"பரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத் திலகமிட்டு வா
பொருது வெங்களத்தை நோக்கி வா
பொன்னளந்த மண்ணளக்க வா வா வாவாவா"
இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும் போதே நம் உள்ளம் பொங்கும், கண்கள் சிவக்கும். போர்க்களத்தில் எதிரியை புறமுதுகிட்டு ஓட வைக்க நாடி நரம்புகள் முறுக்கேறும் .
இரத்தத்திலகத்தின் "புத்தன் வந்த திசையிலே போர்" என்ற பாடலின் வரிகள் இவை .சீனப்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தின் இப்பாடல் .சிவாஜியின் உணர்வு பூர்வமான நடிப்புடன், கண்ணதாசனின் வரிகளும் டிஎம்எஸ் அவர்களின் குரலும் சேர்ந்து அந்நாளில் நாட்டுப்பற்றை நமக்கு ஊட்டியது . வீரம் பொங்கும் அவர் குரலில் ஒலித்த தேசபக்தி பாடல்கள் எந்த தலைமுறைக்கும் ஏற்றவை .
பாரதவிலாஸ் படத்தின் "இந்திய நாடு என் வீடு ,இந்தியன் என்பது என் பேரு" தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல்."ஆண்டான் அடிமை ,மேலோர் கீழோர் என்பது மாறாதோ ? என்ற கேள்வி பிறந்த பச்சை விளக்கு பாடலும் இவ்வரிசையில் வைக்க கூடிய பாடலே . "பொதிகை மலையில் பிறந்தவளாம் ,பூவை பருவம் அடைந்தவளாம்"என்று தமிழ்த் தாயின் அருமையைப் படும் ஆனந்த ஜோதியின் ஒருதாய் மக்கள் நாமென்போம் 'என்னும் பாடல் அன்று பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளில் பாடப் பட்ட பாடல் .
டிஎம்எஸ்ஸின் தத்துவப்பாடல்களை நான் என்னவென்று சொல்வேன்? அப்பாடல்கள் நம் துன்பங்களில் தேற்றும் தாய் மடி , தோள் தொட்டு வழிகாட்டும் தோழன் , கண் சிமிட்டி கவலை மறக்க வைக்கும் மழலை என்று நேரத்திற்கேற்ப அப்பாடல்கள் வடிவெடுக்கும், நம்மை அரவணைக்கும் , வாழ்வின் நிதர்சனங்களை காட்டும் .
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
(ஆண்டவன் கட்டளை )
மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று...
இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று.
(அவன்தான் மனிதன் )
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம்
என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா (பாலும் பழமும் )
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு (சுமைதாங்கி )
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
( நெஞ்சில் ஓர் ஆலயம் )
இந்த பட்டியல் முடிவடையப் போவதில்லை .அத்தனை பாடல்களும் அழகு .
வரலாற்று படமா ,புராணப்படமா , சமுகப்படமா , திகில் படமா எவ்வகை படமாக இருந்தாலும் சாதாரணப் படத்தையும் சாதனைப் வெற்றி பெற செய்வதில் பாடல்களின் பங்கு மறுக்க முடியாது . எண்பதுகளுக்கு முன்பான திரையிசை இதமான இசை என்பதும் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவை நிலைத்து நிற்கும் என்பதற்கும் மாற்று கருத்தில்லை . அக்கால கட்டத்தின் இணையற்ற பாடகராக திகழ்ந்த டிஎம்எஸ் அவர்களை நினைவு கூறுவதும் ,அவரது பாடல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவதும் தமிழருக்கு பெருமை சேர்க்கும் செயலே .
இசைவேந்தர்கள் எம் எஸ் விசுவநாதன், டி கே ராம மூர்த்தி , ஜி ராமநாதன் ,கே,வி மகாதேவன் சி ஆர் சுப்பராமன் போன்ற பழம்பெரும் இசை அமைப்பாளர்கள் முதல் சங்கர் கணேஷ், இளையராஜா , டிராஜேந்தர் என பல இசை அமைப்பாளர்களின் இசைக்கு குரல் தந்தவர் .ஏஆர் ரஹ்மான் இசையில் கலைஞர் எழுத்தில் மிளிர்ந்த "செம்மொழியான தமிழ்மொழியாம் ' பாடலின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்னும் முதல் வரியை டிஎம்எஸ் பாடியது அவர் தமிழுக்குச் செய்த சிறப்புகளில் பெரியது .
கர்நாடக இசையில் விற்பன்னரான டிஎம்எஸ் , தமிழ் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து தமிழ் வளர்த்தவர் .கலைமாமணி பட்டமும், பத்மஸ்ரீ விருதும் அவர் பெற்ற விருதுகள் .2008 ஆம் ஆண்டு மதுரையில் மு.க அழகிரி டிஎம்எஸ் அவர்களை அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வர வைத்து பாராட்டு விழா நடத்தியது நம் நினைவில் இருக்கிறது .
கவிஞர் மு.தவசீலன் ,'விகடகவி 'வாசகர்களுக்கு ஏற்கனவே தன் கவிதைகளால் பரிச்சயம் ஆனவர். தமிழில் பல அம்மன் பாடல்களையும் ,சில திரைப்பட பாடல்களையும் எழுதியவர் . தமிழக சிவில் சப்ளை துறையில் துணை ஆணையராக பணி ஆற்றி ஓய்வு பெற்றவர் . அவர் டிஎம்எஸ் உடன் நல்ல நட்புடன் பழகியவர் .அவர் "அந்த நாள் நினைவு"களை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார்
"டிஎம்எஸ் மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்ல ,மிக சிறந்த மனிதரும் ஆவார். திறமையான இசை அமைப்பாளர்கள் , பாடலாசிரியர்கள் பாடகியர்கள் அவருக்கு அமைந்தனர் .பக்தி பாடலோ, திரைப் பாடலோ ,அவர் தன் முழு பங்களிப்பையும் அர்ப்பணிப்புடன் ஆர்வமாக செய்பவர் . எச்எம்வி நிறுவனத்தில் பாடல் பதிவுக்கு வரும் போது அவர் குரல் வளத்தையும் ,தமிழ் உச்சரிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்.
யாருக்கு டிஎம்எஸ் பாடுகிறாரோ அவர் குரலுக்குள் கூடு பாயும் திறமை பெற்றவர் . கண்ணதாசனுக்கு 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 'பாடி இருப்பதைக் கேட்கும் போது 'கண்ணதாசனே பாடுவது போல இருக்கும் . டிஎம்எஸ் அவர்களுடன் பேசியதும் , பழகியதும் நேற்று நிகழ்ந்தது போல் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது . அன்பும் , நட்பும் கண்களாக மதித்த மாமனிதர் டிஎம்எஸ்". என்று முடித்தார் .
டிஎம்எஸ் நினைவுகளை யாரே மறக்க முடியும்? .இன்னும் கோவில்களில் , பேருந்தில் , தேனீர் கடைகளில் ,இசை நிகழ்ச்சிகளில், பயணங்களில் டிஎம்எஸ் நம்முடன் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் .மேலும் சில நூற்றாண்டுகள் மங்காத புகழுடன் வாழ்வார் .
முற்றும்
Leave a comment
Upload