உலகமே சுருங்கி விட்ட சூழலில் ,வீட்டில் இருக்கும் பெண்களிடம் "சாப்பிட்டியா?"என்று கேட்க கூட ஆளில்லாமல் மன அழுத்தத்தில் இருக்கும் போது நெடுந்தொடர்களும் அதில் வரும் பாத்திரங்களும் அவர்களுக்குள் ஒரு பந்தத்தை உரு வாக்குகிறன.
ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கூட தனதுபிரியத்திற்குரிய உறவினருக்கு என்ன ஆனதோ என்ற பரிதவிப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. சீரியல் பார்க்கும் பெண்களை பகடி செய்து பல பட்டிமன்ற பேச்சுகளும் நகைச்சுவை காட்சிகளும் வந்துவிட்டன, ஆனால் இப்போதெல்லாம் அப்படி பகடி செய்த ஆண்களே கூட தம் வீட்டு பெண்களின் அருகில் அமர்ந்து இந்த நெடுந்தொடர்களை பார்க்க துவங்கி இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
வெள்ளிக்கிழமையானால் ‘ஒளியும் ஒலியும்’, ஞாயிறு ஆனால் ‘திரைப்படம்’ என்று இருந்த நம் இல்லங்களில் இந்த நெடுந்தொடர்கள் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விதத்தை இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாய் தான் இருக்கிறது. முதலில் எல்லாம் சன் டிவி மட்டுமே இந்த சேவையை செய்து வந்தது ஆனால் தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ் என்று ஆளுக்கு ஆறு சீரியல் எடுத்து நம் இருபத்தி நாலு மணி நேரத்திற்கும் அட்டவணையை போட்டு விடுகிறார்கள். இப்படி பல பெண்களின் நேரத்தை விழுங்கும் இந்த நெடுந்தொடர்கள் நமக்கு செய்வது என்ன என்பதை உளவியல் பார்வையில் அணுகுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
சன் டிவி தொடங்கிய புதிதில் பெப்சி உமாவின் டெலிபோன் அழைப்பும், ரமணனின் சப்தஸ்வரங்களும் எவ்வளவு பிரபலமாய் இருந்ததோ அதே அளவுக்கு மெட்டி ஒலியும், மர்ம தேசமும் கூட பிரபலமாய் தான் இருந்தன(மெட்டி ஒலியில் அந்த முதல் அக்கா உண்மையிலும் பத்து மாதம் வயிற்றில் பஞ்சுடன் இருந்தார்).
மக்களை இந்த நெடுந்தொடர் பக்கம் இழுத்த முக்கியமான ஆளுமை இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். நெடுந்தொடர்கள் என்பது கொத்து கொத்தாய் நகைகளை மாட்டிக் கொண்டு வில்லத்தனம் செய்யும் பெண்மணிகளுக்கானது மட்டுமல்ல அறிவுப் பூர்வமான உரையாடல்கள் நடத்தலாம் (கையளவு மனசு), அற்புதமான பாடல்களால் நிறையலாம் (சஹானா), நகைச்சுவையும் இளமையும் ரொமான்ஸுமாக களைகட்டலாம் (ரமணி vs ரமணி) என்று நிரூபித்து காட்டியவர் கே. பி.
அதற்கு பிறகு வந்த பாலு மஹேந்திராவின் கதை நேரத்தில்’ அற்புதமான சிறுகதைகள் எல்லாம் கதையாக்கப் பட்டிருந்தன, இன்றைக்கும் அந்த சில கதைகள் என் நினைவில் உண்டு. இப்படி பட்ட சிறப்பான நெடுந்தொடர்கள் தான் இப்போதும் வருகின்றனவா என்று கேட்டால் இல்லை என்பதே பதில்
இந்த நெடுந்தொடர்களை காட்டிலும் சில நேரம் அதன் பாடல்கள் மிக பிரபலம் அடைந்து விடும். "பநி தநி தா மா ப..." என்று தொடங்கும் ப்ரேமி நாடக பாடலும் அந்த வீணை இசையும் அவ்வளவு அற்புதமானவை, அந்த பாடலுக்காக தான் முதலில் அந்த தொடரை பார்க்க தொடங்கினேன். என்னுடைய பள்ளி இறுதியில் தான் ராதிகாவின் சித்தி தொடரை எடுக்க தொடங்கினார்கள். தலைப்பு பாடலான(டைட்டில் சாங்) "கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா..." என்ற பாடலை கேட்ட உடன் நான் மாடியில் இருந்து இரவு உணவிற்காக வந்து விடுவேன்.
எங்கள் வீடு பழங்காலத்து வீடு என்பதால் சமயலறை கட்ட கடைசியில் இருக்கும், பட்டாசலில் இருக்கும் டிவியின் சத்தம் சமயலறை வரை எட்டும் என்ற போதும் காட்சிகளை காண இயலாது இதனால் ஒரு நாள் கூட தன்னால் சித்தி நாடகத்தை பார்க்க முடியவில்லை என்பது அம்மாவின் பல நாள் ஆதங்கம். அதை பற்றியெல்லாம் நமக்கு என்ன கவலை நமக்கு படிப்புக்கு டிமிக்கு கொடுக்க ஒரு சாக்கு.
சன் டிவியை விடாமல் பற்றிக் கொண்டிருந்த எங்கள் வீடு நடுவில் விஜய் டிவிக்கு மாறி தற்போது ஜீ தமிழில் தஞ்சம் அடைந்திருக்கிறோம். அந்த சேனல் ஓர் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் போலவே செயல்படுவார்கள். அனைத்து நாடகத்திற்கு வாரம் ஒரு தீம் கொடுத்திருப்பார்கள் போல, இந்த வாரம் ஹீரோயின் கோவிலில் கடினமான பரிகாரங்களை செய்ய வேண்டும் என்றால் எல்லா தொடரிலும் ஹீரோயினும் தீ மிதித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வாரம் ஹீரோ கடத்தல் மற்றும் சண்டை காட்சி, அடுத்த வாரம் குழந்தை சென்டிமென்ட், தற்போது எல்லா தொடரிலும் மறு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு திருமணத்திற்கே இங்கு அவனவனுக்கு திண்டாட்டமாய் இருக்கும் போது இங்கே ஒரே பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை கல்யாணம் செய்கிறார்கள். அகஸ்மாதாக அந்த தாலி செயின் எங்கேயாவது கழண்டு விழுந்து விட்டால் இவர்கள் அடுத்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விடுவார்களே என்று நமக்கு தான் கவலை வரும் போல!
இது நெடுந்தொடர் என்பதால் அறுபதாவது கல்யாணமா என்று கேட்டு விடாதீர்கள் ஹீரோ ஹீரோயின் எத்தனை எபிசோட் வந்தாலும் இளமையாகவே இருப்பார்கள். உங்க ஒத்துமைக்கு ஒரு அளவே இல்லையா என்று நாம் வியந்து போகும் அளவுக்கு இருக்கிறது சேனலின் திட்டமிடலும் விளம்பர யுக்திகளும், கூட்டுமுயற்சியும். ஏதாவது ஒரு சின்ன முக்கியமான காட்சியை போட்டு காட்டி இந்த வாரம் இன்னும் என்ன நடக்க போகிறது என்று காண ஆவலை ஏற்படுத்துகிறார்கள். அதிலும் “தவமாய் தவமிருந்து” என்று ஒரு தொடர் அனேகமாய் அந்த தொடரை பார்த்து நன்றாய் இருக்கும் குடும்பங்கள் கூட பிரிய வாய்ப்பிருக்கிறது அப்படி ஒரு ஹாட் சப்ஜெக்ட் எல்லாம் விசுவின் “கோதாவரி வீட்டுக்கு நடுல ஒரு கோட்டை கிழிடி” கான்செப்ட் தான்,
அந்த காலத்தில் வந்த டப்பிங் நாடகங்களில் ஜுனூன் பல காலம் ஓடியது அதனால் ஏதாவது ரொம்ப நீளமானதாக இருந்தால் இதென்ன ஜுனூன் மாதிரி இழுத்திட்டு போகுது என்பார்கள். நல்லா இருக்கே என்று இனிய இரு மலர்கள் என்று ஒரு தொடரை பார்க்க தொடங்கி வெறுத்து போயிருக்கிறேன், புது பாடல்கள் எல்லாம் சினிமாவில் பார்க்கும் முன்பே அந்த நாடகத்தின் பின்னணியில் தான் முதலில் இசைக்கும் ஆனால் ஹீரோ ஹீரோயினுக்கு நன்கு வளர்ந்த திருமண வயதில் இரண்டு பிள்ளைகள் வந்த பின்பும் அவர்கள் பார்க்க அப்படியே இருப்பதெல்லாம் ரொம்ப ஓவர், அதிலும் திரும்ப திரும்ப அதே சூது பிரிவெல்லாம் பார்க்க பலமான இதயம் வேண்டும்.
வணிகமயமாக்கலின் அத்தனை அம்சங்களையும் உள்வாங்கி கொண்ட தொடர்கள் தற்போது பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு அக்காக்களை பிரதிபலிப்பதில்லை மாறாக அவை எப்போதுமே மிகை தன்மையோடே இயங்குகின்றன. அவைகளை தொடர்ந்து பார்ப்பதன் மூலம் பார்ப்பவரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயங்கள் உண்டு என்றே நம்பத் தோன்றுகிறது.
தற்போது வரும் அனைத்து தொடர்களிலும் ஒரு மோசமான பெண் வில்லி இருந்தாக வேண்டும், குடியை கெடுக்கும் ஒரு பெண் எல்லா குடும்பத்திலும் இருப்பாள் என்பது போலவே சித்தரிக்கின்றன. இது பரபரப்பிற்கு உதவும் எனினும் இளைய சமூகத்தினர் பெண்களை பற்றி தவறாக புரிந்து கொள்ள வழிவகுக்கும் என்பது வருத்தமான விஷயம், இதை தயவு செய்து நெடுந்தொடர் இயக்குனர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
சில வயதான பெரியவர்கள் தொடுதிரை தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கிய பிறகு முடிந்து போன பழைய நாடகங்களை திரும்ப திரும்ப பார்ப்பதை அறிந்து எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது எப்படி இவர்களால் இது முடிகிறது என்று ? ஆனால் உளவியல் ஆராய்ச்சிகள் இப்படி ஏற்கனவே பார்த்த தொடர்களை பார்ப்பது அவர்களை தன்னம்பிக்கையை கூட்டும் என்றும் கடினமான உழைப்புக்கு பிறகு இப்படி செய்யும் போது அவர்களால் சுலபமாக முடியும் என்கின்றனர்.
எதனால் இந்த தொடர்கள் பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தன என்பதை உளவியல் பார்வையில் அணுகினால் அவை தினமும் ஒளிபரப்ப பட்டன. தினமும் மூன்று வேளை நமக்காக சமைக்கும் அம்மாவிடம் "எக்கா கொஞ்சம் கருவப்பில்ல இருந்தா குடுக்கா.... உன் கையால வாங்கி தாளிச்சா தான் எங்க வீட்டு கொளம்பு மணக்கும்" என்று வாஞ்சையாக கேட்டு வாங்கும் பக்கத்து வீட்டு அக்காவை போல பல சொந்தங்கள் உலவும் இடமாக இருக்கிறது இந்த நெடுந்தொடர்கள்.
அந்த நாட்களில் எல்லாம் மாலையானால் பெண்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கதை பேசுவார்கள் அவர்கள் வீட்டு ஆண்கள் வந்த உடன் "அப்ப நான் வாரேன்க்கா" என்று சொல்லி எழுந்து கொள்வார்கள்... தற்போதுள்ள நகர வாழ்வில் இப்படி அமர்ந்து உறவாட யார் இருக்கிறார்கள்... அதனால் பெண்களுக்கு ஒரு வடிகால் தேவைபடுகிறது அந்த வடிகாலாய் இந்த நெடுந்தொடர்கள் விளங்குகின்றன. யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ்ஸில் வம்பு பேசியதால் தான் நம் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் மற்ற வலிமையான இனங்களை விட பல காலம் வாழ்ந்து வருவதாக கூறுகிறார்.
. பல வீடுகளில் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க பெற்றவர்கள் இந்த நெடுந்தொடர்களும் அதில் வரும் கதாபாத்திரங்களும் மட்டுமே தனக்கு துணையாக இருப்பதாய் உணர்கிறார்கள். அந்த வகையில் இந்த நெடுந்தொடர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் நமக்குள் ஒரு ஆர்வத்தை தூண்டி நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன நம் ஆயுளையும் நீட்பிக்கின்றன என்றே தோன்றுகிறது.. சில நாட்களுக்கு முன்பு என் அம்மா உடம்பு முடியாமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார் வெளியில் வந்த பிறகும் எதுவுமே பேச இயலாத அளவுக்கு நலிந்து போயிருந்தார் ஆனால் கொஞ்ச நேரம் சென்று பேரன் பேத்தியை எல்லாம் நலம் விசாரித்த பிறகு மிக மெல்லிய தொனியில் "அந்த பேரன்புல என்னடி ஆச்சு.." என்று அவர் கேட்ட பிறகு தான் எனக்குள் மிகுந்த ஆசுவாசம் வந்தது நம்மை லகுவாக்க நமக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது.
அது நெடுந்தொடராய் இருப்பதில் என்ன குறைந்து விட போகிறது?
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.....
Leave a comment
Upload