தொடர்கள்
பொது
புகார் சொல்லுவியா ?? - மாலா ஶ்ரீ

2023061506530351.jpg

தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாக ஏராளமான புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு நகரம், வேதாசலம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பட்டப்பகலில் ஒவ்வொரு குவார்ட்டர் மதுபாட்டிலுக்கும் விற்பனையாளர் கூடுதலாக ₹10 விலை வைத்து விற்பனை செய்துள்ளார். இதற்கு மதுபிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்‌.

இதில் ஒரு மதுபிரியர், அங்கு வந்த செங்கல்பட்டு நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜாவிடம் புகார் தெரிவித்தார். அவர் என்ன ஏதென்று விசாரிக்காமலேயே புகார் கூறிய மதுபிரியரின் கன்னத்தில் சரமாரியாகத் தாக்கினார். இதைத் தட்டிக் கேட்டவர்களையும் ஏஎஸ்ஐ ராஜாவும் போலீசாரும் லத்தியால் தாக்கி விரட்டியடித்தனர்.

ஒருசிலர் இக்காட்சிகளைத் தங்களின் செல்போன்களில் வீடியோவாக படம்பிடித்து, பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இவை தமிழகம் முழுவதிலும் வைரலாகப் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதோடு, 'டாஸ்மாக்கில் ₹10 கூடுதல் விலையில் விற்பனை செய்வதாகப் புகார் அளித்த நபர்மீது தாக்குதல் நடத்த போலீசாருக்கு யார் அதிகாரம் அளித்தது?' என பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்த வீடியோ மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் கடந்த 12-ம் தேதி மதுபிரியரின் கன்னத்தில் சரமாரி தாக்கிய செங்கல்பட்டு நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜா அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவல் உதவி ஆய்வாளர் ராஜாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மதுப்பிரியர் என்ற வார்த்தையை விகடகவி விரும்பி உபயோகிக்கவில்லை. குடிகாரான் என்பதை தான் வேண்டா வெறுப்பாக இப்படி குறிப்பிட வேண்டி இருக்கிறது. கஷ்டகாலம். வேறென்ன ??