தொடர்கள்
கவர் ஸ்டோரி
உயிருடன் இருக்கிறார் பிரபாகரன் !! இலங்கை அதிபராக விரைவில் பதவி ஏற்பேன் !! - சிறப்புப் பேட்டி !!

20230301002256246.jpg

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று பழ நெடுமாறன் சொன்னதை தொடர்ந்து அவரை எப்படியாவது தேடி கண்டுபிடித்து அவரை பேட்டி காண வேண்டும் என்ற முடிவோடு அவரைத் தேட தொடங்கினோம்.

நம்பிக்கையில்லாமல் துவங்கிய நமக்கு தொடரத் தொடர ஏராள ஆச்சரியங்களும் மர்மங்களும் காத்திருந்தது.

அவர் இருக்கும் இடத்தை ஒருவழியாக கண்டுபிடித்து சந்திக்கவும் செய்தோம் இருந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை சொல்வது பத்திரிக்கை தர்மம் ஆகாது என்பதால் நாம் ரகசியம் காக்கிறோம்.

கண்ணைக் கட்டி கொண்டு போனதால் இடம் தெரியவில்லை என்பது தான் உண்மை. உள்ளே நுழையும் முன் பேப்பர் பேனா தவிர கைபேசி, மணி பர்ஸ் வரை அனைத்தையும் ஒரு பையில் போட்டு வெளியே விட்டு வரச் சொல்லி ஆணை. !! வீடியோ எடுக்கலாம் என்ற ஆசை நொடிப்பொழுதில் நிராசையானது.

நாம் விகடகவி டிஜிட்டல் இதழ் நிருபர் என்று நாம் அவரிடம் பெருமையாக அறிமுகப்படுத்திக் கொள்ள பிரபாகரன் என்னது விகடகவியா இப்படி ஒரு பத்திரிகை இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லையே விகடன் ,ஜூனியர் விகடன் இதெல்லாம் எனக்குத் தெரியும் என்றவரிடம் ஒருவாறு சமாளித்து வைத்தோம்.

படையப்பா ரஜினிகாந்தை ரம்யா கிருஷ்ணன் ரொம்ப நாட்களுக்கு பிறகு சந்திக்கும் போது வயசானாலும் அந்த கம்பீரம் இன்னும் உன்கிட்ட அப்படியே இருக்கு என்று சொல்வாரே அதே போல் விடுதலைப்புலிகள் தலைவர் அதே மிடுக்குடன் இருந்தார்,இருந்தாலும் வயதாகி விட்டது என்பதற்காக சில அடையாளங்கள் பிரபாகரனுக்கு ஆங்காங்கே தெரியத்தான் செய்தது.சரி உட்காருங்கள் என்று உட்கார சொன்னார் சூடான தேநீர் வந்தது அருந்தினோம்.

நாம் ராஜீவ் காந்தி படுகொலை என்று ஆரம்பித்ததும் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று நான் கருத்து சொல்லிவிட்டேனே என்றார் பிரபாகரன். கூடவே இப்போது ஏன் பேசுகிறீர்கள் அது முடிந்துவிட்ட விஷயம் என்றார் பிரபாகரன்.அப்போது நாம் நீங்கள் சொன்ன அந்த துன்பியல் சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்தபோது நானும் அங்கிருந்தேன் என்று சொன்னதும் பிரபாகரன் அப்படியா என்று சந்தேகமாக நம்மை பார்த்தார்.

20230301003358792.jpeg

அது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக விமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை கீழே முட்டி போட்டு அவருக்கு நெருக்கமாக உட்கார்ந்து இருந்த புகைப்படத்தை காட்டி இதோ பாருங்கள் ராஜீவ் காந்தி அருகில் கீழே உட்கார்ந்து இருப்பது நான் தான் என்றதும் ஏதோ ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருக்கிறார் போல இருக்கிறது என்று கருத்து சொல்லிவிட்டு பிரபாகரன்...

நீங்கள் அடுத்த கேள்விக்கு போகலாம் என்பது போல பார்க்க, நாம் உடனே அந்த துன்பியல் சம்பவத்திற்கு என்ன காரணம் ராஜீவ் காந்தி உங்களுக்கு உதவி தானே செய்தார். இந்தியாவில் இருக்கும் வரை முதலமைச்சர் எம்ஜிஆர் உங்களுக்கு பண உதவி செய்தார் இப்படி இந்தியா உங்களிடம் கரிசனம் தான் காட்டியிருக்கிறது. பின் ஏன் திட்டமிட்டு படுகொலை செய்தீர்கள் என்று நாம் கேட்க அதற்கு பிரபாகரன் இது பற்றி சொல்வதென்றால் மிகப்பெரிய விளக்கத்தை நான் சொல்ல வேண்டும் என்று அவர் சொல்ல ஆரம்பிக்க அப்போது நாம் குறிக்கிட்டு தனி ஈழம் அமைத்து உங்களை ஒரு சர்வாதிகாரியாக முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பினீர்கள் என்று சொல்கிறார்களே, இந்தியா ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ள நாடு என்பதால் அதை ஏற்கவில்லை என்கிறார்கள். அதுதானே உண்மை என்று நாம் சொன்னதும் அப்போதும் பிரபாகரன் பதட்டப்படாமல், "நீங்கள் பிரச்சினையை உங்கள் கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள் நான் என் கோணத்தில் இருந்து பார்க்கிறேன் இதுதான் எனக்கும் ராஜீவ் காந்திக்கும் இருந்த பிரச்சனை" என்றார்.

நாம் குறுக்கிட்டு ராஜீவ் கடைசி வரை உங்களுக்கு ஆதரவாக தான் இருந்தார். இந்திய அமைதிப்படை உங்களை இரண்டு முறை நெருங்கியது. அவர்கள் நினைத்தால் சுட்டுத் தள்ளி இருக்கலாம். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் உங்களை தப்ப விட்டார்கள் என்று சொன்னதும் சற்று ஆவேசமாக, உங்களுக்கு இந்த தகவல் யார் சொன்னது நீங்கள் என்ன இந்திய அமைதிப்படை தலைவரா என்று எதிர் கேள்வி கேட்க, அதற்கு மேல் அவரை கோபப்படுத்தத விரும்பாமல், நாம் இப்போது இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையில் மக்கள் தவிக்கிறார்கள் இப்போது கூட இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நாம் கேட்டதும் பிரபாகரன் இப்போதுதான் நீங்கள் ஒரு நல்ல கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள் மத்திய அரசுடன் நாம் தொடர்பில் இருக்கிறோம் என் மக்கள் என் இனம் பிரச்சனை விரைவில் தீரும் என்றார் பிரபாகரன்.



அப்படியா என்று நாம் சந்தேகத்துடன் கேட்க அப்போது பிரபாகரன் உங்களுக்கு சந்தேகம் எல்லாம் வேண்டாம் அது நடக்கும் என்று பிரபாகரன் உறுதிப்பட தெரிவித்தார்.

நாம் விடாமல் அதுதான் எப்படி என்று கேட்கிறோம் என்றதும் விரைவில் நான் இலங்கை அதிபராக பதவி ஏற்க இருக்கிறேன். அப்போது கச்சத்தீவு பிரச்சனை, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல், போன்ற எல்லா பிரச்சனையும் தீரும் என்ற பிரபாகரன், நான் ஒதுங்கவில்லை ஒளிந்து கொண்டுதான் இருக்கிறேன், போய் சொல்லுங்கள் என்றவர், எனக்குள் அந்தப் போர் குணம் அப்படியே தான் இருக்கு என்று சொல்லி முடித்து விட்டு, கிளம்பும் போது தனது அன்பு பரிசாக என்ன வேண்டும் என கேட்க, ஒரு வேளை துப்பாக்கி எதாவது கொடுத்து விடப் போகிறார் என்று பயந்து அதெல்லாம் வேண்டாம் உங்களோடு ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என்று சொன்னோம்.

அப்படியே மறுக்காமல் புகைப்படத்துக்கு போஸ் தந்தார்.

20230301003503132.jpeg

கண்ணைக் கட்டி அழைத்து சென்றது போல கண்ணைக் கட்டி திரும்பவும் கொண்டு வந்து விட்டார்கள்.