தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 30 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

தோள் கண்டேன் தோளே கண்டேன்

கம்பனை அள்ளிப்பருகிய கண்ணதாசன்.. தான் எழுதிய திரைப்பாடல்களில் சந்தம் வரப்பெற்று சாகாத வரிகள் பல தந்தமை காலம் நமக்கு உணர்த்தும் பாடம் என்று சொல்வேன்!
மிதிலையின் வீதியில் முனிவன் முன்செல்ல பின்செல்லும் இராமன் மேல் சீதை தன் பார்வை பதிக்க.. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்! கண்ணொடு கண் இணைகிறது.
நெஞ்சொடு நெஞ்சு அணைகிறது. உயிரோடு உயிர் பிணைகிறது!

அதே நேரம் இராமனின் அழகுநலன் கண்ட மங்கையர் கண்கள் அவன் தோள்மீது சென்றனவாம்.. அப்படி தோள்மீது சென்ற கண்கள் அங்கிருந்து மீளமுடியாமல் இருக்க.. தாள் கண்டவர் கண்கள் தாளினின்று மேல்செல்ல இயலாமல் இருக்க.. என்று கற்பனையில் கொடி கட்டிய கம்பனில் ஆழ்ந்த கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றில் அப்படியே அந்தச் சொல்லாட்சிக்கு முடிசூட்டுகிறார் பாருங்கள்!
"தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே!"
என்னும் காவிய வரிகள் தொட்டு கண்ணதாசன் வரைந்த வரிகள் நம் நெஞ்சில் நிறைந்த வரிகளானது மறுக்க முடியுமா?
இதய கமலம் திரைப்படத்தில் நம் இதயம் தொடும் பாடலாய்
.
“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்”
ஒரு வார்த்தை தமிழில்... ‘ஐயோ’ என்பது. இது பொதுவாக பரிதாப உணர்வை வெளிப்படுத்தவும் பாவம் என்பதை குறிக்கவே பயன்படுத்தப்படும் சொல்லாகும். ஆனால் கவிஞர் இந்த வார்த்தையை எப்படி ஒரு காதல் பாடலில் இத்தனை லாவகமாய், பொருத்தமாய் கையாண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள்! இந்தச் சொல்நயம்தானே நம்மைக் கண்ணதாசன் பாடலில் சொக்க வைக்கிறது!
சீதையின் இடையழகைக் காட்டும் கம்பன்..
பொய்யோ என்னும் இடையாளொடும் ..
என்று இடையிருப்பது பொய்...
அவ்வளவு சிறியதாய் உள்ளது என்று வர்ணிக்கிறார்.
கண்ணதாசனும் கம்பன் வழியே..
“அன்னக் கொடியிடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது”
கன்னிப்பருவம் உன்னைக் கண்டு காதல் காதல் என்றது
காதல்என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது..
எழுதி வைக்கிறேன்.. மானுட உள்ளங்களில் காதல்வாழும்வரை.. கண்ணதாசன் பாடல்வரிகளும் வாழ்ந்திருக்கும்!

இப்படி கம்பன்மீது கொண்டிருந்த காதல் கவியரசர் கவிதை எழுதும்போதெல்லாம் எதிரொலித்தது! இதிகாச புருஷனாக இராமனை தன் செய்யுள் வரிகளால் உயர்த்திய கம்பன் பாணியில் பெற்ற மயக்கம்.. திரைப்படங்களுக்கு பாட்டுவரிகள் அமைக்கும் பணியில் ஈடுபடும்போதெல்லாம் கண்ணதாசனுக்கு இலகுவாக கைகொடுத்தது என்பதற்கு சான்றுகள் பல உண்டு! அவ்வகையில் கம்பன் முன்னவராக கண்ணதாசன் பின்னவராக தமிழுக்குப் பெருமை சேர்த்தனர் என்பதே உண்மையாகும்!

பயணம் தொடரும்...