தொடர்கள்
பொது
மாடுகளுக்கும் ஒரு நாள் லீவு ! மாலா ஶ்ரீ

20230301064229296.jpg

'வாரத்தில் ஒருநாள் லீவு கிடைக்காதா?' என மனிதர்களே வாய்விட்டு புலம்புகின்றனர். ஆனால், எந்நேரமும் வயல்கள் மற்றும் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வண்டியை இழுத்து செல்லும் மாடுகளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்க மனிதர்கள் எண்ணுவதில்லை. கால்நடைகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு, மாடுகளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுப்பதை சமீபகாலமாக ஜார்கண்ட் மாநில மக்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நூற்றாண்டில் வயலில் உழுது கொண்டிருந்த ஒரு மாடு திடீரென கீழே சுருண்டு விழுந்தது. அதை வைத்தியர் பரிசோதிப்பதற்குள் பரிதாபமாக உயிரிழந்தது. 'ஓய்வே கொடுக்காமல் வாரம் முழுவதும் மாட்டிடம் தொடர்ச்சியாக வேலை வாங்கியதால்தான் இறந்துவிட்டது' என வைத்தியர் கூறியுள்ளார். அன்றிலிருந்து அனைத்து மாடுகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை லீவு விடுவதை ஜார்கண்ட் மாநில மக்கள் கட்டாயமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 25க்கும் அதிகமான கிராமங்களில் மாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருசில கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில், மாடுகளுக்கு வியாழக்கிழமை லீவு வழங்கப்படுகிறது. எப்படி இருந்தாலும், அம்மாநில மாடுகளுக்கு ஒரு நாள் லீவு கட்டாயமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாடுகளுக்கு ஸ்பெஷலாக பூஜை செய்யப்படுகிறது.

ஹெத்போச்ரா பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ராமேஷ்வர் சிங் கூறுகையில், "இப்பகுதியில் பழங்குடியினர் அதிகம். நாங்கள் இங்கு வருவதற்கு முன்னரே, அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். மாடுகளுக்கு ஒருநாள் லீவு வழங்குவது என்பது இவர்களின் பழக்கம். பின்னர், நாங்களும் அதை பின்பற்ற துவங்கிவிட்டோம். அவர்கள் மாடுகளுக்கு ஞாயிறு விடுப்பு வழங்கினால், நாங்கள் வியாழக்கிழமை லீவு வழங்குகிறோம்.

அன்றைய தினம் எவ்வளவு அவசரமான வேலைகள் இருந்தாலும், நாங்கள் மாட்டிடம் வேலை வாங்க மாட்டோம். அவற்றுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து, முழு ஓய்வு கொடுப்போம். அன்றைய தினம் அவரவர் வசதிக்கேற்ப பிற வாகனங்களை பயன்படுத்துவோமே தவிர, கால்நடைகளை தொந்தரவு செய்ய மாட்டோம்!" என்று உறுதி தெரிவித்தார்.

ஜார்கண்ட் மக்கள் மனிதர்களாக மாறியது குறித்து மாடுகள் மகிழ்ச்சியடைந்துள்ளனவாம்.