தொடர்கள்
அனுபவம்
பிச்சை புகினும் கற்கை நன்றே... ! மாலா ஶ்ரீ

20230301071333543.jpg

மெரீனா கடற்கரையில் சர்வீஸ் சாலையோர பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வாலிபர் நீண்ட நேரம் நின்றபடி வயலினில் ஏராளமான பாட்டுகளை வாசித்து கொண்டிருந்தார். அவரது வயலின் இசையை, அங்கு காற்று வாங்க வந்திருந்த ஏராளமான மக்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் யாரிடமும் யாசகம் கேட்கவில்லை. ஆனால், அவருக்கு பின்னே ஒரு அட்டையில் 'எனது உயர்கல்வி படிப்பை தொடர, 2 ஆண்டுக்கான கல்வி கட்டணம் செலுத்த நன்கொடை தாருங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தது. அங்கு அதிகளவு கூட்டம் கூடியதால் பரபரப்பு நிலவியது.

காரப்பாக்கம் பகுதியில் உள்ள கே.சி.ஜி பொறியியல் கல்லூரியில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற மாணவர் ஏரோஸ்பேஸ் பாடப்பிரிவில் கவுன்சிலிங் மூலம் நேரடியாக இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர், வேலூரில் தென்னை நாரில் கயிறு திரிக்கும் கூலிவேலை செய்து வருகின்றனர். முன்னதாக வேலூர் அரசுப் பள்ளியில் படித்த அஜித், அங்குள்ள பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்துள்ளார்.

சென்னையில் ஒரு நண்பரின் அறையில் தங்கியபடி, ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு சேர்ந்துள்ள அஜித், அடுத்த 2 ஆண்டு படிப்புக்கான கல்வி கட்டணத்துக்கு பெற்றோரை கஷ்டப்படுத்தாமல், தானே பணத்தை திரட்ட வேண்டும் என அஜித் திட்டமிட்டார்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல்துறை உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, அந்த வாலிபரிடம் தீவிரமாக விசாரித்தனர். இதில், அந்த வாலிபர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்பதும், அவர் உயர்கல்விக்காக 2 ஆண்டு கல்வி கட்டணத்தை பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் அப்பணத்தை மக்களிடையே நன்கொடை திரட்ட தொடர் வயலின் வாசிப்பில் ஈடுபட்டது உதவி ஆணையர் பாஸ்கர் உட்பட அங்கு குழுமியிருந்த மக்களுக்கு தெரியவந்தது.

20230301071359150.jpg

உதவி ஆணையர் பாஸ்கர் மற்றும் பணியில் இருந்த அனைத்து போலீசார் ஒருங்கிணைந்து, கல்லூரி மாணவர் அஜித்திடம் கல்வி கட்டணத்துக்கான முதல் தொகையாக ₹2 ஆயிரத்தை மனிதநேயத்துடன் வழங்கினர். இதைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த ஏராளமான மக்கள், தங்களால் முடிந்தளவு பணத்தை அஜித்திடம் நன்கொடையாக வழங்கினர். பின்னர் அஜித்திடம் 'இங்கு அனுமதியின்றி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது' என போலீசார் விளக்கி கூறி, ஒரு காவல் வாகனத்தில் ஏற்றி, கல்லூரி மாணவர் அஜித்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவரின் கல்விக்கு நன்கொடை வழங்கிய போலீசாரின் மனிதநேய செயலுக்கும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.