தொடர்கள்
பொது
நீராவி இன்ஜின் வடிவில் சொகுசு சுற்றுலா ரயில்!--மாலாஸ்ரீ

20230614175356235.jpg

இந்தியாவின் ராஜஸ்தான் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் இருக்கும் பல்வேறு பாரம்பரிய தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில், பழங்கால அரண்மனை வடிவில் நவீன சொகுசு வசதிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் அதிக டிக்கெட் கட்டணம் என்றாலும், உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் குறைந்தளவு தான் பயணிகளை அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு இதுவரை தென்னக ரயில்வே சார்பில் புதிய நவீன சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிடவோ அல்லது அனுமதியோ வழங்கவில்லை என சுற்றுலா பயணிகளிடையே நீண்ட காலமாக ஆதங்கம் இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் தென்னக ரயில்வே சார்பில் புதிதாக அக்கால பாரம்பரிய நீராவி ரயில் இன்ஜின் வடிவில் சொகுசு இருக்கை, படுக்கை வசதி மற்றும் உணவகத்துடன் கூடிய சுற்றுலா ரயிலை உருவாக்கியுள்ளது. இந்த சொகுசு சுற்றுலா ரயில், கடந்த 9-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கடைசி பிளாட்பாரத்தில் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னையில் ஒரு தனியார் கல்லூரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்திருந்தார். இதன் நடுவே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பாரம்பரிய நீராவி இன்ஜின் வடிவிலான மின்சார சுற்றுலா ரயிலில் ஏறி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அந்த ரயிலில் சுற்றுலா பயணிகளுக்கான நவீன சொகுசு வசதிகள் குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "தென்னக ரயில்வே சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட நீராவி இன்ஜின் வடிவிலான மின்சார சுற்றுலா ரயில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும். பண்டைய பாரம்பரியத்தை, புதிய நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சுற்றுலா ரயிலை திருச்சி பொன்மலை பழங்கால நீராவி ரயில் இன்ஜின் பணிமனை, ஆவடி மின்சார ரயில் பணிமனை மற்றும் ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலை ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

முதலில், இந்த சுற்றுலா ரயில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும். பின்னர் பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்டதும், இந்த பாரம்பரிய சுற்றுலா ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், வர்த்தரீதியாக நீராவி ரயில் இன்ஜினை இயக்குவதற்கு ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

தற்போது ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்துக்கு ₹6080 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு புதிய ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள 90 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. வந்தேபாரத் ரயில் உற்பத்தி அதிகரித்து வருவதால், தென்மாநிலங்களுக்கு கூடுதலான வந்தேபாரத் ரயில்கள் கிடைக்கும்.

'இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தொடர்பு கொள்ளும் வகையில், வந்தேபாரத் ரயில்கள் மூலமாக இணைக்க வேண்டும்' என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கடந்த மாதம் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் வந்தேபாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. அதில், மேலும் பல்வேறு வழித்தடங்களில் புதிய வந்தேபாரத் ரயில்கள் விரைவில் இயக்கப்படும்!" என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நமக்கு புதிய நீராவி இன்ஜின் வடிவிலான மின்சார சுற்றுலா ரயிலை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் அதன் சிறப்பம்சங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த பாரம்பரிய நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலில் 3 ஏசி சேர்கார் எக்ஸ்க்ளூசிவ் பெட்டிகள், ஒரு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சமையலறை மற்றும் உணவகத்துடன் 4 ரயில் பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டிக்குள் சாய்தள படுக்கை வசதியுடன் கூடிய 48 சொகுசு இருக்கைகள் உள்ளன.

இந்த இருக்கைகளில் வசதியாக சாய்ந்தபடி, ரயிலின் கண்ணாடி மேற்கூரை வழியாகவோ அல்லது நீண்ட சதுர வடிவிலான 10 கண்ணாடி ஜன்னல் கதவு வழியாக சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை எழிலை கண்டு ரசித்தபடி பயணிக்கலாம். இதுதவிர, 2 அவசரகால கதவு மற்றும் நவீன பயோ கழிவறைகள் உள்ளன. மேலும் எல்இடி திரையில், ரயில் சென்று சேரும் ரயில்நிலையம், அதன் அருகிலுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் தூரங்கள் குறித்து ஃப்ளாஷ் நியூஸ் போல் ஸ்லைடுஷோ வசதியும் செய்யப்படுகிறது.

ஏசி உணவக அறையில் 28 பேர் அமரும் வகையில் சொகுசு இருக்கைகள் உள்ளன. மேலும், அங்கு தமிழகத்தின் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பாரம்பரிய கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இந்த சுற்றுலா ரயில் மூலம் அனைத்து மக்களும் கண்டு ரசிக்கலாம்!" என்று ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

காத்திருப்போம்.