ஜப்பான் நாட்டின் பிரபல யூ-டியூபர் யோஷிகாசு ஹிகாஷிதானி. அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக வலம் வந்த இவர், கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டார். எனினும், அவர் எம்.பி-யாகத் தேர்வான பிறகு, இதுவரை ஒரு நாள்கூட எந்தவொரு அமர்விலும், நாடாளுமன்ற விவாதக் கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடைசியாக ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும், அதற்கு அவர் நேரில் ஆஜராகாமல், வீடியோ மூலம் விளக்கம் அனுப்பியிருந்தார்.
ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு தேர்வான நாள் முதலே (2022-ஆண்டு, ஜூலை முதல்) ஹிகாஷிதானி ஐக்கிய அரபு எமிரேட்ஸில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்காக அவர் நாடாளுமன்ற எம்பி சம்பளமாக 19 மில்லியன் யென் ($140,000) ஊதியமாகப் பெற்றுள்ளார். இருப்பினும், அவர் ஒரு நாளும் ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு வந்ததே இல்லை. இவ்விவகாரம் பூதாகரமான நிலையில்,
கடந்த வாரம் முதலில் ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு ஹிகாஷிதானி நேரில் சென்று மன்னிப்பு கேட்கவிருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் மனதை மாற்றிக்கொண்டு, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளார் எனக் குறிப்பிடத்தக்கது.
இதனால் ஜப்பான் நாடாளுமன்ற ஒழுங்கை சீர்குலைத்ததாக ஹிகாஷிதானிமீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற தலைவரான ஹிடெஹிசா ஒட்சுஜி உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவியிலிருந்து யோஷிகாசு ஹிகாஷிதானி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் கடந்த 70 ஆண்டுகளில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரே நபர் என்ற அவப்பெயரையும் யோஷிகாசு ஹிகாஷிதானி பெற்றுள்ளார்.
தான் நாடு திரும்பினால், போலி வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் ஜப்பான் வரவில்லை என்று ஹிகாஷிதானி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மேல்சபை தேர்தலுக்கு முன்னதாக, அவர் தனது யூடியூப் சேனலில் பிரபலங்கள் பற்றிய வதந்திகளை ட்வீட் செய்து வந்துள்ளார். இவ்வழக்கில் அவரை ஏற்கெனவே போலீசார் விசாரித்து இருந்தனர். மேலும், இவ்வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் ஹிகாஷிதானி ஜப்பான் திரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கும் ராகுல் காந்தி நீக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீணாக போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
Leave a comment
Upload