80-களில் பிறந்து 90-களில் பொது தேர்வு எழுதிய கூட்டத்தில் நானும் ஒருத்தி. "நீ நல்ல படிச்சா நீ காரில் போவே", என்பதை தவிர அப்பா பெரியதாக அட்வைஸ் செய்ததாக ஞாபகம் இல்லை. தொண்ணுறு, நூறு மார்க் வாங்கினால் அதிக பட்சம் ஒரு டைரி மில்க் கிடைக்கும். டியுஷன் போனது கிடையாது. (படிப்பு சரியாக வரவில்லை என்றால் மட்டுமே டியுஷன் தேவை என்று தீர்க்கமாக நம்பிய காலம்).வீட்டில் டெலிபோன் கிடையாது. கேபிள் டிவி கிடையாது. அதீத நட்பு வட்டாரம் மட்டும் உண்டு. தினமும் காலை ஆறு மணிக்கு, அந்த காலத்து விஜய் டிவியில் "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" என்ற பாடலை கேட்டு நாள் துவங்கியது. செக்லிஸ்ட் கிடையாது. ஹால் டிக்கெட் ஐ அம்மா சாமி படத்திடம் வைத்து கொடுத்தார். ஏதோ ஒரு டிபன். போர்டு எக்ஸாமின் முதல் நாள் மட்டும் அப்பா எக்ஸாம் சென்டருக்கு வந்தார்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் பத்தாம் வகுப்பு முடிந்தது. ஒரு குரூப் தேர்வு , இன்ஜினியரிங் ஆ மெடிசின் ஆ என்று ஒரு சிறு குழப்பம். எண்ட்ரன்ஸ் எக்சாமிற்கு ஒரு மாதம் கோச்சிங். நல்ல ரிசல்ட். ஒரு இன்ஜினியரிங் காலேஜ் சீட்.ஸ்ட்ரெஸ், பானிக் அட்டாக் என்ற வார்த்தைகள் அகராதியில் நுழையாத காலம்.
நிற்க
இருபத்தியேழு வருடம் கழித்து , அதே பத்தாம் வகுப்பு படலம் , இந்த முறை என் மகனுக்கு. ஒன்பதாம் வகுப்பு ஆரம்பிக்கும் போதே அடுத்தது பத்து , அடுத்தது பத்து என்று ஒரே பரபரப்பு. உங்க பையன் ஐ ஐ டி யா, ஜே ஈ ஈ யா , நீட் எ என்று யாராவது கேட்டால் , கடன் பட்ட நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அளவு பீலிங். அதே முகத்துடன் என் மகனை பார்த்தால், எனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஒரு பாவனை. "தம்பி டியூஷன் ஏதாவது சேர்த்து விடவா?" என்ற கேள்விக்கு கனல் பார்வை மட்டுமே பதில். தன் நண்பர் கூட்டம் முடிவு செய்யும் வரை எல்லா கேள்விக்கும் பதில், "சொல்றேன்" என்பது மட்டுமே. ஒரே டெக்ஸ்டு புக் , ஐந்து கைடு , ஐநூறு சாம்பிள் கொஸ்டின் பேப்பர் என்று வீடு முழுக்க புத்தக மயம். "ஒருமுறையேனும் பார்ப்பாயா", என்று அத்தனையும் கீர்த்தனை பாடியது தான் மிச்சம். சுமாரான மார்க் வாங்கியதற்கே "எகிறி குதித்தேன் வானம் இடித்தது" என்று ஒரு குதூகலம். கேட்டால் கிளாஸ் ஆவெரேஜ் அது இது என்று ஸ்டாடிஸ்டிஷயன் போல விளக்கம் சொல்வது என்று பிரி போர்டு வரை காலம் ஒட்டியாகிவிட்டது. போர்டு எக்ஸாம் டயம் டேபிள் கொடுத்தவுடன் தான் லேசான பதட்டம் அது கூட பரிட்சையினால் இல்லை, நண்பர்கள் ஸ்கூல் மாறிவிடுவார்களோ என்பதினால். கோவிந்து (அப்படி தான் நான் அச்சில் ஏறக்கூடாத அந்த மூன்றெழுத்து பாண்டேமிக் உபாதையை செல்லமாக அழைக்கிறேன்), மட்டும் இல்லை என்றால் கொஞ்சம் மொபைல் உபயோகம் குறைந்திருக்கும் என்று எனக்கு ஒரு எண்ணம். வாட்ஸாப்ப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட் என்று கேட்கும் போதெல்லாம் "பெத்த வயிறு பத்தி எரியுது" மொமெண்ட்.
அம்மா இப்போ எனக்கு லைட்டா பயமா இருக்கு என்று சொன்னது பரீட்சைக்கு முன்னாடி ஒரு நாள். நெர்வஸ் டையேறியா எனக்கு வந்தது தான் மிச்சம். நான் கூட பரவாயில்லை , "சாமி காப்பாத்து", என்று இரண்டு வார்த்தையில் மட்டுமே வேண்டி கொண்ட என் வீட்டுக்காரர், கோயில் வேண்டுதல் என்று லிஸ்ட் போட வைத்த ஒரு அதிசய தருணம் அது.அதற்கு ஏற்றார் போல எக்ஸாம் ஒரு நாள் முன்னர் லேசாக ஜுரம் வந்ததும், தாத்தா பாட்டி மாமா மாமி நண்பர்கள் என்று முப்படையும் கூட்டு பிரார்த்தனை மற்றும் கஷாய யோசனைகளை குவித்தது.
நானும் என் அப்பா போட்ட அதே பௌன்சர் ஐ முயற்சி செய்தேன். "நீ நல்ல படிச்சா நாளைக்கு நீ டெஸ்லா ல போவே", என்று சொன்னதற்கு,"டெஸ்லா எல்லாம் ஒரு கார் ஆ", என்று அவன் கேட்ட போது , சின்ன வயது முதல் கேட்டதெல்லாம் கொடுத்து வளர்த்த பாசம் நெற்றி பொட்டில் பட்டென்று அடித்தது. நாம சரியா வளர்க்கவில்லையோ என்று மனசு குழம்பும் போது ,என் மகன் புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு என் மடி மீது சாய்ந்து, நல்லா படிப்பேன், நல்ல வருவேன் , நீ கவலைப்படாதே என்று சிரித்து கொண்டே சொல்லி , ஸ்விக்கி ல ஆர்டர் போடறியா நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம், என்று கண்ணடித்து போது, "எப்படியாவது பொழச்சிப்ப டா நீ ", என்று என் நம்பிக்கை கட்டைவிரல் உயர்த்தி என்னிடம் சொன்னது "ஆத்தா நீ பாஸயிட்டே!".
Leave a comment
Upload