இதுவரை கருங்கழுத்து பாறுக் கழுகுகளின் கூடுகள் முதுமலை புலிகள் சரணாலயத்தில் மட்டுமே இருப்பது பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இது பத்தாண்டு தேடலுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற நற்செய்தி என்பதால் பறவை ஆர்வலர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களையும் உள்ளடக்கிய ‘பாறுக் கழுகுகள் குறித்து ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு’ கடந்த மாதம் முதல் முறையாக நடத்தப்பட்டது.
இது குறித்து சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹூ அவர்கள், கணக்கெடுக்கும் பகுதியை பல்வேறு சதுரங்களாக பிரித்து, அதிலிருந்து 100 கட்டங்களைத் தேர்வு செய்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது எனவும், மேலும் அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று அவை தற்போது வாழ்ந்து வரும் பகுதிக்குப் பொருத்தமாக மலை உச்சியிலிருந்து கணக்கெடுக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இது குறித்து அருளகத்தின் செயலாளரும் தமிழ்நாட்டு அரசின் பாறுப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான சு. பாரதிதாசன் கூறுகையில் "ஒரு மலை உச்சியை நோக்கி எனது கண்களைத் திருப்பியபோது, வெண்ணிற படிவுகள் அள்ளித்தெளிதாற்போல் கண்ணில் பட்டது. இது ஏதோ ஒரு கழுகின் கூடாக இருக்க வேண்டுமே என்று எண்ணித் தொலைநோக்கியை திருகி உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அப்போது ஒரு பறவை இறங்கி அந்த கூட்டில் போய் உட்கார்ந்தது. உச்சி வேளையில் அடித்த எதிர் வெயிலும் பாறையிலிருந்து கிளம்பும் தகிப்பும் கண்களைக் கூசச் செய்ததால், என்னால் சரிவர பார்க்க முடியவில்லை. இன்னும் சிறிது ஏறிச் சென்று பார்க்கலாம் என்று நினைத்தபோது, மலை மிகவும் சரிவாக இருந்தால் ஏறிச் செல்ல முடியவில்லை. ஆயினும் ஒருவாறாக குச்சியின் உதவியுடன் ஏறிச் சென்று பார்த்தபோது, அது கருங்கழுத்துப் பாறுக்கழுகாக இருக்கலாம் என்று யூகித்தேன். ஆயினும் சரிவரத் தெரியவில்லை. அந்த முகட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னொரு கழுகு இறங்கியது. சந்தேகமில்லை. கருங்கழுத்துப்பாறுதான். அதன் தாடைப்பையில் இரையை சேமித்து வைத்திருக்கக்கூடும். பார்த்தவுடன் மகிழ்ச்சி பிரவாகம் என்னுள் எடுத்தது. பத்தாண்டு எதிர்பார்ப்பு நிறைவேறியது."
உண்மையில் இது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபுறம் இந்த இனம் பெருகிவருவதற்கேற்ப அவற்றின் இரைக்குத் தட்டுப்பாடு இல்லாமலும், கிடைக்கும் இரை அவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்றும் மனதார விரும்பினேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் இதுவரை எங்களது பாறுக் கழுகு பாதுகாப்பு மண்டலம் முதுமலை மையமாக வைத்தே வரையப்பெற்றது. இனி சத்தியமங்கலம் - பவானிசாகரை மையமாக வைத்து வேலைத்திட்டத்தை முடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது , இந்த கணக்கெடுப்பை பாறுக் கழுகுகளின் இனப்பெருக்க காலம் தொடங்குவதற்கு முன்பும் முடிவுறும்போதும், இடைப்பட்ட காலத்தில் என ஆண்டுக்கு மூன்று முறை நடத்தினால் அதிலிருந்து சரியான எண்ணிக்கையைப் பெற முடியும் என தெரிவித்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னோடி பறவை ஆராய்ச்சியாளர் மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான முனைவர் விபு பிரகாஷ் அவர்கள் வட இந்தியாவில் சாலையில் பயணித்து கழுகுகளைப் பார்த்து பதிவிடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். தென்னகத்தில் நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கணக்கெடுப்பின் முடிவில் 80 வெண்முதுகு பாறு கழுகுகளும், 10 கருங்கழுத்து பாறு கழுகுகளும் 5 செம்முகப் பாறு கழுகுகளும் 2 மஞ்சள் முக பாறு கழுகுகளும் முறையே ஒரு ஊதா முக பாறுக் கழுகும், ஹிமாலய பாறுக் கழுகும் பதிவு செய்யப்பட்டன.
Leave a comment
Upload