நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது.. டுர்ர்ர்... டுர்ர்ர்..
என்றவாறு குடுகுடுப்பைக் காரன் வீட்டு வாசலில் வந்து நின்று உடுக்கை அடித்த போது காலை மணி ஆறு இருக்கும்.
இந்தக் குரலையும் உடுக்கைச் சத்தத்தையும் கேட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு.பயத்துடன் வாரிச் சுருட்டிக்கொண்டு திண்ணை யிலிருந்து எழுந்தார் சக்ரபாணி.
பேங்க் வேலையில் இந்தியா முழுக்க சுற்றி, வாழ்ந்து,ரிடயர் ஆகி சென்னையில் செட்டில் ஆகி பத்து வருஷம் ஆச்சு.பெண்,பிள்ளை எல்லாரும் படிச்சு கல்யாணமாகி குழந்தை குட்டிகளுடன் அமெரிக்காவில. .
கிராஜூவிடி, இன்சூரன்ஸ் பணம் எல்லாத்தையும் அவருடைய கவர்மெண்ட் பேங்க்ல எஃப்டில போட்டு... ஓய்வு பெற்ற பேங்க் ஊழியருக்கு எல்லாம் கூட ஒரு பர்சன்ட் வட்டி..பென்ஷன் சகிதம் ஐயப்பன் தாங்கல் ஃபிளாட்ல
மனைவி சரோஜாவோட செட்டில் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு.
ரிடயர்ட் லைப் போர் அடிக்க ஆரமிச்ச சமயத்தில் ஊர் பால்ய நண்பன் நாராயணசாமி என்கிற நாணா போன் பண்ணினார் . "சக்கு அடுத்த வாரம் நம்ம ஊர் கோவில் திருநாள் ஆரம்பம். வந்துடு.தங்கறதப் பத்தி கவலைப்பப்படாதே. எங்க வீடுதான் பாக்கி இருக்கே. நீங்கல்லாம் தான் ஒங்க வீட்ட அப்பவே அவசரப்பட்டு வித்துடீங்க. சரோஜாவையும் கூட்டிக்கொண்டுவந்து சேரு என்றார். .
சக்குக்கு ரெண்டு கண்ணுலயும் காட்டராக்ட் கூட முடிஞ்சாச்சு. வேற ஒரு தொந்தரவு கிடையாது.
ஆனால் சரோஜா அப்படி இல்லை.
தன் கால் முட்டிகளின் ஒத்துழையமையாலும்,
மற்றும்,எவ்வளவு முறை முயன்றாலும் ரயிலில் மூணு டயர் ஏசியில், கீழ் பர்த் உனக்குக் கிடையாது என்று சொல்லி,மேல் மற்றும் நடு பர்த்களை மட்டுமே பிடிவாதமாக IRCTC இணைய தளம் கொடுத்ததாலும்,..
தன்னால் ஊர் வர இயலாமையை சரோஜா தெரிவிக்க, ... அப்பாடா என்று சக்கு மட்டும் உற்சாகமாக, சுதந்திரமாகக் கிளம்பினார்.
ஒரு வாரம் ஊரில் அற்புதமாக இருந்தது. தென்காசிக்கு 40 கிமி அருகே இருந்ததால் குற்றாலக் காற்று மூலிகைத் தண்ணீர் கலந்து ஊர் முழுக்க.. கல்யாண ரிசப்ஷனில் வரவேற்புப் பெண், முகத்தில் உறைய வைத்த புன்னகையுடன் பன்னீர் தெளிப்பதைப் போல் தெளித்துக் கொண்டிருக்கும் சமயம்.
தாமிரபரணியில்அளவான இடுப்பளவு தண்ணீர். இரண்டு வேளை குளியல். கோவிலில் மதியான சாப்பாடு. நாணா வீட்டில் இருவேளை காப்பி,டிபன் என்று எல்லாம் அமோகமாக நடந்தது.
கோவில் உற்சவம் முடிந்து நாளை ஊர் கிளம்ப வேண்டும்.தினமும் வீட்டு வாசல் திண்ணையில் துண்டு விரித்துத் தான் படுக்கை.
அன்றும் அப்படிதான்.
அதிகாலையில் அந்த உயரமான குடுக்குடுப்பைக் காரன் வந்து உடுக்கை சப்போர்ட்டுடன் சத்தமாக அதட்டிப் பேச திண்ணையில் இருந்து டென்ஷன் கலந்த பயத்துடன் எழுந்து பார்த்தார் சக்கு.
. குடுகுடுப்பை கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் இருந்தான். ஈஸ்ட்மன் கலரில் தோள் முழுக்க வித விதமான துணிகள். தலையில் கட்டிய காவி முண்டாசு, அவனுக்கு ஒரு பிரத்தியேக மரியாதையை உண்டாக்குவது போல தோன்றியது. முண்டாசுக்கு கீழே நெற்றியில் கேரம் போர்டு ஸ்ட்ரைக்கர் அளவுக்கு வட்டக் குங்குமம். கட்ட பொம்மன் மீசை. அந்தக் கால சினிமா அப்பா ரங்காராவின் தெலுங்கு வேட்டிக் கட்டு.மஞ்சள் ஜிப்பா.மேல சாயம் போன கருப்புக் கோட்டு.தோளில் தொங்கிய ஜோல்னா பையில் பாதி நிரம்பிய அரிசி.கம்பீரமான தோற்றம்.
சக்கு சட்டைப்பையில் இருந்து பத்து ரூபாய் எடுத்து.. இந்தாப்பா.. என குடுக்குடுப்பையிடம் பயபக்தியுடன் நீட்ட, அலட்சியமாக அதை வாங்கின குடுகுடுப்பை."புது துணி இருந்தா போடு சாமி " என்று கூறி,உடுக்கை அடி வேகத்தைக் கூட்டினான்.
சக்கு தயங்கி...இல்லயேப்பா... என்றார்.
நாளைக்கும் வர்றேன். எடுத்து வை சாமி " என்று அதிகாரமாகச் சொல்லி நகர்ந்தான்.
சரி என தலை ஆட்டினார் சக்கு. மனசுக்குள் நாம் தான் இன்னைக்கு இரவு ஊருக்கு போகப் போகிறோமே! உன்னை ஏமாத்தியாச்சு...என்று ரிலாக்ஸ் ஆகி புன்னகைத்தார். குடுகுடுப்பை நகர்ந்தான். நாம் ஏன் இப்படி இவனுக்கு பயந்து தலையாட்டினோம் என நினைத்துகொஞ்சம் வெட்கினார்.
பல் விளக்கி கையில் நாணாவின் மனைவி கொடுத்த காப்பி டம்ளருடன் திண்ணையில் வந்து அமர,நாணாவும் வந்து சேர்ந்தான்.
"சக்கி!ஏண்டா சீக்கிரம் எழுந்துட்டே.! இன்னைக்கு ஊருக்கு போகற டென்ஷனா?."
"ஒரு எழவும் இல்ல.இந்த குடுகுடுப் பாண்டி டென்ஷன் தான். எவ்வளவு வருஷம் ஆனாலும் இந்த குடுகுடுப்பை பயம் மட்டும் போக மாட்டேங்குதுடா.நார்த்ல ரொம்ப வருஷமா பார்த்ததே கிடையாது. இப்ப இவனைப் பார்த்தா பழைய பயம் தொடருது "என்றார் சக்கி.
நானா சிரித்தார் ." ஆமாம் ஆமாம்..
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணப் பாத்தா பயம்.... என்று சொல்லி, பின் ரகசியமாக உனக்குத் தான் தெரியுமே!எனக்கு பொண்டாட்டி பயம்!" என்றார் கொஞ்சம் பெருமையுடன்.
பின் "நம்மகுடுகுடுப்பைக் காரர்களைப் பற்றி உனக்கு ரொம்பத் தெரியாது என்று நினைக்கிறேன்.
சாமக்கோடாங்கி என்றும் அழைக்கப்படும் இவங்க எல்லாம் மகாராஷ்டிராவில் இருந்து ஒரு 300 வருஷத்துக்கு முன்னாடி மதுரை பக்கம் வந்து செட்டில் ஆனவங்கனு சொல்றாங்க.ஆரம்பத்துல சேர்ந்து இருந்தவங்க குரூப் குரூப்பா பிரிஞ்சு தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சென்று விட்டார்களாம் .ரொம்ப கட்டுக்கோப்பானவர்கள். ஜக்கம்மா , அங்காள பரமேஸ்வரி போன்ற தெய்வ வழிபாடு உண்டு. ஊரைத் தாண்டி சுடுகாட்டு பக்கம் கூடாரம் போட்டுக் கொண்டு தங்குவாங்க. கொஞ்ச நாள் இருந்து,அப்புறம் அடுத்து ஊருக்கு போய்டுவாங்க.சுடுகாட்டில் படையல் வைத்து ஜக்கம்மாவை ஒவ்வொருவரும் வழிபடுவார்கள். என்றும், வழிபாடு பூஜைக்கு பின் அந்த ஊரில் அண்மையில் இறந்த ஏதாவது ஒருவரின் ஆவியை உடம்பில் ஏற்றிக்கொண்டு ( அல்லது ஆவி தானாவே ஏறிடுமோ ? )இரவு ஒரு மணிவாக்கில் ஊருக்குள் நுழைந்து தெரு முனையில் இருந்து பொதுவாக,தெருவுக்கு குறி சொல்வார்கள்..பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று நின்று வீட்டுக்காரர்களுடைய கடந்த காலம் பற்றி கூறி அப்புறம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றும் குறி சொல்வார்கள்.
அதாவது அவர்களுக்குள் ஏறி இருக்கும் ஆவியானது, ஜக்கம்மாவின் அனுமதியுடன் சொல்லும் என்று வச்சுக்கோ. ஆவி சமீப காலத்தில் வெளிவந்த உள்ளூர் ஆவியாக இருப்பதால் அதற்குப் பெரும்பாலும் ஊரில் எல்லா வீட்டிலும் நடந்த விஷயங்கள் தெரிந்திருக்குமாம். (பெண் ஆவியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் டீடைல்ட் ஆக தெரியும்போல !) அதனால் இறந்த காலம் பற்றி குடுகுடுப்பை சொல்லுவது எல்லாம் கனகச்சிதமாக இருக்குமாம்.
எதிர்காலம் பற்றி கூறுவது ஒரு அளவுக்குத் தான் சரியாக இருக்குமாம்.இதில் உள்ள, உண்மைத் தன்மையானது .. குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரரின் பக்தி, உடுக்கையின் சக்தி,உடலில் ஏறிய ஆவியின் அறிவு,அவர்கள் சுடுகாட்டில் செய்யும் மையின் மகிமையை இவற்றைப் பொருத்தும் இருக்குமாம். எல்லாவற்றிற்கும் மேலாக இது ஜக்கம்மாவின் விளையாட்டு என்பார்கள்.
பெரும்பாலும்குடுகுடுப்பைக் காரர்கள் உடும்புத் தோலை ( உடும்பை எங்கேயிருந்து தான் பிடிப்பார்களோ?) பலாமரக் கட்டையில் செதுக்கிய சிறிய குடுக்கை மீது கட்டி உடுக்கு ஆக்கி விடுவார்கள். இந்த உடுக்கு சிவபெருமான் அவர்கள் இனத்துக்கு அளித்த தனித்துவமானபரிசு என்று அவர்களுக்கு நிரம்ப பெருமை உண்டு.
இரவு ஒரு மணி பக்கத்தில்ஊருக்குள்ள ஒரு ரவுண்டு வந்து தெரு ஜோசியம்,வீட்டு ஜோசியம், எல்லாம் சொல்லிவிட்டு காட்டுக்கு போய் விடுவார்கள் .ஆவி அங்கே அவர்களிடம் இருந்து அகன்று ரெஸ்ட் எடுக்கப் போக,அதிகாலை 5 மணிக்கு திரும்பி ஊருக்குள் வந்து ஒவ்வொரு வீடாகச் சென்று துணி மற்றும் பொருள் பெற்றுக் கொள்வார்கள். ..
இப்போ அவர்களைப் பார்த்து" ஏம்பா நேத்தி ராத்திரி வந்து எனக்கு இப்படி மோசமா குறி சொன்ன?என்று யாராவதுகேட்டால் " சாமி! ஜக்கம்மா தான் சாமி சொல்லுச்சு.எனக்கு ஒன்னும் தெரியாது என்று கை விரித்து விடுவார்கள். என்று நிறுத்தினார் நானா.
" நானே பயந்து போய் இருக்கேன். நீ ஏம்பா இவ்வளவு குடுகுடுப் பாண்டி மற்றும் ஆவி விவரங்கள் எல்லாம் கொடுத்து என்னை இன்னும் எக்கச்சக்கமா பயமுறுத்துற?" என்று சோகம் இழயோடச் சிரித்தார் சக்கு.
"இந்த ஊருக்கு இன்னிக்கு நீ ஜம்முனு ரயிலில் வந்து ஸ்டேஷனில் இறங்குற. ஊருக்குள்ள வர நல்ல ரோடு இருக்கு. பஸ்ல ஏறி தாமரைக் குளம் ஸ்டாப்ல இறங்குற. டக்குனு நம்ம வீட்டுக்கு பொடி நடையில வந்துடறே இல்லையா?
இதெல்லாம் நீ சின்ன வயசுல இருந்த போது சுமாரா 60 வருஷம் முன்னாடி எல்லாம் முடியுமா?"
" இல்லடா. சான்ஸே இல்லை. "
என்றார் சக்கு. "என் ஞாபகத்துல அப்பல்லாம் இந்த இடம் ஒரே வனாந்தரமா இருந்தது. ரயில்வே ஸ்டேஷனோ பஸ் ஸ்டாண்டோ போகணும் என்றால் சேர்மாதேவி தான் போகணும் .ஏழு கிலோமீட்டர் தூரம் மாட்டுவண்டில கல்,மண் தடத்தில போகணும்.அவசரத்துக்கு ஆஸ்பத்திரி போக தாமரபரணி ஆத்த இறங்கிக் கடக்கணும். இதெல்லாம் பார்த்துத் தானே எங்க அப்பா இங்க வீடு நிலம் எல்லாம் வித்துட்டு எங்களை சென்னை கூட்டிட்டு போய் விட்டார்."
"ஆனா இப்போ பாத்தியா ?இந்த ரோடு, பஸ், ரயில்வே ஸ்டேஷன்,எல்லாம் வந்ததால பின்னாலயே
ஹைஸ்கூல்,ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேஷன், போஸ்ட் ஆபீஸ், இ மய்யம் ரேஷன் கடை இன்னும் என்னென்னவோ வந்துட்டுது.இது எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா.? இப்ப வந்த இந்த குடுகுடுப் பாண்டி பாக்யநாத்தோட தாத்தா தன்ராஜ் தான்." என்றார் நாணா.
"பாக்கியநாத்,தன்ராஜ்... பேர் எல்லாம் சூப்பரா இருக்குப்பா.
ஜக்கம்மாவே ஆவி உருவத்தில் தன்ராஜ் தாத்தா வழியா வந்து வரம் ஏதாவது கொடுத்தாங்களா?"
"அப்படித்தான் வைத்துக் கொள்ளேன். உனக்குபோர் அடிக்கவில்லை என்றால் அந்த தாத்தா குடுகுடுப் பாண்டி கதையை சொல்றேன். அந்த காலத்துல இவரை நீ உன்னோட சின்ன வயசுல பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு."
"சொல்லு. நிறைய டைம் இருக்கே. தவிர நீயே கதை என்று தானே சொல்ற.,!"
"வா ஆத்தங்கரைக்குக் குளிக்கப் போகலாம்.அப்படியே கதைய சொல்றேன். செவி வழியாகக் கேட்டது தான். கொஞ்சம் எமோஷன், சஸ்பென்ஸ் எல்லாம் கலந்து கொடுக்கிறேன்.அந்த காலத்து சினிமா கதை மாதிரி மசாலாவுடன் இருக்கும்."
கிளம்பினவுடன் நாணா ஆரம்பித்தார்.
1960களில் இந்த ஊர் ஒரு அப்பட்டமான குக்கிராமம் என்றுஉனக்குத் தெரியும்.ஒரு வசதி கிடையாது. போஸ்ட் ஆபீசே ஊருல கிடையாது.மூணு கிலோ மீட்டர் தள்ளித் தான். மின்சாரம் கிடையாது. ரோடு கிடையாது.
அந்த காலத்துல ஊர்ல கிட்டத்தட்ட நூறு வீடு இருந்திருக்கும். வெகு சிலரைத் தவிர மற்ற யாருக்கும் ரொம்ப வசதி எல்லாம் கிடையாது.
இப்போ கோவிலுக்கு எதிர பெரிய பழைய மாடி கட்டிடம் ஒண்ணு இருக்கு இல்லையா? அதுதான் திருவேங்கடத்தோட வீடு. திருவேங்கடம் ஒரு வக்கீல். பெயருக்குத்தான் வக்கீலே தவிர பிராக்டிஸ் பெரிசா ஒண்ணும் கிடையாது. ஆனா வசதி படைத்தவர். நிறைய நில புலன். வண்டி மாடுகள். ஆட்கள் என தர்பார் வாழ்க்கை.வயசு அம்பது இருக்கும்.
ஒரே பிள்ளை மெட்ராஸ்ல காலேஜ் படிக்கிறான்.மனைவி இறந்து போய்விட்டாள். .அந்த காலத்துல முதல் மனைவி இருந்து அல்லது இறந்து இரண்டாவது கல்யாணம் பண்ணிப்பது எல்லாம் சர்வ சாதாரணம். இவ்வளவு வசதி இருந்தும் ஏனோ இவர் பண்ணிக்கலை.. பையன் முரளி புத்திசாலி.நல்லஅழகு,குணம்.
..பையனுக்கு இன்னும் கல்யாணம் பண்ணலையா?...என்று எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் "அதுக்குள்ள என்ன அவசரம். முதல்ல படிப்பு முடிச்சுட்டு நல்ல வேலைல சேரட்டும். அப்புறம் பண்ணலாம். பிறகு நான் காசி ராமேஸ்வரம் எல்லாம் போய் இந்த கட்டைக்கு நல்ல வழியும் தேட வேண்டாமா?"என்பார்.
அப்படி இருந்த அவர் திடீரென்று ஒரு நாள் தன் ரூட்டை மொத்தமாக மாற்றி விட்டார்.
அவருடைய கணக்குப்பிள்ளையும் வக்கீல் குமாஸ்தாவுமான சுந்தரத்தின் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு சாப்பிடச் சென்ற போது அலமேலுவைப் பார்த்தார். ஆடிப் போய்விட்டார். இப்படி ஒரு அழகா?
அலமேலு சுந்தரத்தின் தங்கை. சுந்தரம் வயதில் பாதிதான் இருப்பாள்.
. பெற்றோர் மறைவுக்குப்பின் அண்ணன் சுந்தரம் தான் எல்லாம்.எட்டாவதுடன் படிப்பை நிறுத்தி விட்டிருந்தாள். பர பர என்று வீட்டு வேலை எல்லாம் செய்தாள்.அழகாக வாசலில் புள்ளிக் கோலம் போட்டாள்.கிணற்றில் தண்ணீர் இறைத்தாள் .சிரித்த முகத்தோடு எல்லாரையும் வரவேற்றாள்.
யோசித்தார் திருவேங்கடம். நம் வயதான காலத்தில் நம்மை யார் கவனித்துக் கொள்வது?படுத்துவிட்டால் பார்த்துக்கொள்ள ஆள் வேண்டாமா?நம் பையன் நிச்சயமா நம்ம விட்டு வெளியூர் போயிடுவான்....என்பது போல தன் சபலத்துக்கு நியாயம் கற்பித்துக் கொண்டார்.
அடுத்த நாளே சுந்தரத்தை தனியாக கூப்பிட்டு தன் ஐடியாவை சொல்லி அலமேலுவை தனக்கு மணம் முடித்து தரச் சொன்னார். எல்லா செலவும் தனது என்றார்.ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கல்லூர் பக்கம் ஒரு ஏக்கர் நிலம் சுந்தரம் பெயரில் பதிவு செய்து தருவதாகச் சொன்னார்.
கூடவே ஒரு ஜோடி மயிலைக் காளைகளும் சின்ன வில் வண்டியோடு தருவதாகவும் சொன்னார்.
உடனே ஒப்புக்கொண்ட சுந்தரம் திருவேங்கடத்தின் தலையில் அடிக்காத குறையாக சத்தியமும் செய்து கொடுத்தான்...
வீட்டுக்கு வந்த சுந்தரம் மனைவி
சாந்தாவிடம் இது பற்றி மிக சந்தோஷமாக சொல்லச் சொல்ல எதிர்பார்ப்புக்கு மாறாக..சாந்தமான
சாந்தா,துர்க்கை அம்மன் போல மாறி குதித்தாள்.
பம்பாயில் ஹோட்டல் வைத்திருக்கும் அவள் தம்பி ஞானசேகரனுக்கு அலமேலுவை மணம் செய்து கொடுக்கிறோம் என்று சுந்தரம் ஒப்புதலோட அவனிடம் ஏற்கனவே தான் சத்தியம் பண்ணி விட்டதை நினைவூட்டினாள்.
பதிலுக்கு ஞானசேகரன் தன்னை அவனுடைய பம்பாய் ஹோட்டலில் ஒரு பார்ட்னராக ஆக்குவதாக கூறியதையும் சொன்னாள்.
திருவேங்கடம் தருவதாக கூறிய கல்லூர் நிலம் பைசா பெறாத கட்டாந்தரை என்றும் அவருடைய ஓட்டை வில் வண்டியாலும் டி.பி.வந்த நோஞ்சான் மாடுகளாலும் செலவு தான் எகிறுமே தவிர தம்படி பணம் தேராது என்றும் எடுத்துக் கூறினாள்.
சுந்தரமும் பதிலுக்கு அவள் தம்பியின் பம்பாய் ஹோட்டல் ஒன்றும் தாஜ்மஹால் ஹோட்டல் கிடையாது என்றும்........
பார்ட்னர் ஆனா பணம் ஒண்ணும் வராது.பதிலுக்கு உன் மிச்ச வாழ்நாள் முழுக்க தம்பி ஓட்டலுக்கு இட்லி மாவு அரைத்தே சாக வேண்டியிருக்கும் என்றும் கூறினான்.
இருவருக்கும் சண்டை உச்ச ஸ்தா யியை எட்டியது.ஆனால் சுந்தரம்
விட்டுக்கொடுப்பதாக இல்லை..
அடுத்த மாசம் கல்யாண தேதி வைக்கலாம் என்று முடிவு செய்த
திருவேங்கடம் இந்த விஷயத்தை பற்றி வெளியே ஒத்தரிடம் மூச்சு விடவில்லை.சுந்தரத்திடமும் இந்த ரகசியத்தை காக்கச் சொல்லியிருந்தார்.முக்கியமாக சென்னையில் இருக்கும் மகன் முரளிக்கு தெரியக்கூடாது என்று இருந்தார். தெரிந்தால் 'இந்த வயசுல உனக்கு எதுக்குப்பா இந்த கருமம் எல்லாம்' என்று சண்டை போடுவான் என்ற பயம் தான்.
அடுத்த நாள் உள்ளூர் ஜோசியர் வெங்கடேசனை வரவழைத்தார்.
திருவேங்கடத்துக்கு ஜோசியத்தில் அலாதி நம்பிக்கை உண்டு என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் வெங்கடேசனின் ஜோசிய அறிவு மீது அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் வேறு வழி, இல்லாமல்,நேரமும் இல்லாததால் ஆபத்துக்கு பாவம் இல்லை என்பது போல் வெங்கடேசனை அழைத்திருந்தார். தன்னுடைய ஜாதகத்தையும் அலமேலு ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்க்க சொன்னார்.
வெங்கடேசனுக்கு ஜோசியம் ரொம்ப பிரமாதமா தெரியாட்டாலும் குறிப்பு மட்டும் அதிகம். திருவேங்கடத்தின் உள்ளம் அறிந்து..ஜாதகம் விசேஷமா பொருந்துது. எட்டு பொருத்தம் இருக்கு..என்கிற மாதிரி சொல்லி அடுத்த மாசம் ஒரு முகூர்த்தத்தையும் நிச்சயம் பண்ணிட்டார்.
இந்த விஷயம் சுந்தரம் வழியாக சாந்தாவுக்கு தெரிந்தது.சந்தா புத்திசாலி.கல்யாணத்தை எப்படி யாவது நிறுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டாள் .
சற்று நிதானமாக திருவேங்கடம் பற்றி யோசித்தாள்.
அவளுக்கு வெங்கடேசன் அரைகுறை ஜோசியன் என்று நன்றாக தெரியும். திருவேங்கடத்தின் ஜோசிய நம்பிக்கையும் தெரியும். திருவேங்கடத்துக்கு குடுகுடுப்பாண்டி சொல்லும் குறியில் கண்மூடித் தனமான நம்பிக்கை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.
அன்று மாலை தாமிரபரணி கரையில் ஊர் எல்லையில் உள்ள சுடுகாட்டுக்கு சென்றாள்....
ஒரு நிமிஷம் கதையை நிறுத்தி கனைத்துக் கொண்டார் நாணா.
" கதை சொல்றேன்னு ஆரம்பிச்சு அந்த காலத்து டைரக்டர்கள் பீம்சிங்,கே எஸ் கோபாலகிருஷ்ணன் விட்டலாச்சாரியா போன்ற எல்லார் கதையும் அவியலாக்கி சொல்றியேப்பா. நியாயமா? " என்றார் சக்கி.
"பாக்கி கதையும் கேட்டுட்டு அப்புறம் சொல்லு கடைசில பாரதிராஜா கூட வருவார். " என்ற நாணா தொடர்ந்தார்.
இப்போது நம்ம குடுகுடுப்பைக்காரருடைய தாத்தாவான தன்ராஜ் பற்றி ஒரு சிறு அறிமுகம் தேவை. கிட்டத்தட்ட அவரும் பார்க்க தன் பேரன்.. இப்போ இருக்கிற குடுகுடுப்பை பாக்யதாஸ்.. மாதிரி தான் இருந்தார்.
அவர் குறி சொல்லும் போது ஜக்கம்மா அவருடைய நாக்கில் நடனமாடுவாள் என்று ஊரில் எல்லாரும் சொல்வார்கள். நடுராத்திரி ஒரு மணிக்கு குடுகுடுப்பையோடு அவர் ஊருக்குள் வந்தார் என்றால்அவர் சொன்ன நல்லது கெட்டது எல்லாமே நடக்கும் என்று ஊர் நம்பிக்கை.
திருவேங்கடத்துக்கோ கேட்கவே வேண்டாம்.வழக்கமாக ஜோசியர் வெங்கடேசனோ, வேறு யாரோ, என்ன ஜோசியம் சொன்னாலும் நமது குடுகுடுப் பாண்டி தன்ராஜ் இரவில் வரும்போது,என்ன குறி சொல்கிறார் என்பதை காவல்காரர் வழியா அறிந்துகொண்டு அப்புறம் தான் முடிவு எடுப்பார். .
அப்படியே தன்ராஜ் ஒரு நாணயமான குடுகுடுப்பைக்காரர் என்றும் காசுக்காக பொய்யாக குறி சொல்ல மாட்டார் என்பதும் தெரிந்த விஷயம் தான்.
இவை எல்லாத்தையும் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள் சாந்தி.
சுடுகாட்டு எல்லையில் கூடாரங்களில் வசித்துக் கொண்டிருந்த குடு குடுப்பை குடும்பக் காரர்கள் சிலரிடம் கேட்டு தன்ராஜைக் கண்டுபிடித்தாள் சாந்தி.
அவரை தனியாக கூட்டிக் கொண்டு போய் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கி உதவி கேட்டாள்...செய்வேன்..என்று
ஜக்கம்மா மீது சத்தியம் பண்ணச் சொன்னாள்.
முதலில் அவளைக் காலில் இருந்து எழச் சொன்னார் தன்ராஜ்.
உதவி செய்வதாக சத்தியம் செய்தால் தான் எழுந்திருப்பேன் என்றாள்." என்னடா இது வம்பா போச்சு. சரிமா எழுந்திரு. பண்ணித் தொலைக்கிறேன் "என்றார் தன்ராஜ்.
டக் என்று எழுந்து நின்ற சாந்தி
" நீங்க ஒரே ஒரு பொய் சொல்லணும்.
அதுவும் நடுராத்திரி ல குறி சொல்லும் போது" என்றாள்.நடு ராத்திரி குறி சொல்வது நானி ல்லம்மா. அந்த சக்கம்மாவே தான் சொல்லுதா." என்ற தன்ராஜை அடக்கி
"அதெல்லாம் தெரியாது. நான் சொல்றதைத் தான் நீங்களும் ஜக்கம்மாவும் சொல்லணும் ".என்ற
சாந்தி,
"என் நாத்தனார் அலமேலுவின் விருப்பத்துக்கு எதிரா கிழவன் திருவேங்கடம் அவளை திருமணம் செய்ய எண்ணுகிறான். அலமேலு அண்ணனான என் கணவனும் அதற்கு உடந்தை. பெண் பாவம் பொல்லாது என்பதால் நீங்கள் அலமேலுவை காப்பாற்ற வேண்டும்." என்றெல்லாம் விவரித்து விட்டு,
"அவர் வீட்டு வாசலில் நாளை இரவில் குறி
சொல்லும்போது 'அந்தப் பொண்ணு அலமேலுவ கட்டிக்கிட்டா இந்த வீட்டுக்கார கிழவன் வாந்தி பேதி வந்து ஒரே வாரத்தில சாவான் 'னு சொல்லணும். நீங்கள் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டீங்கன்னா அலமேலு விஷம் குடித்து இறப்பது நிச்சயம். "என்றாள்.
எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் முடியாமல் தன்ராஜ் தன் விதியை
நொந்து சரி.. இந்த விஷயத்தை சக்கம்மா பொறுப்பிலேயே விட்டுவிடுகிறேன். காப்பாத்து தாயீ" என்றார்.
அடுத்த நாள் காலை திருவேங்கடம் வீட்டுக்கு அவர் மகன் முரளி சென்னையில் இருந்து திடீர்னு வந்து சேர்ந்தான்.
திருவேங்கடத்துக்கு ஒரே ஆச்சரியம்.ஆனால் இவருடைய நடக்கப் போகும் திருமணம் பற்றி முரளிக்கு தெரிந்திருக்கவில்லை என்பது அவனுடன் பேசியதில் அவருக்குப் புரிந்தது.. வாரக் கடைசி ரெண்டு நாள் லீவு இல் இருந்து விட்டு திரும்பச் சென்னை போவதாக கூறினான். அப்பாடா என்ற நிம்மதியானார் திருவேங்கடம்.
அன்று இரவு குடுகுடுப்பை தன்ராஜ் ஏக டென்ஷனில் இருந்தார்.
நள்ளிரவு சுடுகாட்டு அர்த்த ஜாமப் பூஜையை தவிர்த்தார். இன்று நாம் சொல்லப்போவது அப்பட்டமான பொய். இதிலே இறந்து போன ஆவி, ஜக்கம்மா எல்லாரும் சாட்சிக்கு வேறயா.வேண்டாம்பா."என்று நினைத்திருக்கலாம்.
நள்ளிரவு 12 மணிக்கு கிளம்பி ஊருக்குள்ள சென்று திருவேங்கடம் வீட்டுக்கு வெளியே நின்றார். வீட்டு வேலை/ காவல் காரன் பெரியசாமி வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தான்.
அப்பாடா, நாம் சொல்லப் போற பொய்யான குறியை திருவேங்கடம் கிட்ட சொல்லிடுவான் இந்தப் பெரியசாமி என்று, தான் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனத்தை இரு முறை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டார்.
" அந்தப் பொண்ணு அலமேலுவை................ சாவான்.."
ம்ம் சரி என்று பெரியசாமிக்கு நன்றாக கேட்கும்படி அவன் கிட்டே சென்று நிஜமாகவே குறி சொல்ல ஆரம்பிக்க உடுக்கையை எடுத்தார். குறி சொல்லும்போது உடுக்கடிக்காமல் அவர் வாயிலிருந்து வார்த்தையை கிளம்பாது.
டிர்ர் டிர்ர் என்று சொல்லி உடுக்கை குலுக்கிப்பார்த்தார்.... ஐயய்யோ சத்தமே வரவில்லையே... கண்ணருகில் வைத்துப் பார்த்தால்
உடுக்கில் உடும்புத் தோல் கிழிந்து. இருந்தது. பெருச்சாளியோ ஓணானோ ஏதோ ஒன்று கூடாரத் துக்குள் பசியில் இதைப்போய் கடித்துத் தொலைத்து இருக்கிறது போல. என்ன செய்வது? உடுக்கை சத்தம் இல்லாமல் குறி வாயில் வராதே..? என்று கலங்கினார்.
"ஹ்ம்ம் ஒரு பெண் கேட்டாள் என்று மயங்கிப் பொய் சொல்லத் துணிந்தாயா பாதகா.." என்று ஜக்கம்மா கத்துவது போல் தோன்றியது. உடம்பு பூரா நடுங்க வியர்த்து கொட்ட அங்கிருந்து தம் பிடித்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டார்.
நேராக சுடுகாடு பக்கம் தன் கூடாரத்தில் போய் விழுந்தார்.
அலமேலு வீட்டில் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவு இரண்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பத் திட்டம். திருவேங்கடத்தின் பிள்ளை முரளிக்கு ஒரு வாரம் முன்பே கடிதம் எழுதிஇருந்தாள்.
"நீ என்னை காதலிப்பது உண்மையானால் வரும் சனி க்கிழமை ஆரம்பிச்ச உடனே இரவு ரெண்டு மணிக்கு எப்படியாவது என் வீட்டுக்கு வந்து என்னை கூட்டிக்கொண்டு சென்னை சென்று விடு. இல்லாவிட்டால் உனக்கு மனைவியாவதற்கு பதிலாக சித்தி யாக வேண்டி இருக்கும் ஜாக்கிரதை. உனக்குஎல்லா விதத்திலும் வில்லன் உங்க அப்பன் தான் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்..... என்கிற தொனியில் எல்லா விஷயத்தையும் புட்டு புட்டு வைத்துஎழுதி இருந்தாள்.
ஒண்ணே முக்கால் மணிக்கு சொந்த வீட்டில் இருந்தே திருடன் போல் பதுங்கிக் கிளம்பிய முரளியை வாசலில் வேலைக்காரன் பெரியசாமி அரை குறையாகப் பார்த்து "டேய் யாரது இந்த வேளையில. திருட்டுப்பய புள்ள. "என்றுகூப்பிட பதில் சொல்லாமல் முரளி ஓடவே ஆரம்பித்தான்.ஓடு ஓடு என்று
ஓடிச்சென்று சுந்தரம் வீட்டு வாசலில் காத்திருந்த அலமேலுவையும் சேர்த்து இழுத்துக் கொண்டு...நிஜமாகவே..ஊரை விட்டு ஓட ஆரம்பித்தார்கள்.
மேலத் தெருவுக்கு வந்து சேர்ந்த போது திருவேங்கடம் வீட்டு திருடனைப் பிடிக்க பெரியசாமி தலைமையில் ஒரு கும்பல் லாந்தர் விளக்குகளுடன்அலைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
" சுடுகாட்டு வழியா போயிடலாம். இல்லைனா நம்ம பிடிச்சிடுவாக ஆனா தாமிரபரணியத் தாண்டணும்.
அங்கன இருந்து அஞ்சு மைலு சேர்மதேவி ரயில் டேசன்.6 மணிக்கு வடக்கால போற வண்டி வருது." என்ற முரளி அலமேலுவுடன் மாரத்தான் ஓட்டத்தை தொடர்ந்தான்.
சுடுகாடு போய் பார்த்தபோது நில வொளியில் பக்கத்தில் ஓடிய தாமிரபரணியில்ஏகப்பட்ட தண்ணீர் நொப்பும் நுரையுமாக. மேலணையைத் திறந்திருக்காக போல. குறுக்கால நடந்து கடக்க முடியாது.
அருகில் இருந்த கூடாரத்தில் நுழைந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி உதவி கேட்டார்கள். தூக்கம் கலைந்து எழுந்த தன்ராஜ் அரைகுறை வெளிச்சத்தில் இவர்களை ஆவிகள் என்று முதலில் நினைத்துக்கொண்டு "ஐயா, அம்மா மன்னிச்சிடுங்க. இன்னைக்கு என்னால உங்களுக்கு படையல் வைக்க முடியல. நாளைக்கு செஞ்சுடுதேன்."
என்று சொல்ல,
முரளி" எங்களுக்கு படையல் கிடையல் ஒன்றும் வேண்டாம். உங்ககிட்ட ஒரு மூங்கில் பரிசில் இருக்கே அதுல எங்கள வெச்சு ஆத்த தாண்டி விட்டுடுங்க போதும். ஆளுங்க எங்கள துரத்துறாங்க." என்றான்.
வேறு எந்த விவரமும் அவர்கள் சொல்லும் மனநிலையில் இல்லை.
மனம் இளகிய தன்ராஜ், குடுகுடுப்பைக்காரர்கள் உபயோகத்துக்காக இருந்த சிறிய பரிசில் ஒன்றில் முரளியும் அலமேலுவையும் ஏற்றி அக்கரை சேர்த்தார்.
அலமேலுவும் முரளியும் சென்னை சேர்ந்து திருமணம்.செய்து கொண்டார்கள்.அப்புறம் ரொம்ப நாள் ஊருப் பக்கம் வரவே இல்லை.
கடைசி வரை தன்ராஜக்கு ஜக்கம்மா
தன்னை பொய் சொல்லாமல் தடுத்து,
அதே சமயம் காதலர்களையும் ஒன்று சேர்த்து விட்டாள் என்று தெரியாது. பாவம்!"
என்று முடித்தார் நாணா .
"வடக்கே போகும் ரயில் ஏறி ஓடிப் போய்விட்டார்கள் நம்ம ஹீரோவும் ஹீரோயினும் . சரி தான். ஆனால்
கதை சொல்வதற்கு முன்னால்
நீ என்னவோ இந்த தாத்தா குடுகுடுப் பாண்டி தான் இந்த ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து எல்லா விஷயமும் வரக் காரணம் என்று கூறினாயே. அது எப்படி?"
என்றார் சக்கு.
அப்படி கேளு. என்றார் நாணா. ரெண்டு காரணம் இருக்கு.
ஒன்று:
ஊரை விட்டு அலமேலுவுடன் ஓடிப்போன முரளி கல்யாணம் முடிந்து,கஷ்டப்பட்டு உழைத்து ஐஏஎஸ் பாஸ் பண்ணி , ரயில்வே மினிஸ்ட்ரியில் பெரிய இடத்துக்கு வந்த பின், சண்டை போட்டு நம்ம ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் வாங்கிக் கொடுத்தார்.ஸ்டேஷன் பக்கத்தில் இல்லாமல் நாம் அலமேலுவுடன் எப்படி எல்லாம் அலைய வேண்டி இருந்தது என்ற எண்ணம் காரணமா இருக்கலாம்.
இரண்டு:
தன்ராஜ் மீது இருந்த மரியாதையாலும் நன்றிக்கடனாலும் குடுகுடுப்பைக்காரர்கள் சமூகத்துக்கு, அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றதுக்கு, அரசாங்கம் 'கணிக்கர்கள்' என்ற பழங்குடி இனப்பேரில் அங்கீகாரம் அளிப்பதில் முரளி ஐ.ஏ. எஸ் பெரும் பங்கு வகித்தார். இப்போ உள்ள திருநெல்வேலி கலெக்டர் நம்ம குடுகுடுப்பைக்காரர் பாக்கியநாத்துடைய அண்ணன் மகன் தான் தெரியுமா?" என்று முடித்தார் நாணா.
தன்னுடைய ஒரு புது வேட்டி, ஒரு புது சட்டை இரண்டையும் நாணா கையில் கொடுத்து நாளை காலையில் குடுகுடுப்பாண்டி பாக்ய தாசிடம் கொடுக்கச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டார் சக்கி.
Leave a comment
Upload