தொடர்கள்
கவர் ஸ்டோரி
என் கணவர் தளபதி தான் அடுத்த பிரதமர் - நாடாளுமன்ற வளாகத்தில் துர்கா ஸ்டாலின் பேட்டி ! - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்.

20230301003819887.jpeg

இப்படி ஒரே வாரத்தில் இரண்டு ஸ்கூப் நியூஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எதேச்சையாக டெல்லி செல்ல நேர்ந்தது, எதேச்சையாக முதல்வர் ஸ்டாலின், மற்றும் அவர் துணைவியார் அங்கே நாடாளுமன்ற வளாகத்தில் கண்ணில் பட திடீர் பேட்டி.

கேள்வி : கோவில் கோவிலாக செல்கிறீர்களே ? என்ன வேண்டிக் கொள்வீர்கள் ?

எல்லா கோவில்களிலும் என் கணவர் பிரதமராக வேண்டும் என்று தான் வேண்டிக் கொள்வேன் அதற்கான சூழல் இப்போது டெல்லியில் இருக்கிறது தளபதி. பிறந்தநாளுக்கு வந்த வட இந்திய தலைவர்களும் அந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

கேள்வி : மூன்றாவது அணி அமைந்தால் உங்கள் கணவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா/?

மூன்றாவது அணி எல்லாம் இல்லை பாரதிய ஜனதாவுக்கு எதிராக எல்லாக் கட்சிகளையும் ஒன்று சேர்க்கும் வேலையை தளபதி செய்து வருகிறார் எனவே மூன்றாவது அணி என்ற கேள்விக்கு வாய்ப்பே இல்லை.

கேள்வி : குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர வரமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் உதயநிதி வந்து விட்டார். உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா?

நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு என் காலில் விழுந்து ஆசி கேட்கிறார். பார்க்கவில்லையா ? தளபதி கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிக்கும் அவரிடம் நானும் போகிறேனே அப்புறம் ஏன் இந்த கேள்வி. (சிரிக்கிறார்)

கேள்வி : மாமனாரின் அரசியல் சாதுரியம் உங்கள் கணவருக்கு அதிகம் இருக்கிறதா அல்லது மகனுக்கு அதிகம் இருக்கிறதா ?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் மாமனார் உடன் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவதே தவறு அதுதான் உண்மை. இருவருக்குமே இல்லை. (நமுட்டுச் சிரிப்பு.)

கேள்வி : பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.. நாங்க மட்டும் வீச்சமடிக்கோம் எங்க ஓட்டு மாத்திரம் மணக்கோ ? என்று. அதேபோல இந்தி பேசுபவர்களை கண்டால் உங்கள் வீட்டுக்காரருக்கு பிடிக்காது ஆனால் இந்தி மாநிலங்களை ஆள வேண்டும் இது என்ன நியாயம் ?

இந்தி தெரியாது போடா என்று சொன்னோம் உண்மை தான். ஆனால் இந்திக்காரர்களை நாங்கள் எதிர்ப்பதில்லை. தேவைப்பட்டால் இந்தி கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் தான் அந்நிய மொழி ஹிந்தி இந்திய மொழி தானே. அப்புறம் என்ன ?

கேள்வி : உண்மையை சொல்லுங்கள் ராகுல் காந்தி ஓரங்கட்டப்பட்டதில் உங்கள் கணவருக்கு மகிழ்ச்சி தானே ?

நாங்கள் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் காங்கிரஸ் கட்சியே யோசித்தபோது ராகுல் காந்தி தான் எங்கள் கூட்டணி பிரதமர் வேட்பாளர் என்று தளபதி துணிந்து அறிவித்தார். இப்போது ராகுல் காந்தி வேண்டாம் என்று பாரதிய ஜனதா எதிர்ப்பு மாநிலக் கட்சிகள்சொல்கின்றன. ஆனால் அதே கட்சிகள் தளபதி பிரதமர் வேட்பாளர் என்றால்ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இது தான் நிலவரம்.

கேள்வி : சூர்யா -ஜோதிகா மும்பைக்கு குடியேறுவது போல நீங்களும் உங்கள் வீட்டுக்காரரும் தில்லிக்கு குடி போவீர்களா ?

எங்கள் மாமனார் இதைத்தான் காலத்தின் கட்டாயம் என்று சொல்வார். டெல்லி ஒன்றும் வெளிநாடு அல்ல இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா இதெல்லாம் ஒரு கேள்வியா?

கேள்வி : ஆக அடுத்த பிரதமர் உங்கள் கணவர், அதற்கு பின்னர் அடுத்த பிரதமர் உங்கள் மகன்.. வாரிசு அரசியல் அப்படித்தானே ? அங்கே உங்கள் கணவர் பிரதமர் ஆகும் போது இங்கே உதயநிதி முதல்வர் ஆகி விடுவார் ! அப்படித்தானே ??

எனது கணவர் அடுத்த பிரதமர் என்பது மட்டும் உண்மை. ஆனால் உதயநிதி முதல்வராக மாட்டார் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகள் ஒரு ஆளுமை மிக்க பெண்மணியை முதல்வராக்க விரும்புகிறார்கள் யார் அந்த ஆளுமை மிக்க பெண்மணி என்பது உங்களுக்கு நன்கு தெரியும் அப்படித்தானே. (கோபக் கனலோ ?? )

நாம் அடுத்த கேள்வி கேட்கும் முன்னே காமாண்டோக்கள் குண்டுக் கட்டாக வெளியே தூக்கி போடாத குறையாக நெட்டித் தள்ள, துர்கா ஸ்டாலின் கொஞ்சம் சிரித்துக் கொண்டே தலையசைத்து விடை பெற்றுக் கொண்டார்.