தொடர்கள்
அனுபவம்
சிலுவையிலே மனது வைத்தால் .. மரியா சிவானந்தம் 

20230230144252789.jpg

கருணை ததும்பும் அவ்வுருவத்தை தினம் தினம் சிலுவையில் பார்த்திருப்போம் .

சிலுவையில் இயேசு குருதி சிந்தி மரித்த புனித வெள்ளியை உலகெங்கும் கிறிஸ்தவர்கள் கொண்டாட இருக்கிறார்கள் .

சாம்பல் புதன் தொடங்கி , ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பின் ஞாயிறு வரை கிறிஸ்துவர்களின் தவக்காலம் அல்லது நோன்புக்காலம் .Lent days அல்லது லெந்து நாட்கள் என்றும் இந்நாட்களைக் குறிப்பிடுவர்.

கிறிஸ்துமஸ் போல உயிர்ப்புத் திருவிழா ஒரு குறிப்பிட்ட தேதியில் வருவதில்லை . வானியலில் மார்ச் 21 (Vernal Equinox) எனப்படும் மார்க் 21க்குப் பின் வரும் பௌர்ணமி நாளை அடுத்து வரும் ஞாயிறு உயிர்ப்புத் திருநாளாக கடைப்பிடிக்கப் படுகிறது . எனவே மார்ச் இறுதி வாரத்தில் அல்லது ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் வரும் ஞாயிறு உயிர்ப்பு விழா . ஏறத்தாழ ஏழு வாரங்கள் இந்த தவக்காலம் கிறிஸ்துவர்களால் அனுசரிக்கப்படுகிறது .

தவக்காலத்தின் பெயரிலியே இருப்பது போல தவத்தை கடைபிடிக்க வேண்டிய காலம் இது. உடலை ஒறுத்து, மனதை ஒடுக்கி நாம் செய்யும் குற்றங்களை நினைத்து வருந்தி, இறைவனின் மன்னிப்பை, அன்பை வேண்டி நிற்கும் காலம். அதற்கான தவமுயற்சியில் கிறிஸ்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும், அதனால் ஏற்படும் சேமிப்பை தான தர்மங்களுக்கு அள்ளி வழங்குவதும் வழக்கம்.

தவக்காலத்தை இப்படித்தான் அனுசரிக்க வேண்டும் என்ற திருச்சபை கட்டுப்பாடுகள் குறைவு . விபூதி புதன் மற்றும் புனித வெள்ளி இரண்டு நாட்கள் மட்டும் உபவாசமும், சுத்த போஜனம் எனப்படும் சைவ உணவும் கடைபிடிக்க வேண்டிய கடமை உண்டு. 60 வயதுக்கு மேற்பட்டோர் , பிணியாளர், கர்ப்பிணிகள் இவர்களுக்கு இக்கடமையை அனுசரிக்க விலக்கு உண்டு. அவ்வாறே தவக்காலத்தின் எல்லா வெள்ளிக்கிழைமைகளும் அசைவ உணவை விலக்கி வைக்க வேண்டிய கடமை உண்டு. திருமணம். நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்கள் செய்ய அனுமதி இல்லை. இவை தவிர மற்ற தவமுயற்சிகள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப வகுத்துக் கொள்வர் .

இளம் பிராயத்து தவக்கால நினைவுகள் மனதில் எழுகின்றன. துவக்கத்தில் பல உறுதிமொழிகள் எடுப்பதும், அதை முழுக்க கடைப்பிடிப்பதும், அல்லது உடைப்பதும் உண்டு. அந்த நாற்பது நாளும் சில பெண்கள் பூ வைத்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் இனிப்பு அல்லது சாக்லெட்கள் சாப்பிட மாட்டர்கள். சினிமாவுக்கு போக மாட்டார்கள். அசைவம் சாப்பிட மாட்டார்கள்.

என் அப்பா, புனித வாரம் முழுவதும் ரேடியோ பிளக்கை கழற்றி வைத்து விடுவார் .புனித வெள்ளியில் எல்லோரும் ஆலயத்தில் கூடி ,இயேசுவின் பாடுகளை தியானிப்பார்கள் .வெள்ளை ,கருப்பு அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்வார்கள் . எங்கும் அமைதி நிலவும் . ரம்ஜான் நோன்பு கஞ்சியைப் போல ஒரு கஞ்சியை செய்து, ஆலயங்களில் பகிர்ந்துக் கொள்வார்கள்

இந்நாட்களில் பொதுவாக பலரும் தாம் வாழும் வாழ்க்கையைத் திரும்பி பார்த்தலும், மனச்சான்றைச் சோதித்து பார்த்தலும் நடக்கும். வழிபாடுகளில் கலந்து கொள்வது முறைப்படுத்திக் கொள்வர். சிலுவைப்பாதை ( Way of the cross ) எனப்படும் இயேசுவின் துன்பங்களை நினைத்து மனம் வருந்தும் ஜெப வழிபாட்டை வெள்ளிக்கிழமை மட்டுமன்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்பவர்கள் உண்டு.

பைபிளை ஆழ்ந்து படித்து அதன் படிப்பினைகளை புரிந்துக் கொள்ள முயற்சி செய்வர். தவக்கால புனித யாத்திரைகள் ஏற்பாடு செய்யப்படும. அருகில் உள்ள திருத்தலங்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் உண்டு. வேளாங்கண்ணி வரை நடந்து செல்பவர்கள் உண்டு. இப்பட்டியல் ஊருக்கு ஊர் ,ஆளுக்கு ஆள் மாறுபடும்.

வீட்டில் அதிகமாக அமைதி காத்தல் இருக்கும். வீண் சண்டை வாக்கு வாதங்களைத் தவிர்ப்பர் . குடி ,புகை போன்ற வழக்கங்களை தவிர்ப்பதும் அல்லது அடியோடு நிறுத்தவும் முயற்சி செய்வர்.காலை முதல் உணவு உண்ணாமல் ,மாலை ஒருவேளை உணவு உண்பவர்கள் உண்டு. தினம் அரிசி சேமித்து, அதை புனித வெள்ளி அன்று தானம் செய்வார்கள். சிலர் பணமாக உண்டியலில் சேமித்து புனித வெள்ளி அன்று கோவிலுக்கு கொடுப்பார்கள் . பெரும்பாலும் எல்லா தர்ம செயல்களும் , பிறர் அறியாமல் செய்வதே வழக்கம் . "உன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதிருக்கட்டும்" என்று இயேசு சொல்கிறார் அல்லவா ? .

இந்த தவமுயற்சிகள் ,தருமங்கள் எல்லாமே அவரவர் வகுத்துக் கொண்ட நியமங்கள் .அவரவர் சூழல் ,மனநிலை பொறுத்து அனுசரிப்பர். இன்றைய சூழலில் மொபைல் ,இணையத்தை தவிர்ப்பதே பெரும் தவமுயற்சியாக இளந்தலைமுறையினர் நினைக்கக் கூடும் .

இவை ஒரு புறம் இருக்க ,நமது பழைய வழக்கங்களில் இருந்து விடுபட வெண்டும் . கோபம், அகங்காரம், புறம் பேசுதல், தற்பெருமை, போன்ற உள்மன வன்மங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும்.சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளும் காலமாக இந்த தவக்காலத்தை மக்கள் தேர்நதெடுக்கிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனித நேயம் வளரும் காலம் இது. அன்பும்,கருணையும் அளவின்றி அள்ளித்தர வேண்டியவ காலம் இது. பைபிள் சொல்வதைப் போல .

பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு, ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு. ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து.. உன் இனத்தானை அவமதிக்காதே. இதுவன்றோ நாம் விரும்பும் மேலான நோன்பு?

(இசையாஸ் :58: 7)

இத்தகைய மனித நேயத்தை வளர்க்க , அறச்செயல்கள் செய்ய புனித வெள்ளி மற்றும் தவக்காலம் மட்டுமல்ல, எல்லா நாட்களும் உகந்த நாட்களே.

எனினும் இறைவனின் இரக்கத்தைப் பெற்றுத்தரும் இக்காலம் சிறப்பான காலம் என்பதில் ஐயமில்லை

ஏனெனில்..

சிலுவையிலே மனது வைத்தால்
சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால்
வந்தது சுகமாகும் (கண்ணதாசன்)

புனித வெள்ளியில் அனைவருக்கும் நலன்கள் வரட்டும், சிந்தையில் அமைதி பெருகட்டும்