தொடர்கள்
அழகு
சென்னையில் சிற்றாமை முட்டை - வனத்துறை ஹாப்பி அண்ணாச்சி ! ப. ஒப்பிலி

20230301063913970.jpg

ஒலிவ நிற சிற்றாமை பாதுகாவலர்களும் வனத் துறையும் இந்த ஆண்டு மிக்க சந்தோஷமாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் கடந்த மூன்றுமாதங்களில் 43,500 சிற்றாமை முட்டைகளை பத்திரமாக எடுத்து அவற்றை வனத்துறை நிறுவிய குஞ்சு பொரிப்பகத்தில் அடை காக்க வைத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சேகரித்த முட்டைகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்கின்றனர் சிற்றாமை பாதுகாவலர்கள்.

சென்னை வன உயிரின காப்பாளர் இ பிரசாந்த் கூறுகையில் கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் காலங்களான ஜனவரி முதல் ஏப்ரல் வரை வனத்துறைசார்பில் பெசன்ட் நகர் கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, ஈஞ்சம்பாக்கம் கடற்கரை மற்றும் பழவேற்காடு கடற்கரை ஆகிய பகுதிகளில் குஞ்சுபொரிப்பகங்கள் வன துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து நேப்பியர் பாலம் வரையிலும், பெசன்ட் நகரில் இருந்து நீலாங்கரை வரையிலும் மற்றும் நீலாங்கரையில் இருந்துஈஞ்சம்பாக்கம் வரையும், பழவேற்காட்டில் ஒரு குழுவும் ஆக மொத்தம் நான்கு வேட்டை தடுப்பு காவலர் குழுக்கள் கடற்கரை ஓரம் நடந்து சென்று ஆமைமுட்டைகள் இட்ட கூடுகளில் இருந்து முட்டைகளை எடுத்து, பொரிப்பகத்தில் மண்ணுக்கு அடியில் புதைத்து விடுவார்கள்.

இந்த வருடம் கிட்டத்தட்ட 400 கடல் ஆமை முட்டை இடும் கூடுகளை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்டறிந்தனர். கடந்த வருடம் மொத்தமாக 490 கூடுகளை மட்டுமே கண்டறிந்தனர். ஆனால் இந்த வருடம் முதல் மூண்டு மாதத்திற்குள்ளே 400 கூடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கைஅதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார் பிரசாந்த்.

கடந்த ஆண்டு 490 கூடுகளில் இருந்து 55,713 சிற்றாமை முட்டைகள் எடுக்கப்பட்டன. அதில் 83% முட்டைகள் குஞ்சுகளாக வெளிவந்து, 46,755 குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டது. அதற்கு முன் 2019-20 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் முறையே 201 மற்றும் 387 கூடுகளே வனத்துறையால்கண்டறியப்பட்டன.

வேட்டை தடுப்பு காவலர்கள் இந்த மாத இறுதி வரை கடற்கரையில் நடை மேற்கொள்வார்கள். பூமிக்குள் புதைக்கப்பட்ட முட்டைகள் 45 முதல் 60 நாட்களுக்குள் பொரிய தொடங்கும். பின் வெளிவரும் குஞ்சுகள் மாலையில் இருட்டியபிறகு கடலுக்குள் விடப்படும். பொதுவாகவே, ஒரு பெண்ஆமையின் முட்டையில் இருந்து வெளி வரும் பெண் ஆமை குஞ்சுகள் தாம் பிறந்த கடற்கரைக்கே வந்து முட்டை இடும் என ஆராய்ச்சியாளர்கள்கூறுகின்றனர். ஆயிரத்தில் ஒரு பெண் ஆமை மட்டுமே தான் பிறந்த கடற்கரைக்கு முட்டை இட வருமென்று அவர்கள் கூறுகின்றனர்.

எனவே இதை நினைவில் கொண்டு ஆமை குஞ்சுகளை மாலை வெளிச்சம் மங்கிய பிறகு கடலுக்குள் விடுவதாக கூறுகிறார் பிரசாந்த். அவ்வாறுஇல்லையெனில் காகம், கடல் பறவைகள் மற்றும் நாய்கள் போன்றவற்றால் ஆமை குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படும். வேட்டை தடுப்புகாவலர்களும் தன்னார்வலர்களும் சேர்ந்து கடந்த ஐந்து வருடங்களில் 1.60 லட்சம் ஆமை குஞ்சுகளை பத்திரமாக கடலில் விட்டுள்ளனர்.

மற்றொரு ஆறுதலான விஷயம் சென்னை கடற்கரைகளில் இறந்த ஆமைகளின் சடலங்கள் கரை ஒதுங்குவது இந்த வருடம் குறைந்துள்ளது. ஆனால்பழவேற்காட்டில் ஒரு மாதத்திற்கு முன் முட்டை இட வந்த நூற்றுக்கணக்கான பெண் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. வனத்துறைஅந்த இறந்த ஆமைகளை உடனடியாக புடைத்து விட்டனர், என்று கூறுகின்றனர் ஆமை ஆர்வலர்கள்.

ஆமைகள் முட்டை இடுவது இந்த மாதத்தோடு முடிவடைந்து விடும். அவ்வாறு இட்ட முட்டைகளை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து, முட்டையில் இருந்துகுஞ்சுகள் வந்ததும் அவை பத்திரமாக கடலில் விடப்படும். இந்த பொரிப்பகங்கள் மே மாதம் இரண்டாம் வாரம் வரை செயல் படும் என பிரசாந்த் தெரிவித்தார்.