சென்னை தியாகராயநகர், 91, ஜி.என்.செட்டி சாலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில், இந்தியாவிலேயே முதன்முறையாக புதிதாக ₹15 கோடி மதிப்பில் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு தனிக் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான இந்நிலத்தை ஏற்கெனவே பழம்பெரும் நடிகை காஞ்சனா, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கியிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கோயிலில் நேற்று (17-ம் தேதி) காலை 7.30 முதல் 7.44 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் விசாக ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் மற்றும் தமிழ்நாடு-ஆந்திர முதல்வர்களின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பின்னர், காலை 11 மணியளவில், ஸ்ரீ பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, கடந்த 3 நாட்களாக திருமலை சிலை தயாரிப்பு கூடத்தில் உருவான பத்மாவதி தாயாரின் விக்கிரகம் நெல் தானியத்திலும் தண்ணீரிலும் 2000 லிட்டர் பால் போன்ற அபிஷேகம் செய்விக்கப்பட்டது. கடந்த 16-ம் தேதி காலை கோயில் கருவறையில் பத்மாவதி தாயார் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சதுஸ்தனா அர்ச்சனை, மூர்த்தி ஹோமம் நடந்தது. தாயாருக்கு அஸ்தபந்தன மூல விக்கிரக பிரதிஷ்டை மகாத்சயம் நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, திருமலை-திருப்பதி கோயில் ஆகம விதிகளின்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. பின்னர் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், கும்பாபிஷேக தினமான நேற்று (17-ம் தேதி) அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரை பத்மாவதி தாயாருக்கு சதுசதனா அர்ச்சனை நடைபெற்றது. 5 முதல் 6 மணிவரை மகாசாந்தி ஹோமம் பூர்ணாஹுதி, 6 முதல் 6.30 மணிவரை கும்ப உத்தப்பன, 7 முதல் 7.15 மணிவரை ஆலய பிரதட்சணா, 7.15 முதல் 7.30 மணிவரை சம்பாத்ஜய சபர்ஷனம், 7.30 முதல் 7.44 மணிக்குள் மீன லக்னத்தில் பத்மாவதி திருக்கோயிலின் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களில் ஒருசேர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்ட புனித நீர், அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மேல் அனைத்து பக்தர்களும் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதனால் தி.நகர் பகுதியே மக்கள் கூட்டத்தினால் களைகட்டியது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறுகையில், ‘‘சென்னை தி.நகரில் பத்மாவதி தாயார் கோயிலை 2 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளோம். ₹10 கோடி கோயில் அமைக்கத் திட்டமிடப்பட்டு, ₹15 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இங்கு திருப்பதி கோயிலை போன்று தினசரி அனைத்து பூஜைகளும் நடைபெறும். சென்னையில் மிக விரைவில் வெங்கடேஸ்வரா கடவுளுக்கு நிரந்தர கோயில் கட்டவிருக்கிறோம். அது, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ளது போன்றே அமைக்கப்படும். இதற்கான நிலம் வாங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற கோயில்களை கட்டுவதற்கு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
Leave a comment
Upload