இலக்கணம் தொல்காப்பியத்திலோ, நன்னூலிலோ அதற்கு பின்வந்த இலக்கண நூல்களிலோ கிடையாது. 1970களில் இதற்கான ஆராய்ச்சிகள் ஈடுபடப்பட்டு பல வடமொழிச் சொற்களை தமிழ் சொற்கள் என்று அப்பொழுது இருந்த நமது அறிஞர்கள் கூறினார்கள். அதை வைத்து தான் நாம் பல வடமொழிச் சொற்களை தமிழ்ச் சொற்கள் என்று கூறுகிறோம். ஆனால் அந்த காலத்தில் வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் மிகுந்த வேறுபாடுகளோ அல்லது சண்டை சச்சரவுகளுடன் கிடையாது. ஒரு வடமொழிச் சொல்லை தமிழ் மொழியாக மாற்ற வேண்டுமென்றால் அது தற்சமம் அல்லது தற்பவம் ஆகிய இலக்கணத்திற்கு கீழ் வரவேண்டும் என்று தொல்காப்பியரே கூறுகிறார். இப்படியாக மாற்றம் பெற்ற பல சொற்கள் தமிழ் மொழியிலும் சங்க இலக்கியங்களிலும் உள்ளது. கம்பராமாயணத்தில் உள்ள அனைத்து பெயர்களையும் கம்பர் அவர்கள் தற்பவம் இலக்கணத்தின்படி தமிழ் படுத்தி உள்ளார். எடுத்துக்காட்டாக ராமன் என்பதை இராமன் என்றும் லக்ஷ்மணன் என்பதை இலக்குவன் என்றும் சீதா என்பது சீதை என்றும் ஹனுமன் என்பதை அனுமன் என்றும் இன்னும் பலருக்கு பெயர்களை தமிழில் மாற்றம் செய்து உள்ளார். அதேபோல் வில்லி பாரதத்தில் கர்ணன் என்ற பெயரினை வில்லிபுத்தூரார் அவர்கள் கன்னன் என்று தமிழ் படுத்தியுள்ளார். அதேபோல் பல ஆன்மீக தலங்களுக்கு வடமொழியில் உள்ள பெயரும் தமிழ் மொழியில் உள்ள பெயரும் ஒன்று போலவே இருக்கும். எடுத்துக்காட்டாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவரங்கம், மதுரா மற்றும் வடமதுரை. இதேபோல் பல பெயர்களை தமிழ் மற்றும் வடமொழியில் பொருள் மாறாமல் அப்படியே நம்மால் உருவாக்க முடியும். உருத்திரம்கண்ணனார் என்ற தமிழ் புலவருக்கு ருத்ராட்சர் என்ற வடமொழிப் பெயர் இருந்ததாக கூறுகிறார்கள். இளங்கோ மற்றும் யுவராஜ் போன்ற பெயர்களும் பொருளினை ஒன்று போலவே கொடுக்கிறது. வந்தே மாதரம் என்கிற பங்கின் சந்தர் சட்டர்ஜி எழுதிய வங்காள மொழிப்பாடல் முழுவதுமே வடமொழி பெயர்களை வைத்தே வந்துள்ளது. அவற்றினை நாம் தமிழ் படுத்தி பார்த்தால் நம்மிடமும் அந்த பெயர்கள் அப்படியே இருக்கிறது. எடுத்துக்காட்டாக மதுர பாஷனி என்பதற்கு தேன்மொழி என்று பொருள். அதேபோல் மதுரவல்லி என்ற பெயருக்கு தேன்கொடி என்று பொருள். இப்படி நாம் இரண்டு மொழிகளுக்கும் பொதுவான பல பெயர்களை பார்க்க முடியும். அதேபோல் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் நாயன்மார்கள் பாடிய தேவாரம் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களிலும் நிறைய வடமொழிச் சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஸ்ரீராமன் என்பதை குலசேகர ஆழ்வார், சீராமன் என்று பாடியிருக்கிறார். அதேபோல் வேதாரண்யம் என்று இன்று அழைக்கப்படும் திருமறைக் காட்டினை திருமறைக்காடு என்றே தேவாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. முன்பே நான் கூறியிருந்தது போல திருக்குறளில் கூட சில வட சொற்கள் உள்ளன என்பதை போனவாரம் பார்த்தோம். இதுபோல பல சங்க இலக்கியங்களில் பத்திலிருந்து பதினைந்து சொற்கள் பொதுவாக வட சொற்கள் உள்ளன. ஒரு வடமொழிச் சொல்லை தமிழ் படுத்தும் பொழுது அதனுடைய சீர் அசை தளை போன்றவை சரியாகிவிடும். எடுத்துக்காட்டாக
பெருமாள் திருமொழி
கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு
தரவு கொச்சக் கலிப்பா
மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே,
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய், செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே,
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்,
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா!தாசரதீ!
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே,
எங்கள்குலத் தின்னமுதே! இராகவனே!தாலேலோ
சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே,
அற்றவர்கட் கருமருந்தே! அயோத்திநகர்க் கதிபதியே,
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே,
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா!தாலேலோ
மேலே உள்ள செய்யுளில் தனியாக தெரியக்கூடிய சொற்கள் அனைத்தும் வடமொழிச் சொற்களே. ஆனால் அதனை தமிழ் படுத்தியதால் தரவு கொச்சகக் கலிப்பாவிற்குள் ஆழ்வாரால் இதனை கொண்டு வர முடிந்தது. இப்படி வடமொழிச் சொற்களை தமிழ் படுத்தும் பொழுது அவைகள் தமிழ் இலக்கணத்திற்கு உள்ளேயே உட்பட்டு வரும்.
தமிழ் சொற்களில் எந்தெந்த சொற்கள் மந்திரச் சொற்களாக பாவிக்கப்படுகின்றன?
நான் முன்பே கூறியிருந்ததைப் போல கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மற்றும் பல்வேறு விதமான கவசங்கள், பந்தங்கள், சித்திரக்கவிகள் போன்றவை மந்திரச் சொற்களாகவே பாவிக்கப்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு கடவுள் அதிபதியாக இருப்பதாகும் நம்முடைய மந்திர சாஸ்திரங்கள் கூறுகிறது. இவற்றைப் பற்றி நாம் முன்பே பார்த்திருப்பதால் இன்று வேறு சில விஷயங்களை இங்கு பார்ப்போம். பொதுவாக பந்தங்கள் மற்றும் கவசங்கள் ஒரு விஷயத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்படுபவை. இன்று பல்வேறு கோவில்களில் பார்க்கக்கூடிய ரதபந்தம், நாக பந்தம் போன்றவை இப்படிப்பட்ட தான மந்திர சொற்களும் எழுத்துக்களுமே ஆகும். ஒருவரை நன்றாக இரு என்று பாடுவதற்கும் நாசமாக போ என்று பாடுவதற்கும் அந்த காலத்தில் அரிகண்டம், முடிகண்டம், எமகண்டம், அறம் வைத்து பாடுதல் (நந்திக் கலம்பகம் போன்ற செய்யுள்கள்) போன்ற பல விஷயங்களை செய்துள்ளனர். அது போல குறிப்பிட்ட சில விஷயங்களை பாதுகாப்பதற்காகவும் இந்த பந்தங்களை உருவாக்கியுள்ளனர். இவற்றில் சில எடுத்துக்காட்டுகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். நாம் யாப்பிலக்கண பகுதிகளை பார்க்கும் பொழுது இவற்றைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.
தொடரும்.....
Leave a comment
Upload