தொடர்கள்
கதை
சீதாவின் இரண்டாவது கல்யாணம் - சத்யபாமா ஒப்பிலி

20230231161254466.png

ஸ்ரீ ராம நவமி என்றாலே எனக்கு என் சிறுவயதில் நான் ராமராக வேடமிட்டது தான் நினைவில் வரும். சிக்கநரசய்யன் கிராமம். அது திருநெல்வேலியில் உள்ள ஒரு தெருவின் பெயர். அங்கு வருடா வருடம் ராம நவமி விழா தட புடலாக நடை பெரும். இன்றும் நடக்கிறது. வருடா வருடம், இரண்டு குழந்தைகளுக்கு ராமர் சீதை வேடமிட்டு, திருமண விழா போல் நடத்துவார்கள். தெருவே கூடி அந்த குழந்தைகளை கொண்டாடுவார்கள். எனக்கு எப்படி ராமர் வேடம் போட முடிவு செய்தார்கள் என்று இன்னமும் புரியவில்லை. வெட வெட என்ற ஒல்லியான தேகம். சற்றே மேல் தூக்கிய கொஞ்சம் பெரிய மூக்கு, கொஞ்சம் உள்ளடங்கிய கண்கள். நிறம் மட்டும் வெள்ளை. எனக்கு அப்போது ஒரு 6 அல்லது 7 வயது இருக்கும். "நீதான் நாளைக்கு ராமர் வேஷம் போட்டுக்கப்போற!" என்று அம்மா என்னிடம் சொன்னதும், "முடியாது போ என்றேன்". அக்கா என்னிடம் வந்து, "அழகா இருக்கும், நான் டிரஸ் பண்ணிவிடறேன்" என்றாள். என் அண்ணா காத்துக்கொண்டிருப்பான் என்னை சீண்டி வேடிக்கை பார்க்க. " ஓ! நீதான் ராமரா! இப்போதான் அந்த தார் டின்ல கொஞ்சம் தண்ணிய விட்டு கலக்கிட்டு வந்தேன். நாளைக்கு உன்ன அதுல தான் முக்கி எடுக்க போறா !"

மிரண்டு போய் அம்மாவைப் பார்த்தேன்.

அம்மா, "சிரிப்பை அடக்கி கொண்டு, அதெல்லாம் ஒன்னும் இல்லை. அழகா அக்கா உன்ன டிரஸ் பண்ணி விடுவா" என்றாள்.

அண்ணாவிடம் போய், "ராமர் ஒன்னும் அவ்ளோ கருப்பு கிடையாது." குரல் தழுதழுக்கச்சொன்னேன்.

அவன் என் தலை பின்னலை பற்றி என்னை தன் அருகில் இழுத்து, " அவ்ளோ கருப்பா இருக்க மாட்டார். அதுனால தான் தண்ணி விட்டுட்டு வந்திருக்கேன்" ரகசியமாக என் காதில் சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

அப்பா,அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அம்மா, அப்பாவிடம் என் ராமர் வேஷம் விஷயம் சொல்ல, அப்பா, " குழந்தையை கஷ்டப்படுத்தாம எது வேணா செஞ்சுக்கோ" என்று சொல்லிவிட்டார்.

இரவு தூங்கப்போகும் முன், அப்பா என்னிடம் வந்து, நாளைக்கு சீதா கல்யாணம். நீதான் ராமராமே". சிரித்துக் கொண்டே கேட்டார்.

அப்பா, "ராமர், கருப்பா என்ன?"

"அதெல்லாம் இல்லையே, ஒல்லியா மூக்கு பெருசா, வெள்ளையா இருப்பார்." சிரிக்காமல் சொன்னார்.

நம்பாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின், திடீரென்று சந்தேகம் வந்து, " சீதா கல்யாணம் தானே! யாரு சீதா என்றேன்?"

அப்பா, அம்மாவிடம். "அதானே! யாரு சீதா? என்றார்.

"ஜோசியர் பொண்ணு பத்மா", என்றாள். எனக்கு அழுகையே வந்து விட்டது. அந்த பத்மாவுடன் முந்தைய நாள் தான் சண்டை போட்டிருந்தேன். அவள் நன்றாகப் படிப்பாள். தினமும் அவளுடன் தான் பள்ளிக்குச் செல்வேன், பள்ளி செல்லும் வரை தான் என்னுடன் இருப்பாள். பின்னர் நன்றாக படிக்கும் கூட்டத்துடன் சேர்ந்து விடுவாள். நான் கொஞ்சம் படிப்பில் மந்தம் தான். வீட்டுப்பாடம் எழுத மனம் இருந்தால் நோட் தருவாள், இல்லை என்றால் "நான் இன்னும் முடிக்கவே இல்லை!" என்று பொய் சொல்லிவிட்டு, ஆசிரியர் கேட்கும் போது கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் நோட்டை நீட்டுவாள். முந்தின தினமும் அப்படித்தான் நடந்தது.கொஞ்சம் சுய மரியாதை மேலிட, துரோகம் காயப்படுத்த, " எனக்கும் உனக்கும் இனி சம்மந்தமே இல்லை. நீ தனியாவே பள்ளி கூடத்துக்கு போ. என் கூட வராதே, பேசாதே! என்று அழுது கொண்டே, ஆள் காட்டி விரல் மேல் நடு விரல் வைத்து 'டு' போட்டு விட்டேன். நாளைக்கு அவள் தான் சீதா.

"அம்மா, இது வேண்டாமே! அழுது கொண்டே சொன்னேன். அண்ணாவுக்கு தன் தார் டின் வேலை செய்கிறது என்று பெருமிதம்.

"சத்யா, கவலைப்படாதே. அது ஈசியா போய்டும். தேங்காய் நார வைச்சு பரபரன்னு தேய்க்கணும். ஆத்து மண்ணு இருக்குல்ல அதையும் கொஞ்சம் போட்டுக்கணும். வழிச்சு எடுத்தவுடனே இன்னும் கலர் ஆயுடுவ. ஜாலியா தூங்கு!" சொல்லிவிட்டு , தலை வரை தான் போர்த்திக் கொண்டு தூங்கி விட்டான். சிறுது நேரத்தில் நானும் தூங்கி விட்டேன். குழந்தையாக இருப்பதில் அது ஒரு சௌகரியம். தலைக்கு மேல் பிரச்சனை இருந்தாலும், தூக்கம் வந்துவிடும்.

காலை, அம்மா என்னை எழுப்பி விட்டார். பல் தேய்த்து காபி குடித்தபின், தலையில் எண்ணெய் தடவி குளிப்பாட்டி விட்டார். அக்கா எனக்கு போட வேண்டிய, டிரஸ், பவுடர் இத்யாதிகளை எடுத்து வைத்து காத்திருந்தாள்.

அண்ணாவைத் தேடினேன்.

"அவன், மண்டபத்துக்கு போயாச்சு, என்றாள் அக்கா.

"டின்னுக்குள்ள முக்குவாளா" பயந்துகொண்டே கேட்டேன்.

"தெரியலையே" என்றாள் அக்கா சிரித்துக்கொண்டே.

ஒரு வெள்ளை சட்டை போட்டு விட்டு அதன் மேல் ஒரு பூணலை போட்டு, பஞ்சகச்சம் கட்டி விட்டு, அங்கவஸ்திரத்தால் என்னை சுத்தி விட்டு, நெற்றியில் நாமம் இட்டுவிட்டு, பின் மறக்காமல் திருஷ்டி பொட்டையும் இட்டுவிட்டு மண்டபத்திற்கு தூக்கி கொண்டு போனாள் அக்கா.

"நாமத்தை இன்னும் சரியா போடு, வேஷ்டிய கொஞ்சம் தூக்கி கட்டு, தலையை விரித்து விடு, கிரீடம் வைக்கும் போது, அப்போ தான் அழகா இருக்கும். அத்தனை அறிவுரைகளையும் வாங்கிக்கொண்டு அக்கா மறுபடியும் என்னை கிட்டத்தட்ட ராமராக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.

எங்கிருந்தோ வந்த என் சகோதரன், " டின் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதனால நாளைக்கு என் சைக்கிளுக்கு காத்து அடிச்சு வைச்சுடு" என்றான்.

அக்கா, சிரித்துக்கொண்டே "ஏன்டா இப்படி?" என்றாள்.

அப்பாடி ஒரு பிரச்சனை முடிந்தது. இப்போ பத்மாவை பாக்கணுமே.

நினைத்துக்கொண்டிருக்கும் போதே,

"சீதை வந்தாச்சே!" என்று ஒரு குரல் கேட்க, என்னை சுற்றி இருந்தவர்களெல்லாம், அங்கே போக, நிறைய நகை போட்டுக் கொண்டு, பூவைத்துக்கொண்டு, அழகாக வந்தாள் பத்மா.

என்னை குனிந்து பார்த்துக்கொண்டேன். இல்லாத இடுப்பில், ஒரு கயிறின் உதவியுடன் நிற்கும் வேஷ்டி, ஒரு அங்கவஸ்திரம். ஒரு மணி மாலை, கிரீடம். அதுவும் தலையில் நிற்கவே இல்லை.

கண்கள் கலங்கியது. அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

அண்ணா, என் அருகில் வந்து "வாயைத்திற" என்று சொல்லி ஒரு ஆரஞ்சு மிட்டாயை குடுத்துவிட்டுப் போனான்.

பின் திடீரென்று மண்டபம், வேகமாக இயங்கத் தொடங்கியது. ஒரு மினி கல்யாணமே நடந்தது. எனக்கு வேறு எதுவுமே ஞாபகம் இல்லை. நலுங்கில் நிமிராமல் தேங்காய் உருட்டியதும், ஒருவர் தலையில் ஒருவர் அப்பளாம் உடைத்ததும், மாலை மாற்றிக்கொண்டதும் ஞாபகம் இருக்கிறது.

மற்றவர்கள் களிப்பில் நாங்களும் சிரிக்க ஆரம்பித்தோம். எல்லாம் முடிந்த பிறகு, எங்களை அமரவைத்து, இலை போட்டு சாப்பாடு பரிமாறினார்கள். பத்மா என்னிடம் " இந்தா என்னோட மைசூர்பா நீ சாப்பிடு. உனக்கு தான் பிடிக்குமே" என்றாள்.

"தேங்க்ஸ். உனக்கு வேண்டாமா?" என்றேன்.

"வேண்டாம்! நீ சாப்பிடு, நாம பழம் தானே? என்றாள்.

எங்கள் ஊரில் முதல் விரலையும், சுட்டு விரலையும் மட்டும் நீட்டி மற்றது மடக்கி வைத்தல் தான் பழம். பாபா முத்திரை மாதிரி.

இடது கையில் மைசூர்பாவும் வலது கையில் பாபா முத்திரையும் கொண்டு அன்புடன் சீதையைப் பார்த்து சிரிக்கும் போது சரியாக போட்டோ எடுத்திருந்தான் என் சகோதரன்.

அந்தப் புகைப்படம் என் வீட்டில் எங்கேயோ தான் இருக்கிறது. ராமருக்கு பானகமும், நீர் மோரும் நெய்வேத்தியம் செய்யும் பொழுது மைசூர்பாவும் நியாபகம் வரும்.

புதைந்த நினைவுகள் போல் அந்த புகைப்படமும் எங்கேயோ ஒரு பெட்டிக்குள் இருக்கிறது. இந்த வருடமாவது தேடி எடுக்க வேண்டும்.

பத்மா எங்கிருக்கிறாளோ ? சீதாவின் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி எப்படி தெரிந்து கொள்வது ???