நெடுஞ்சாலைகளில் தரமான உணவு கிடைப்பது அபூர்வம் .
ஆனால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள இயற்கை உணவகம் ஒன்று நம்மை கவர்ந்திழுக்கிறது . பெரியபாளையத்தைத் தாண்டி ஊத்துக்கோட்டையை நெருங்கும்போது, வாகனத்தில் செல்லும் மக்களுக்கு இயற்கை காய்கறிகளில் தயாரிக்கும் உணவுகளின் 'கமகம' வாசனை, மூக்கின் வழியே உள்சென்று, நாவில் நீர் கொட்ட வைத்துவிடும். பிறகென்ன… தாராட்சி கிராமத்தில், சாலையை ஒட்டியுள்ள இன்ஸ்பேஸ் ஃபார்ம்ஸ் 'இயற்கை காய்கறிகள்' உணவகத்தின் முன்பு வாகனம் தானாகவே 'பிரேக்' அடித்து நின்று விடுகிறது
அந்த உணவகத்துக்குள் நுழைந்ததும் அக்கிராமத்து பெண்கள் அன்புடன் கைகூப்பி வரவேற்கின்றனர். நீங்கள் 'ஷுகர், பி.பி இருக்கே... காரசாரமாக உணவு வழங்கி, நம் உடல்நிலையை ஏடாகூடமாக ஆக்கிவிடுவார்களோ?' என 'மெர்சல்' ஆகிவிட வேண்டாம்.
நீங்கள் என்னென்ன காய்கறி உணவுகளை எவ்வித காரத்துடன் வேண்டும் எனக் கேட்கிறீர்களோ, அதேபோல் 'கமகம'க்கும் வீட்டு சமையலை சில நிமிடங்களில் கிராமத்து பெண்கள் தயாரித்து, சாப்பிடுவதற்கு வழங்கிவிடுகின்றனர். கூடுதலாக, நீங்கள் வல்லாரை, முருங்கை, அகத்தி என இன்னும் பல அரிய வகை கீரை உணவுகளை விரும்பி கேட்டால், அதுவும் ஒருசில நிமிடங்களில் 'ஃப்ரெஷ்'ஷாக தயாராகி, உங்கள் டேபிளுக்கு வந்துவிடும்.
"இந்த காய்கறி, கீரையெல்லாம் எங்கிருந்து வருகிறது?" எனக் கேட்டோம்.
"எங்க உணவகத்தின் பின்புறம் இயற்கை வேளாண் முறையில் காய்கறி, கீரைகளை பயிரிட்டு உபயோகப்படுத்தி வருகிறோம். மேலும், மாடுகள் வளர்த்து பால் உற்பத்தி செய்கிறோம். இதற்கு எனது கணவரும் தாராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமத்து பெண்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் இதன்மூலம் சுயதொழில் வேலைவாய்ப்புடன் போதிய வருவாயும் கிடைத்து வருகிறது!" என்று சிரித்தபடி வந்தமர்கிறார் ஜமுனா பிரபாகரன், இன்ஸ்பேஸ் ஃபார்ம்ஸ் நிறுவன இயற்கை காய்கறிகள் உணவகத்தின் உரிமையாளர்.
"இந்த இயற்கை உணவகத்தை திறக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? உங்களுக்கு உறுதுணையாக யார், யார் உள்ளனர்? அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?" என் நாம் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு வாடிக்கையாளர்களின் உணவு தேவைகளை கேட்டு வழங்கி, சுற்றி நடந்து வந்தபடியே நம்மிடம் ஜமுனா பிரபாகரன் பேசத் துவங்கினார். அவர், நமக்கு வழங்கிய கிர்ணிப்பழ சாலட்டை ருசித்தபடி பின்தொடர்ந்தோம்.
"கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த இயற்கை காய்கறிகள் உணவகத்தை ஆரம்பித்தோம். அதற்கு முன் எனது கணவர் பிரபாகரன், இயற்கை ஆர்வலர்கள் நம்மாழ்வாரின் இயற்கை முறையில் விவசாயம் பற்றிய தகவல்களை படித்து, எங்களின் பண்ணையில் இயற்கை முறையில் நெற்பயிர், காய்கறிகள், சிறுதானிய உணவு தானியங்களை பயிரிட்டு, நல்ல விளைச்சலை கண்டிருந்தது. இதற்கு தாராட்சி உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவர்களும் எனது கணவரின் ஆலோசனைப்படி தங்களின் நிலங்களில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்பகால கட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே வந்து உணவருந்தி சென்றனர். பின்னர் வெளிமாநிலங்களில் சென்னை வரும் பெரும்பாலான வடமாநில மக்கள், 'தாபாக்களில் காரசாரமாக சாப்பிட்டு நாக்கு புண்ணாகி விட்டது. மீண்டும் நாக்கின் சுவையை உணர, தென்னிந்திய காய்கறி மற்றும் கீரை உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிடத் துவங்கினர். இதைக் கேள்விப்பட்டு உள்ளூர் மக்களும் அதிகளவில் குடும்பத்துடன் வந்து சாப்பிடத் துவங்கிவிட்டனர். மேலும், தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு எங்களின் உணவகத்துக்கு ஆர்டர் வழங்கி, உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
தற்போது எங்கள் உணவகத்தில் அரைகீரை, சிறுகீரையுடன் பொன்னாங்கன்னி, வல்லாரை, பசலை, அகத்தி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை கீரைகளை எங்கள் பண்ணையில் கிராமப் பெண்கள் மூலம் விளைவித்து, அவற்றை உணவாக வழங்கி வருகிறோம். இதன் அடுத்த கட்டமாக பல்வகை பருப்பு பொடி களைப் போல், பல்வேறு அரிய வகை கீரைகளை பொடி செய்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
என் முயற்சிகளுக்கு எனது கணவர் பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!" என்று ஜமுனா பிரபாகரன் கைகூப்பினார்
Leave a comment
Upload