மகளிர் இன்று_ வானளாவிய சாதனைகள், வியக்கும் வளர்ச்சிகள் ,அட போட வைக்கவும் ஆச்சரியப்பட வைக்கும் பல்வேறு வெற்றி சிகரங்களை எட்டிப் பிடித்துள்ளனர். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ,பிரமிக்க வேண்டிய விஷயம், நினைக்க நினைக்க புல்லரிக்க வைக்கும் பல தருணங்கள் இதில் அடங்கும்.
இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இன்னும் தங்களை ஒரு கூட்டுக் புழு போல் சுருக்கிக் கொண்டும் குறுக்கிக் கொண்டும் தான் பல நேரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இனிய தோழிகளே!!! மிக அழகாக குடும்ப பொறுப்பை எடுத்து நடத்தி எல்லோரையும் அருமையாக கவனித்து, கடமைகளை முதன்மையாக கருதி செய்யும் அனைவரையும் தலை வணங்குகிறேன்.
நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.
மற்றவர்களுக்காக இத்தனை செய்த தோழியே நமக்காக நாம் என்ன செய்தோம்? என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நமக்கான நேரத்தை நாம் ஒதுக்கி நமக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும்.
நம் உடல் நலம் சார்ந்தும் மனநலம் சார்ந்தும் நமக்காகவே நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.இது சுயநலம் அல்ல!! சமுகத்திற்கான நலம்!!
ஏனென்றால் குடும்பத்தில் இருந்து தான் சமூகம் தொடங்குகின்றது. பெண்ணில் இருந்து தான் குடும்பம் தொடங்குகின்றது.
பல நேரங்களில் மகாராணியாய் நாம் இருந்தாலும் சில நேரங்களை மனக்குமுறலோடு தான் கடக்க வேண்டி உள்ளது.
அந்த மனக்குமுறலை மகிழ்வாய் மாற்றி ஒவ்வொரு நொடியையும் நாம் அனுபவித்து வாழ வேண்டும். வைராக்கியமாய் வருத்தமாய் நம்மை கடந்து எத்தனையோ காலங்கள் போயிருக்கும். வழித்துணையாய் வானமே எல்லை போல் இந்த வாழ்க்கை நம் கண்முன்னே காத்திருக்கிறது.
சின்னஞ்சிறிய சிறகை அடித்து நம் மனதை பரவசமாக்கும் பட்டாம்பூச்சியைப் போல நாமும் சிறகடிப்போம்!! உலகை வசமாக்குவோம்!!
நமக்கான பாதையை நாம் தான் உருவாக்க வேண்டும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய இடங்களில் சரியாகவும், விடாப்படியாக இருக்க வேண்டிய இடங்களில் உறுதியாகவும், கேள்விக்கான பதிலாகவும், மாற்றத்திற்கான விதையாகவும் நாம் தான் மாற வேண்டும். அழுது புலம்புவதற்கும் கவலையோடு இருப்பதற்கு மட்டுமல்ல வாழ்க்கை
வாழ்க்கை வாழ்வதற்கே!!!
அணு அணுவாக ருசித்து ரசித்து நீயே உனக்கான ஆசிரியராய், விமர்சகராய் , தோழியாய் வாழ்ந்தால் இன்று மட்டுமல்ல என்றுமே மகளிர் தினம் தான்.
"நீ கேட்டு இருந்தா நான் வேண்டானா சொல்லி இருக்க போறேன்" என்ற வார்த்தையைக் கேட்கும் வரைக்கும் நாம் போக வேண்டாம், அதற்கு முன்னராகவே தெளிவாகவும், துடிப்பாகவும் செயல்படுவோம்
Leave a comment
Upload