ஆ ..ஆ ..என்ன அழகு எத்தனை அழகு , கோடி அழகு அந்த பெண்ணின் அழகு என்றுமே மாறாத ஒன்று தான் .
அவள் ஒரு சாதாரண பெண் என்று கூறிவிட முடியாது ..அவள் மலைகளின் அரசி .
இந்த அரசியின் வயது 200 கடந்தும் இன்னும் கம்பிரமாக அனைவரையும் தன் வசம் வசீகரித்து வருகிறாள் .
இங்கிலாந்து அரசி எலிசபெத் கூட இந்த அரசியை நேரில் பார்க்கவேண்டும் ஆசைப்பட்டது கனவாகி போய்விட்டது .
இந்த அழகிய அரசியை உலகுக்கு ஜான் சல்லிவன் என்ற வெள்ளைக்கார கலெக்டர் "மலைகளின் அரசி" என்று பெயர் சூட்டி அடையாளம் காட்டினார்.
காரணம் ஏராளமான இயற்கை அழகை தன் வசம் வைத்துள்ள அழகிய மங்கை தான் இந்த நீலகிரி மலையான மலைகளின் அரசி .
மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக அரவணைக்கும் இடம் தான் தொட்டபெட்டா சிகரம் .
கம்பிரமான மலைகள் , வெள்ளி கம்பி போல கொட்டும் அருவிகள் கூந்தலை போல அடர்ந்த மரம் செடிகள் .
புல் வெளிகள் ...கொட்டும் மழை நீரை தன்னகத்தே வாங்கி ஓடைகள் வாயிலாக சேகரிக்கும் அற்புதம் இந்த பெண்ணின் மடியில் தான் நடக்கிறது .
அவலாஞ்சி இவளின் ஒரு பசுமையான பகுதி இது உலகின் உயிர்சூழல் பகுதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது .
அற்புதமான செடிகொடிகள் மலர்கள் என்று கொட்டி கிடக்க பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இந்த மலைகளின் அரசியை அலங்கரிக்க செய்கின்றன !.
ஆச்சிரியமான பள்ளத்தாக்குகள் வானத்தை தொட்டுக்கொண்டிருக்கும் மலைகள் , அடர்த்தியான காடுகள் அதனுடே உலாவி கொண்டிருக்கும் யானை , புலி , சிறுத்தை , மான்கள் , இந்த மலையின் ஸ்பெஷல் குரங்கு கூட்டம் , ஹாய்யாக நடந்து வந்து கொண்டிருக்கும் காட்டெருமைகள் என்று இந்த அரசிக்கு ஒரு பாதுகாப்பு அரண்கள் .
இந்த அழகிய அரசியை தன் வசம் அணைத்து கொண்ட வெள்ளைக்கார சீமான்கள் பல ஆபரணங்களை இவளுக்கு சூட்டி மகிழ்ந்தனர் கண்கவரும் கட்டிடங்கள்
மணம் வீசும் பூங்காக்கள் .மலையின் ஓரங்களில் சாலைகள் .
அதிசயமான மலை ரயில் ஒரு நீண்ட தங்க மாலை .யூனிஸ்கா இந்த ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது அப்படிப்பட்ட ஆபரணத்தை இந்த மலைகளின் அரசி அணிந்துள்ளாள் .
கோத்தகிரியில் உள்ள லாங் உட் சோலை இங்கிலாந்து அரசராவி " Queens canopy" அந்தஸ்த்தை பெற்றுள்ளது .
பொட்டானிக்கல் கார்டன் , சிம்ஸ் பூங்கா , கொடநாடு காட்சி முனை , லாம்ஸ் ராக் என்று ஏராளமான அழகை போர்த்தியுள்ளது .
வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் புல்வெளியில் நீலகிரி வரையாடு கம்பிரமாக உலா வருவதை பார்க்கலாம் .
இந்த அழகிய அரசியை யார் யாரோ கையக படுத்தி களங்கப்படுத்தி கொண்டிருப்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை .
ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள் கட்டிடங்கள் என்று கட்டி இயற்கையை அழித்து கான்க்ரீட் ஜங்கிலாக மாற்றி அழகு அரசின் அழகை காயப்படுத்தி வருவது தான் வேதனையான ஒன்று .
மலைகளின் அரசி உண்மையில் ஒரு அழகான நங்கை என்று கூறுகிறார் கீதா ஸ்ரீனிவாசன் , "பிரிட்டிஷ் காலத்தில் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் லிட்டன் 1877 ஆம் வருடம் ஊட்டி மலைக்கு விஜயம் செய்து பிரமித்து போனாராம் .அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் இந்த மலை பிரதேசமான உட்டகமண்ட் ஒரு சொர்க்க பூமி என்று கூறியுள்ளார் . ஜான் சல்லிவன் ஊட்டி என்ற அழகிய அரசியை கண்டுபிடித்து மக்கள் வாழும் வாசஸ்தலமாக மாற்றியதன் விளைவு பல வளர்ச்சியை கண்டாள் . டீ , யூக்கலிப்டஸ் வாட்டல் போன்ற மரங்கள் நடப்பட இயற்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள் .
இவளின் மடியில் தன்னை ஐக்கிய படுத்தி கொண்ட உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெற சுற்றுலா என்ற ஒரு தொழில் துவங்க மக்கள் வெள்ளம் வாகனங்களில் கூட்டம் கூட்டமாக வர திணறி கொண்டிருக்கிறாள் மலைகளின் அரசி .
பிரிட்டிஷாரின் வளர்ச்சி அருமையாக தான் இருந்தது இந்த அரசி ஆரோக்கியாக தான் இருந்தாள் . தற்போதுள்ள வளர்ச்சி பெரிய பேரிடர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது .
மலை அரசி போன்ற பிரதேசங்களில் சுற்றுலாவுக்கு என்று தனி சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் அமைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது .பூட்டானை போல சுற்றுலாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தால் , இந்த அழகிய அரசியின் இயற்கை அழகை ரசித்து விட்டு வெளி உலகிற்கு இவளின் அருமை பெருமையை தெரிவித்தால் மலைகளின் அரசி மீண்டும் புன்னகை உதிர்ப்பாள் ".
ஆனந்தி என்ற இயற்கை ஆர்வலர் கூறும் போது , " சர்வதேச பெண்கள் தினத்தின் போது எங்களின் மலைகளின் அரசிக்கு ஒரு ராயல் சல்யுட் எத்தனையோ மலைகள் இருந்தாலும் இவளை போல அழகானவளும் கம்பிரமானவளும் எங்கும் இல்லை .இவளின் அரவணைப்பில் தான் எத்தனை பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .
எவ்வளவு அழகானவள். நீலகிரி பீக் என்பது அற்புதமான ஒன்று அதிலும் இந்த வெயில் காலத்தில் இன்னும் அழகாக ஜொலித்து கொண்டிருக்கிறாள் .
படுக இன மக்கள் அதிகம் இவளின் மடியில் வாழ்கிறார்கள் .
இவர்களின் ஆன்மாக்கள் நீலகிரி பீக் " மல்லாடு மலை " என்னும் அற்புத மலையில் ஐக்கியமாகிவிடுகிறார்கள் என்ற நம்பிக்கை தொடர்கிறது .
ஸ்லீப்பிங் பியூட்டி என்ற மலை அரசி அழகாக தூங்கிக்கொண்டிருப்பதை போல இருப்பதை பார்த்தால் பரவசமடைவோம் .
இவ்வளவு அழகான இவளின் கற்பை காப்பாற்றி வைப்பது நம் கடமை . இவளின் முக்கியத்துவத்தை பற்றி அறியாத பலர் இவளை காயப்படுத்தி சூரையாடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் " என்று கூறினார்.
அழகான மலைகளின் அரசிக்கு பெண்கள் தின வாழ்த்துக்கள் .
Leave a comment
Upload