பெருநகர்- ஆயிரம் குடிக்கொண்ட பெருநகர் என்று முன்னாளில் அழைக்கப்பட்டு வந்த இவ்வூர்......
பெருநகரில் - சமூக, பண்பாட்டு நிலை ஆயிரம் குடிக்கொண்ட பெருநகர் என்று முன்னாளில் அழைக்கப்பட்டு வந்த இவ்வூரில் தற்போது பல்வேறு சமூக இன மக்கள் வாழ்ந்தாலும், அவர்களிடையே ஒற்றுமையும், அமைதியும் நிலவி வருவதைக் காணமுடிகிறது. இயற்கை சூழலோடு இன்பமான வாழ்க்கையை நடத்தி வரும் இவ்வூர் மக்களின் சமூக, பண்பாட்டு நிலை பற்றி அறிவது அவசியமாகிறது.
சமுதாய நிலை
பெருநகரில் - சமூகப் பிரிவுகள்
பெருநகரில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பிரிவுகள், பின்வருமாறு:
பிராமணர்:
பெருநகரில் முன்னர் ஏராளமான பிராமணர்கள் வாழ்ந்தார்கள். தற்போது இவர்கள் இரண்டு தெருக்களில் ஆறு குடும்பங்களில் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிராமணர்களை, குருக்கள், பட்டாச்சாரியார்கள் என்று அழைத்து வருகின்றனர். குருக்கள் எனப்படும் சிவபிராமணர் சிவன் கோயிலில் பூசை செய்கிறார். பட்டாச்சாரியார் என்ற பிராமணர் பெருமாள் கோயிலில் பூசை செய்கிறார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி காணப்படும் இவர்கள் கோயிலில் பூசை செய்வதோடு பஞ்சாங்கம், ஜோதிடம் பார்த்தல் போன்ற தொழில்களையும் செய்து வருகின்றனர்.
உபநயனம்
எல்லா பிராமணச் சிறுவர்களுக்கும் பூணூல் அணி வித்தல் பிராமணர்களிடையே முக்கிய சடங்காக நடைபெறுகிறது. இதை அணிவித்த பின்பே அவன் ஒரு முழுமையான பிராமணன் என்று கருதப்படுகின்றான். இப்புரிநூல் ஒவ்வொரு ஆவணி அவிட்டத் தன்றும் மாற்றப்படுகின்றது.
சைவ வேளாளர்
பூர்வீக குடிகளான இவர்கள் முதலியார் என்ற பிரிவைச் சார்ந்தவர்களாக உள்ளனர். ஆரம்ப காலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றி வந்த இவர்கள் பிற்காலத்தில் சைவர்களாக மாற்றப் பட்டனர். இங்குள்ள சமுதாய அமைப்பில் உயர்ந்த இடத்தில் உள்ள இவர்கள், ஆறு தெருக்களில் 60 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். சைவ உணவை உட்கொள்ளும் இவர்கள் சிவனை வழிபடுகின்றனர். திருமணம் எளிமையாக நடைபெறுகின்றன. கோயிலோடு கலந்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் சைவ வேளாளர்கள் இறை நேச செல்வர்களாகவும், நிலவுடமையாளர்களாகவும் உள்ளனர்.
கைக்கோளர்கள்
செங்குந்த முதலியார் என்று அழைக்கப்படும் கைக்கோளர்கள் இவ்வூரின் பூர்வீக குடிகள் என்பதையும், இவர்கள்தான் ஆரம்பகாலத்தில் இங்குள்ள கோயிலை நிர்வகித்து வந்தனர் என்பதையும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். கோயிலுக்கு எதிரே கைக்கோளர்களுக்கு என்று தனியாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டதை ஒரு கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது (358/1923). இவர்கள் செய்து வந்த நெசவுத் தொழிலுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதையும், இவர்கள் கோயிலுக்கு தானங்கள் அளித்ததையும் மற்றொரு கல்வெட்டு மூலம் அறியலாம் (358, 372/1923).
செங்குந்தர் என்பது ஒன்பது வீரர்கள் ஏந்திய வாளின் பெயர் என்றும், இவர்கள் கையினால் நெய்யப்படும் நெசவுத் தொழிலைக் குறிக்கும் என்றும் இதற்கு இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
தற்போது பெருநகரில் இந்த கைக்கோளர்கள் மூன்று தெருக்களில் சுமார் 100 குடும்பங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் நெசவுத் தொழிலை செய்து வந்தாலும், விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுள்ள இவர்களின் திருமணம் எளிமையாக நடை பெறுகின்றன.
முத்தரையர்
இவர்கள் பெருநகருக்கு எப்போது வந்தார்கள் என்பது தெரியவில்லை. இவர்களில் ஒரு சிலர் தெலுங்கும், ஒரு சிலர் தமிழும் பேசுகின்றனர். இவ்வூரில் முத்தரையர்கள் 20 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் திருமணத்தின் போது புரிநூல் அணிகின்றனர்.
செட்டிகள்
வாணியச் செட்டிகள் என்று அழைக்கப்படும் இவர்கள் இவ்வூரில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் இருந்துள்ளனர் என்பதை ஒரு கல்வெட்டு சான்று பகிர்கின்றது (352/1923). ஆனால் தற்போது ஒரே ஒரு வணிக செட்டி தான் வாழ்ந்து வருகிறார்.
ஆசாரிகள்
பூர்வீகக் குடிகளான இவர்கள் தச்சுத் தொழிலை செய்து வருகின்றனர். தற்போது மூன்று குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இவர்கள் சிவனை வழிபட்டு வருகின்றனர்.
யாதவர்கள்
பூர்வீகக் குடிகளான யாதவர்கள் இரண்டு தெருக்களில் 60 குடும்பங்களில் வாழ்ந்து வருகின்றனர். பிள்ளை என்று அழைக்கப்படும் இவர்கள் கிருஷ்ணனை வழிபடுகின்றனர்.
மீனவர்கள்
பிற்காலத்தில் வந்து குடியமர்ந்த இவர்கள் 16 குடுமபங்களாக மீனவர் தெருவில் வசித்து வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மீன் பிடித்தலை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
பண்டாரம்
இங்குள்ள பண்டாரம் கிராம தேவதைகள் கோயிலுக் பூசை செய்து வருகின்றனர்.
பிற சமூகத்தினர்
பெருநகரில் மேற்குறிப்பிட்ட சமுதாய பிரிவுகள் தவிர ஆதி திராவிடர், வன்னியர், நரிக்குறவர், நாவிதர் போன்றோரும் வசித்து வருகின்றனர்.
பெண்கள் நிலை
சமுதாயத்தில் ஆண்களே குடும்பத்தலைவராக உள்ளனர். பொதுவாக பெண்கள் சமுதாயத்தில் உயர்நிலையில் வைத்து போற்றப்படுகின்றனர். பெண்கள் கல்விக்கற்க, வேலைக்கு செல்ல அனுமதிக்கும் அதே நேரத்தில் சொத்தில் உரிமை கோர அனுமதிப்பதில்லை. ஒரு சிலர் மட்டும் விதவை மறுமணத்தை ஆதரிக்கின்றனர்.
நன்றி: அ. ரஷீத் கான், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.
(தொடரும்)
-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)
Leave a comment
Upload