தொடர்கள்
அழகு
உயரமான காஷ்மீரில் உயரமான பாலம் - மாலா ஶ்ரீ

20230301070407983.jpg

இந்தியாவின் உச்சியில் வீற்றிருக்கும் காஷ்மீர் மாநிலம் 'உலகின் சொர்க்கம்' என்று சொல்லும் அளவுக்கு, அங்கு இயற்கை அன்னை பல்வேறு அற்புதங்களை ஒளித்து வைத்திருக்கிறாள். இமயமலை பகுதியில் உள்ள ரியாசி மாவட்டத்தின் கத்ரா மற்றும் ரியாசி நகரங்களை மலை பள்ளத்தாக்கு பகுதிகளை செனாப் நதி இரண்டாகப் பிரிக்கிறது. மேற்கண்ட 2 பகுதிகளையும் இணைத்து ரயில்பாதையை உருவாக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டது.

அதன்படி, இந்தியாவிலேயே முதன்முறையாக இமயமலையில் 2 பள்ளத்தாக்குகளை பிரிக்கும் செனாப் நதியின் குறுக்கே, கேபிள் மூலம் இணைக்கும் ரயில்வே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசு நிதி போதிய நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் வழங்கியது. எனினும், கடந்த 20 வருடங்களுக்கு பிறகே பல்வேறு இயற்கை இடர்பாடுகளை கடந்து, தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

20230301070612376.jpg

சுமார் 28 ஆயிரம் டன் இரும்புகளைக் கொண்டு உருவான ரயில் பாலம் ₹1,486 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று உள்ளது. இந்த புதிய கேபிள் ரயில்வே மேம்பாலம் சுமார் 193 மீட்டர் உயரம், 725.5 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. தற்போது பல்வேறு சோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்பாதை வரும் மே மாதத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "இங்கு அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான ரயில்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்குடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு இணைக்கப்படும். மேலும், ஸ்ரீநகருடன் ஜம்முவை இணைக்கும் ரயில்வே பாதை, இந்தாண்டு இறுதியிலோ அல்லது ஜனவரி 2024க்குள் கட்டி முடிக்கப்படும்.

அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக அமைந்துவிட்டன. தற்போது பாலம் செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. இது, ஜம்மு-காஷ்மீருக்கு மிகப்பெரிய விஷயம். இப்பாலம் பொறியியல் துறையின் அதிசயம்!" என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுகுறித்து வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இங்கு அமைக்கப்பட்டு உள்ள ரயில்வே பாலம், சுமார் 120 ஆண்டு ஆயுட்காலம் கொண்டது என கணிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் சுமார் 40 கிலோ வெடிபொருட்களின் அதிர்வைத் தாங்கக்கூடிய திறன் கொண்டது. (வாயில நல்ல வார்த்தையே வராதா ?? வடிவேலு போல அறச்சொல்லா சொல்றானேய்யா...) இதில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க போகிறோம்.

மேலும், இப்பாலம் மணிக்கு 213 கிமீ வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் சக்தி வாய்ந்தது. இங்கு ஏராளமான சென்சர்கள் அமைத்து கண்காணிக்கப்படும். இதன்மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும்!" என்று ரயில்வே அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர். இந்த ரயில்வே பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் பெரிதளவு ரயில் போக்குவரத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பவே இந்த பாலத்தில போகணும்னு ஆசையா இருக்கே........