தொடர்கள்
ஆன்மீகம்
கண்பார்வை அருளும் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள்!! - சுந்தரமைந்தன்.

20230301001518295.jpg

“பூணுமெழிற் காளி எதிர் பொருந்தவர் மெய் கண்ணில் காணவர முற்றமையால் கண்ணுடையாள்” என்கிறது காளையார்கோயில் புராணம். கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், ‘நேத்ராம்பிகா’ என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், ‘கண்ணாத்தாள்’ என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.
சண்டாசுரன் என்ற அசுரனை அழிக்க, அவதாரம் எடுத்த ஆதி பராசக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டதாக கூறப்படுகின்றது.
நாட்டரசன் கோட்டையில் வடக்கு நோக்கிய சந்நிதியில், எட்டு திருக்கரங்களுடன், சண்டாசுரனை அடக்கி இடது காலால் அவனை மிதித்தபடியும், வலது காலை மடக்கி ஒய்யாரமாய் அமர்ந்தபடியும் சுயம்புவாக நமக்கு வாழ்வளிக்கும் தாயாக இருந்து அருள்பாலித்து வருகிறாள் கண்ணாத்தாள்.
இந்த கண்ணாத்தாள் கோவிலுக்கு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகிவிடும் எனபது ஐதீகம்.

ஸ்தல புராணம்:
நாட்டரசன் கோட்டையின் தெற்கே 2 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் பிரண்டகுளம். இதன் வழியாக, தினமும் பலர் பால், மோர், தயிர் விற்க, நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும்போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. அவற்றை விற்க முடியாமல் அனைவரும் கிராமத்திற்கு வேதனையுடன் திரும்பினர். அடுத்தடுத்த நாட்களிலும் இந்த சம்பவம் தொடர்ந்தது. இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அரசனை அணுக விரும்பினர்.
அன்றைய தினம் இப்பகுதியை ஆண்ட அரசனின் கனவில், தான் இருப்பதை அம்மன் உணர்த்தியதை அடுத்து, அந்த பகுதியை தோண்டி, அம்மனை வெளிக்கொண்டு வந்தனர். புதையுண்ட அம்மன் சிலையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு ரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியை தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். முழுமையாக அம்மன் சிலை வெளிவந்ததும், பாதிக்கப்பட்டவரின் கண்ணில் பட்ட காயமும் முழுமையாக நீங்கியது. கண் கொடுத்த காரணத்தால், ‘கண்ணாத்தாள்’ என்ற பெயர் அம்மனுக்கு வந்தது. அங்கிருந்து எடுத்து வரப்பட்ட அம்மன் முதலில் சிவன் கோயிலிலேயே வைக்கப்பட்டார். மறு நாள் அம்மன், வடக்கு நோக்கித் திரும்பியிருக்கக் கண்டு, இதுவே அவள் திருவுளம் என்று, தனிக் கோயிலில் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்கள். வடக்கு முகமாக அமர்ந்து அருளாசி வழங்குவதால், ‘வடக்கு வாய்ச்செல்வி’ என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.

திருக்கோயில் அமைப்பு:
இத்திருக்கோயிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. திருக்கோயிலின் முன்பாக சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடிய திருக்குளம். அம்மனின் சக்தி அனைத்தும் இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக ஐதீகம். கண்நோய் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில் விட்டுக் கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குளத்தின் அருகில், கோயிலுக்கு முன்பாக, சிறியதாக சித்தி விநாயகர் கோயில்.
கோயிலில் நுழைந்தவுடன் முதலில் பெரிய தூண்களைக் கொண்ட, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சொக்கட்டான் மண்டபம். கண்நோய் கண்டவர்கள், இந்த மண்டபத்தில் 48 நாட்கள் தங்கி, குளத்தில் நீராடி, அம்மனை வழிபட்டால் நோய் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
அங்குள்ள ஒரு மரப்பெட்டியில் சரும நோய்கள் தீர, அம்மனுக்கு பக்தர்கள் உப்பு, மிளகு போடுகின்றனர்.
இதனை அடுத்துள்ள மகா மண்டபத்தில், அம்மன் சந்நிதி நேர் எதிரில் சிம்ம வாகனம், பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தை அடுத்து, இருபுறமும் பிரம்மாண்டமான துவார பாலகிகள். உள்ளே சென்றால் அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர், உற்சவர் திருமேனிகள், அம்மனின் உற்சவத் திருமேனியான ‘களியாட்டக் கண்ணாத்தாள்’ ஆகியோர் அருள்கின்றனர். இக்கோவில் கருவறையில் அம்மனின் வலது பாதம் பீடத்தின் மேல் ஊன்றிய நிலையில் இருக்க, இடது திருவடி, கீழே சண்டாசுரனின் தலையை மிதித்தபடி அருள் புரிகின்றார்.
மகா மண்டபத்தின் வடபுறம், வீரபத்திர சுவாமியும், சிறிய வடிவில் காளியும் உள்ளனர். கீழ்ப் பகுதியில் பைரவர் உள்ளார்.
உட்பிராகாரத்தின் கன்னி மூலையில், அபிஷேக விநாயகர் சந்நதி. கருவறை விமானம், இரண்டு தள (துவி தள) விமானம், மூன்று ஸ்தூபிகளைக் கொண்டுள்ளது. பிராகாரம் சுற்றி வருகையில், அபிஷேக நீர்த் தொட்டியைக் கண்டு வணங்கலாம்.
அபிஷேக நீர் விழும் தீர்த்தத் தொட்டியின் அடியில் சித்தர்களில் ஒருவரான அழுகுணிச் சித்தர் சித்தியடைந்திருப்பதாக. தல புராணம் கூறுகிறது.
அன்னையின் பீடத்தின் கீழே உள்ள சுரங்க அறையிலேயே அவர் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது என்கிறார்கள். அம்மனுக்கு மர வாகனங்களும், வெள்ளிக்கேடயம், வெள்ளிக்குதிரை, வெள்ளி ரதம் ஆகியவை இருக்கின்றன.

20230301001619776.jpg

கண்ணாத்தாளின் திருக்கோலம்:


கண்ணாத்தாளின் அற்புத திருக்கோலம் கண் கொள்ளாக் காட்சி ஆகும். அம்மன் உத்குடி ஆசனத்தில் அமர்ந்த நிலையில் வலது பாதம் பீடத்தின் மேல் ஊன்றிய நிலையில் இருக்க, இடது சிலம்பணிந்த பாதம் கீழே சண்டாசுரனின் தலைமேல் இருக்கிறது. அம்மன் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். பின் ஆறு திருக்கரங்களில் முறையே, கிளி, பாசம், வாள், உடுக்கை, கேடயம், மணி ஆகியவற்றை பிடித்தபடியும், முன் வலது மேற்கரத்தில் சூலம் தாங்கியும், இடது கீழ்க்கரத்தில் பான பாத்திரம் ஏந்தியபடி இருக்கின்றார். சூலம் சண்டனின் மார்பு நோக்கி உள்ளது. கரங்களில் வளையல்களும், திருமார்பில் முத்தாரமும், திருத்தாலியும் அணிந்து, “ஜ்வாலா கேசம்” என்னும் கதிர் மகுடம் அணிந்து, சற்றே தலை சாய்த்தவாறு ஞானமருளும் திருவிழிகளுடன் அருள்புரிகின்றார். சண்டாசுர வதம் செய்த திருக்கோலம் என்றாலும், அம்மனின் திருக்கரங்களுள் ஒன்றில் இருக்கும் கிளி, ஞானத்தையும், மற்றொன்றில் இருக்கும் வாள், கூர்ந்த, உண்மைப் பொருளை உணர்ந்த புத்தியையும் குறிப்பதாக ஐதீகம்..

திருவிழாக்கள்:
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணாத்தாளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
சித்திரை மாத முதல் செவ்வாய் அன்று அம்மனுக்கு கண் திறப்பு விழா நடைபெறும். இத்திருவிழா இருபத்திரண்டு நாட்கள் நடக்கும்.
வைகாசி பிரமோற்சவம் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். வைகாசி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றமும், சுவாதி நட்சத்திரம் சேர்ந்த தினத்தில், அந்தி வேளையில், களியாட்டக் கண்ணாத்தாள் எழுந்தருளிய வெள்ளி ரத பவனியும் நடைபெறுகிறது. மறு நாள் விசாகத்தன்று தேர் பவனியும் நடைபெறுகிறது.
ஆடி மாதத்தில் முளைகொட்டு திருவிழா பத்து நாள் நடைபெறும். ஒன்பது வெள்ளி ஓட்டிலும், ஒரு தங்க ஓட்டிலும் முளைப்பாரி போட்டு வளர்க்கப்படும். தங்க முளைப்பாரி அம்மன் தலையில் தாங்கி ஆடி பௌர்ணமி காலையில் திருவீதி உலா நடைபெறும்.
புரட்டாசி நவராத்திரி விழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். ஒன்பது நாட்கள் அம்மன் கொலுவில் அமர்ந்திருந்து பத்தாம் நாள் விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் உலா வருவார். நவராத்திரி நாட்களில் இலட்சார்ச்சனை சிறப்பான முறையில் நடைபெறும்.
ஐப்பசியில் பத்து நாட்கள் நடைபெறும் கோலாட்ட திருவிழாவும் மிகவும் விசேஷமானது.
திருக்கார்த்திகை தினத்தன்று தீபத் திருவிழா நடைபெறும், அன்று அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருள செய்து சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
தை மாதத்தில் பத்து நாட்கள் தைலக் காப்பு உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன. தை மாதம் செவ்வாய் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தை மாதம் முதல் செவ்வாய் அன்று, சந்நிதி வீதியில், எவ்வித வேறுபாடும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடி, வரிசையாக பானைகள் வைத்து பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். ஒரு வேளை, தை மாதப் பிறப்பு, செவ்வாய் கிழமை வந்தால், அடுத்த செவ்வாயன்று இவ்வழிபாடு செய்யப்படுகின்றது.
இவை தவிர, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 'களியாட்டத் திருவிழா' நாற்பத்தெட்டு நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இக்கோயிலில் பாரசைவர்களாகிய உவச்சர் மரபினரால் கோயிலில் பூஜை செய்யப்படுகிறது. சிவாச்சாரியார்கள், ஸ்ரீவைணவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் பிரமோற்ஸவம், ஆகமப்படி கொடியேற்றம் செய்து காப்புக் கட்டப்படுகிறது.

அம்மன் பெருமை சொல்லும் பாடல்கள்:

அம்மனின் பெருமை சொல்லும் பாடல்களில் முதன்மை பெறுவது, அழுகுணிச் சித்தரின் பாடல்கள்….

“பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்

செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி

அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே

கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!

கண்குளிரப் பாரேனோ!”

அழுகுணிச் சித்தர் இப்பாடலில் கண்ணாத்தாளை 'கண்ணம்மா' என்று அழைத்துள்ளார்.

முத்துக் குட்டிப் புலவர் எழுதிய, 'ஸ்ரீகண்ணுடையம்மன் பள்ளு' மிகச் சிறந்த சிற்றிலக்கியம் ஆகும்.

வேண்டுதலும், நேர்த்திக்கடனும்:
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோயிலுக்கு வந்து நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து, இக்கோயிலில் தங்கி தினமும் அம்மனை வழிபட்டு, அம்பாளுக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வயிறு சம்பந்தமான நோய்களால் அவதிப்படுபவர்களும், கண்ணாத்தாளுக்கு விரதமிருந்து மாவிளக்கு போட்டு பலன் பெறுகிறார்கள். கோவிலின் அருகிலேயே மாவு இடிக்க உரல்களும், உலக்கைகளும் கிடைக்கின்றன.
குழந்தை பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். மற்றும் திருமணத்தடை, கல்வியில் சிறந்து விளங்க, அம்மனை பிரார்த்திக்கலாம். பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிய பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரங்களை சமர்ப்பித்து, அம்மனுக்கு மாவிளக்கு போடுகின்றனர். கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்..

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு செல்லும் வழி:
சிவகங்கையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும் நாட்டரசன் கோட்டை திருத்தலம் இருக்கிறது. காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோயில், சிவகங்கையிலிருந்து இங்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன.

கம்பர் சமாதி கோவில் :
கவிச்சக்கரவர்த்தி கம்பர் நாட்டரசன் கோட்டையில், தம் இறுதி நாளைக் கழித்தார். இவர் அம்மன் உபாசகராதலால், அவருக்கு இவ்வூரில் சமாதி கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் கம்பன் விழா நடைபெறுகிறது. இங்கு கம்பன் குளம், கம்பன் ஊருணி, கம்பன் செய், கம்பன் நடுகல் முதலியனவும் உள்ளன.
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பர் இயற்றிய இராமாயணம் ஒரு சிறந்த தமிழ் காவியம். இதில் வீரம், காதல், ஆன்மீகம் என அனைத்தும் இருக்கும். அதனால் இன்றும் பல பகுதியில் இருந்து வரும் பொது மக்கள், கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து தனது குழந்தையின் நாக்கில் சிறிது வைத்தால், அன்னையின் அருளால், குழந்தைகள், கல்வி, கேள்விகளில் வல்லவராவர் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஓம் சக்தி..! பராசக்தி…!!
நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் சரணம்..!! சரணம்...!!!