தொடர்கள்
அரசியல்
தஹிக்கு நஹி சொன்ன தமிழ்நாடு - மாலா ஶ்ரீ

20230301064655263.jpg

சில நாட்களுக்கு முன் 'தமிழ்நாட்டின் 'ஆவின்' மற்றும் கர்நாடகாவின் 'நந்தினி' பால்பொருட்களில் ஒன்றான தயிர் பாக்கெட்டில் 'தாஹி' என்ற இந்தி வார்த்தையை பிரதானமாக பயன்படுத்த வேண்டும். பிராந்திய மொழி வார்த்தையை அடைப்புக்குறிக்குள் சிறியதாக இருக்கலாம்' என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)

கட்டுப்பாடு விதித்து வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் நந்தினி தயிர் டப்பாவில் 'மோசரு' என கன்னட மொழியிலும், தமிழ்நாட்டின் ஆவின் டப்பாவில் 'தயிர்' என தமிழில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்திய FSSAI எனும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடு அரசு மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 30-ம் தேதி ஆவின் நிறுவன தயிர் டப்பாக்களில் 'தாஹி' என்ற இந்தி வார்த்தையை அச்சிட முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில், "தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. எங்களுக்கு இந்தியைச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் ஆவின் பால் பொருட்களில் இந்தி வார்த்தையை அச்சிட மாட்டோம். எங்களின் பொருட்களில் தமிழ், ஆங்கில வார்த்தைகள் மட்டுமே அச்சிடுவோம் என கூறிவிட்டோம்!" என அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அன்றைய தினம் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிலை பதிவு செய்துள்ளார். அப்பதிவில், 'எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்… மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பைக் கைவிடுங்கள்! குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, FSSAI-வின் 'தஹி' பெயர் சூட்டல் முடிவுக்கு மத்திய அரசு 'நஹி' என தற்காலிக தடை விதிக்கலாம்!" என் அரசியல் வட்டாரங்கள் ஆரூடம் கூறி வருகின்றன.