சக்தி முத்திரை
எந்த செயலையும் செய்வதற்கு சக்தி தேவை. ஒரு விரலை அசைக்க வேண்டுமென்றால் கூட சக்தி வேண்டும் அல்லவா? நமது உடல் எண்ணற்ற உயிரணுக்களால் ஆனது. ஒவ்வொரு உயிரணுவும், தன் சக்தியை மேம்படுத்திக்கொள்ள உதவும் முத்திரை, இந்த சக்தி முத்திரை.
பொதுவாக முத்திரைகளைச் செய்யும்போது, முதுகை நிமிர்த்திய நிலையில் வைத்தபடி, தரையில் விரிப்பின் மேலோ அல்லது நாற்காலியில் கால்பாதங்கள் தரையில் பதிந்தபடி அமர்ந்தவாரோ உணவிற்கு முன்பு செய்யவேண்டும் என்பது நமக்கு தெரிந்ததே.
இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்ப்போம். இரு கைகளிலும் பெருவிரலை உள்ளங்கைக்கு கொண்டு வரவேண்டும். பிறகு பெருவிரலை ஆள்காட்டி விரலாலும், நடு விரலாலும் லேசாக அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கையின் சுண்டு விரல் நுனி, அடுத்த கை சுண்டு விரல் நுனியோடும், அதேபோல ஒரு கையின் மோதிர விரல் நுனி, அடுத்த கை மோதிர விரல் நுனியோடும் படத்தில் காட்டியபடி வணக்கம் செய்வது போல தொட வேண்டும். இதை நெஞ்சுக்கு நேராக வைத்து செய்ய வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற இடுப்புவலி, முதுகுவலி, அடிவயிறுவலி போன்றவைக்கு இந்த முத்திரையை மாதவிடாய் காலத்திற்கு ஒரு வாரம் முன்பு காலையிலும், மாலையிலும் 20 நிமிடங்கள் செய்தால், வலிகள் வராது. வலியின் போதும், உடனடியாக பலன் பெற இதை சிறிது நேரம் செய்யலாம். சில நிமிடங்களிலேயே வலி தீர்ந்து விடும்.
பொதுவாக மாதவிடாய் சமயங்களில் முத்திரைகள் செய்யாமல் இருப்பது நலம். ஆனால் இந்த முத்திரையை செய்யலாம்.
ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கமாவதால், சிறுநீர் சீராக வராது. விட்டு விட்டோ அல்லது சொட்டு சொட்டாகவோ வரும். சிகிச்சை செய்து கொள்வதுடன், இந்த முத்திரையை தினமும் 10 நிமிடங்கள் செய்துவந்தால் சிறுநீர் சரியாக போகும். புரோஸ்டேட் வீக்கமும் சரியாகி விடும்.
சிலருக்கு உடல் வெப்பம் அதிகமாகி அடி வயிறு இழுத்துப் பிடித்தாற் போல் இருக்கும். அப்போது இம்முத்திரையை செய்வதால், அடி வயிறு மற்றும் கீழ்முதுகு இறுக்கங்கள் தளர்ந்து விடும்.
தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு வரமாயிருப்பது இம்முத்திரை. படுக்கையில் தூங்குவதற்கு முன்னர் சிறிது நேரம் இதை செய்து விட்டு படுத்தால், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.
வாயில் அதிகமாக உமிழ் நீர் சுரத்தல் அல்லது சுரப்பதைப் போல் உணர்தல் ஆகியவற்றிற்கு இம்முத்திரை வெகுவாக பலனளிக்கும்.
இதை பயிற்சி செய்வதால் கிடைக்கும் மற்ற பலன்கள் - நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பெருகும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். மனம் சாந்தமடையும்.
இதை தினசரி 10 நிமிடங்கள் செய்வதால் ஒட்டுமொத்த உடலும் முழு சக்தியுடன் இயங்கும். இந்த அற்புத முத்திரையைச் செய்து வேண்டிய சக்தியையும், மற்ற பலன்களையும் பெற்று நலத்துடனும், வளத்துடனும் வாழ்வோம்.
- தொடரும்
Leave a comment
Upload