தொடர்கள்
அரசியல்
ஊட்டியில் கொதித்துப் போயிருக்கும் தோட்டக்கலை ஊழியர்கள் ! ஸ்வேதா அப்புதாஸ்

20230301065415228.jpeg

தமிழக தோட்டக்கலை துறை தான் மறைமுகமாக பெரிய லாபத்தில் இயங்கி கொண்டிருக்கிறது .

இந்த துறையின் கீழ் தான் உலக புகழ் பெற்ற ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் பராமரிக்க பட்டு வருகிறது .

பிரிட்டிஷ் காலத்தில் லண்டன் கியூ கார்டெனில் பணிபுரிந்து வந்த தோட்டக்கலை அதிகாரி மேக் ஐவரின் அறிய உருவாக்கல் தான் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் .

முதலில் காய் கறி தோட்டமாக உருவாக்க பட்ட இந்த பூங்கா பின்னர் மலர்களின் காட்சி பூங்கா வாக உருவாக்க பட்டது .

இந்திய சுதந்திரத்திற்கு பின் தமிழக வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறையுடன் இணைக்கப்பட்டது .

இந்த கார்டனை உலக புகழ் வாய்ந்ததாக மாற்றி அறிய வகை பூக்கள் மரங்கள் என்று இங்கு அமைத்தனர் பிரிட்டிஷார் .

இமய மலையில் உள்ள தேவதாரு மரம் இந்த பூங்காவில் உள்ளது .

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் (அரசு தாவரவியல் பூங்கா ) , ரோஸ் கார்டன் , குன்னூர் சிம்ஸ் பார்க் , ஊட்டி மரவியல் பூங்கா , தேயிலை பூங்கா , காட்டேரி கார்டன் , நஞ்சநாடு , கோல்கி ரைன் , காட்டேரி , பர்லியார் ,கல்லாறு பழ பண்ணை என்று 14 பண்ணைகள் உள்ளன இதில் ஆயிரம் தோட்ட தொழிலார்கள் பல வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள் .இவர்களில் 300 பேர் மட்டும் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் சிறப்பு காலமுறை ஊதியமே பெற்று வருகின்றனர்

அதே சமயம் இவர்களுக்கும் கடந்த பல வருடங்களாக சிறப்பு காலமுறை ஊதியமே வழங்கப்படாமல் 600 க்கும் மேற்பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தவித்து வருகின்றனர் .

பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலார்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் ஊதியம் உயர்வோ அல்லது பதவி உயர்வோ வழங்கப்படவில்லை .

20230301065528620.jpeg

பண்ணை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது வேதனையின் உச்சக்கட்டம் .

தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பல வருடமாக தோட்டக்கலை துறை மற்றும் அரசிடம் முறையிட்டு எந்த பலனும் இல்லாமல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23 ஆம் தேதி முதல் ஊட்டி பொட்டானிக்கல் கார்டனுள் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி ஒருவாரமாகியும் அரசு கண்டுகொள்ளவில்லை

மாவட்ட ஆட்சியர் அம்ரித் அதிகாரிகளுடன் கோடை விழா மற்றும் மலர்காட்சிக்கான தேதி நிகழ்வு குறித்து மீட்டிங் நடத்திவிட்டு , பூங்கா ஊழியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல உள்ளது என்கின்றனர் .

நாம் ஊட்டி பொட்டானிக்கல் கார்டனுள் விசிட் செய்தோம் கண்கலங்கி ஊழியர்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருந்தனர் .

கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் பெள்ளி ஊழியர்களின் கோரிகைகளுக்கு இந்த அரசு செவி கொடுக்கவேண்டும் என்று பேசினார் .

நாம் போராடும் ஊழியர்கள் தலைவர் போஜராஜிடம் பேசினோம் , "எங்களுக்கு அரசு காலமுறை ஊதியம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தமிழக வேளாண்மை துறை ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து பண பலன்கள் வழங்க வேண்டும் .

கடந்த முப்பது வருடமாக போராடிக்கொண்டிருக்கிறோம் எந்த அதிகாரிகளுக்கும் எங்களை பற்றி கவலை இல்லை . ஊட்டி தாவரவியல் பூங்காவில் மட்டும் வருடத்திற்கு 13 கோடி லாபம் கிடைக்கிறது .அதற்கு முழு காரணம் நாங்கள் தான் அதை பற்றி இந்த அதிகாரிகளுக்கு எந்த கவலையும் இல்லை .ஊழியர்களுக்கு கிடைக்க கூடிய எந்த பண பலனும் சம்பளமும் உயர்வும் கிடைப்பதில்லை .மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கூலி வழங்குவதை கூட இந்த அதிகாரிகள் தர மறுப்பது தான் இந்த போராட்டத்திற்க்கு தள்ளப்பட்டிருக்கிறோம் நல்ல முடிவு வரும் வரை போராட்டம் தொடரும் " என்று கூறினார் .

பெண்கள் நம்மிடம் கூறும்போது , " ஊட்டி கால சூழ்நிலை உங்களுக்கு தெரியும் வெயில் மழை பனி என்று கூட பாராமல் மலர்கள் பூத்து குலுங்க உழைக்கிறோம் .

புதிய நாற்றுகளுக்கு நிழல் செடிகளை காட்டில் சென்று வெட்டி வருகிறோம் .காட்டு மண் எடுத்து வந்து போடுவதும் நாங்கள் தான் .

ரோஜா பூங்காவில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் தினமும் ரோஜா முட்கள் குத்தி ரத்த காயம் ஏற்படுவது சகஜம் தினமும் கண்ணீர் தான்

பொதுவாக கைம்பெண்கள் தான் அதிகம் இந்த சம்பளத்தில் தான் எங்க குடும்பத்தை நகர்த்துகிறோம் . உடல் நல குறைவு என்று லீவு எடுத்தால் மனசாட்சி இல்லாமல் சம்பளத்தில் பிடித்தம் செய்து விடுகிறார்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

மருத்துவ விடுப்பே இல்லை .

அப்படியிருக்க நம்பி இருந்த இந்த அரசும் எங்களுக்கு மோசம் செய்வது தான் பொறுத்து கொள்ள முடியவில்லை முதல்வர் கொஞ்சம் எங்களை திரும்பி பார்த்தால் நல்லது " என்கின்றனர் .

மூத்த ஊழியர் சுப்பிரமணி கூறும்போது , " நியாமாக கிடைக்க கூடிய பண பலன்களை வழங்க ஏன் இந்த

அதிகாரிகள் மறுக்கிறார்கள் .இந்த கார்டெனில் மட்டும் 13 கோடி வருடத்திற்கு லாபம் கிடைக்கிறது .அது யாரால் எங்க ஊழியர்களின் உழைப்பால் அப்படி உழைக்கும் இவர்களை ஏமாற்றுவது சரியா .பணி நிரந்தரம் உள்ளிட்ட அனைத்து பண பலன்களை தான் கேட்கிறோம் .கடந்த 32 வருடமாக போராடி எந்த பையனும் இல்லை இந்த அரசு உதவி செய்யும் என்று காத்திருந்து ஏமாற்றம் தான் ஓய்வு பெரும் ஊழியர்கள் வெளியே போன பிறகு நடு தெருவில் நிற்கும் சூழ்நிலை எங்க போராட்டம் தொடரும் " என்று முடித்தார் .

நீலகிரி அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் எங்க எம் பி .ஆ .ராசாவுக்கு இங்கு நடக்கும் போராட்டத்தை பற்றி தெரியாமல் இருப்பது வருத்தமான ஒன்று .நாங்களும் தேர்தல் வந்தால் ஓட்டு போடுவோம் என்கிறார்கள் இந்த ஊழியர்கள் .

படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் தினமும் கார்டனுக்கு வந்து தன் ஆதரவை தெரிவித்து வருகிறார் .

அரசுக்கும் , தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு பல மனுக்கள் கொடுத்து இது வரை பதில் இல்லை .

அதனால் ஊழியர்கள் கர்டெனில் உள்ள 100 வருட பழமைவாய்ந்த தேவதாரு மரத்திற்கு பவனியாக வந்து கண்ணீருடன் மனு கொடுத்து நீதி கேட்டது வேதனையான ஒன்று .

ஆண் ஊழியர்கள் பூங்காவில் உள்ள குளத்தில் இறங்கி கோஷம் போட்டு போராடினார்கள் .

மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களின் வருடாந்திர கலெக்ஷன் 20 கோடியை தாண்டுகிறதாம் .மலர் காட்சிக்கு மலர் அலங்கார கான்ட்ராக்டர்களுக்கு பல வருடமாக பல லட்சம் செட்டில் செய்யாமல் அதை பற்றி கவலை படாமல் இருக்கிறார்கள் தோட்டக்கலை அதிகாரிகள் என்பது அதிர்ச்சி தகவல் .

தற்போது நீலகிரி தோட்டக்கலை பூங்காக்களில் எந்த வேலையும் நடைபெறாமல் கவலை கிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .

உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா விற்கு வரும் சுற்றுலாக்கள் " இது என்ன அநியாயம் ஒரு பெரிய கர்டெனில் ஊழியர்கள் போராடுவதை பார்ப்பது மிகவும் வேதனையானது உங்க அரசு என்ன செய்கிறது" என்று கேட்கிறார்கள் .

அடுத்த மாதத்தில் இருந்து முக்கிய வி ஐ பி கள் வந்து போகும் இடம் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது .

இதே பொட்டானிக்கல் கார்டெனில் இணை இயக்குனராக பணிபுரிந்து தற்போது மாநில தோட்டக்கலை துறையின் உதவி இயக்குனராக சென்னையில் அமர்ந்து கொண்டு இருக்கும் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் இவர்களின் கண்ணீரை துடைக்க எந்த முயற்ச்சியும் எடுப்பதில்லை என்பது இவர்களின் வேதனை .

முதல்வர் மே மாதம் 125 வது மலர்க்காட்சிக்கு வரும் போது இவர்களின் கண்ணீர் துடைக்கப்படுமா அல்லது ரத்த கண்ணீருடன் ஏப்ரல் 1 தான் மிஞ்சுமா ?!