தொடர்கள்
கவர் ஸ்டோரி
தமிழ்த்தாய் ஆண்டாள் ! வேதமனைத்துக்கும் வித்து - முதுமுனைவர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்

20230201185921638.jpg

திருப்பாவை வியாக்கியானத்தின் தொடக்கத்திலேயே ஆண்டாளின் பெருமையை அருளிச்செய்கின்ற பெரியவாச்சான்பிள்ளை

``தேஹாத்மாபிமானிகளுக்கும் ஆத்மஸ்வரூபம் கைவந்திருக்கும் ருஷிகளுக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசிபோரும்; ருஷிகளுக்கும் ஆழ்வார்களுக்கும் அத்தனை வாசிபோரும்; ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும்; பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்’’

என்றருளிச் செய்கிறார். உடலையே ஆத்மாவாகக் கொண்டிருக்கும் சாமானிய மனிதர்கள் பரமாணு என்றால், ருஷிகள் மலைபோன்றவர்கள். அதே போல் ருஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்; ஆழ்வார்களில் பெரியாழ்வார் உயர்ந்தவர்; பெரியாழ்வாரைக் காட்டிலும் ஆண்டாள் உயர்ந்தவள் என்கிறார் அவர்.

ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமி தமது நாலாயிரப்படியில் ஸ்ரீராமாயணபுருஷர்களைக் கொண்டு இதனை விளக்குகின்றார்.

`என்பிள்ளை அரசாளவேண்டும்’ என்று ஆசைப்பட்ட கைகேயி, தசரதன் போல்வார் தேஹாத்மாபிமானிகள்; அவர்களைக் காட்டிலும் இராமபிரானுடைய பெருமையை உணர்ந்து கொண்ட வசிஷ்டர், விச்வாமித்ரர் முதலிய முனிவர்கள் உயர்ந்தவர்கள்; அவர்களைக் காட்டிலும் இராமபிரானுக்குத் தொண்டு செய்த லக்ஷ்மணன் உயர்ந்தவன் (ஆழ்வார்களைப் போல). அவனைக் காட்டிலும் இராமபிரானுடைய திருவுள்ளத்தைப் பின் சென்ற பரதாழ்வான் உயர்ந்தவன் (பெரியாழ்வாரைப் போல). இராமபிரானையும் விட்டு பரதாழ்வானையே எல்லாமுமாகக் கொண்ட சத்ருக்னன் பரதனைக் காட்டிலும் உயர்ந்தவன் (ஆண்டாளைப் போல) என்கிறார் அவர்.

பெரியாழ்வார் பகவானுடைய நன்மையை விரும்பினார். ஆண்டாளோ, பாகவதர்களுடைய நன்மையை விரும்பினாள். எனவே ஆண்டாள் பாகவதவிஷயத்தில் மிக்க ஈடுபாடு உடையவள் என்றதாயிற்று. இதனைத் திருப்பாவை நன்கு காட்டுகிறது. கோபிகைகளை அனுகரிக்கும் முகத்தால் ஆண்டாள் தனக்கு பாகவத விஷயத்திலுள்ள ஈடுபாட்டை நன்கு வெளிப்படுத்தினாள்.

தான் எவரை மிகவும் விரும்புகிறாரோ அவராகவே தன்னை பாவித்துக் கொள்ளுதலே அனுகாரம் எனப்படுகிறது.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் `கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்’ என்று தொடங்கும் திருவாய்மொழியில் எம்பெருமானாகவே தம்மை அனுகரித்துக் கொண்டு பாசுரங்கள் அருளிச் செய்கிறார். அதில், `திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும், திறம்பாமல் மலையெடுத்தேனே என்னும், திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும், திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும், இனவேய் மலையேந்தினேன் யானே என்னும், இனவேறுகள் செற்றேனும் யானே என்னும், இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும், இனவாநிரை காத்தேனும் யானே என்னும், இனவாயர் தலைவனும் யானே என்னும்' என்று க்ருஷ்ணாவதார சரித்திரங்களையே பலகாலும் அருளிச் செய்கிறார். எனவே அவருடைய அனுகாரம் அவர் மிகவும் ஈடுபட்டிருந்த க்ருஷ்ணாவதாரத்திலேயே அமைந்தது எனலாம்.

திருமங்கையாழ்வாரும் ஒரே ஒரு பாசுரத்தில் அனுகாரம் செய்திருக்கிறார். ``வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாமென்று பேசினாள்'' என்பது அப்பாசுரம். திருவேங்கடமலையிலிருந்து வந்து இப்போது திருக்கண்ணபுரத்தில் இருப்பவன் யானே என்கிறாள் என்பது இப்பாசுரத்தின் பொருள். ஆக திருமங்கையாழ்வார் மிக மிக ஈடுபட்டிருந்த அர்ச்சாவதாரத்திலேயே அவருடைய அநுகாரம் அமைந்தது.

அதைப் போலவே ஆண்டாளுடைய அனுகாரம் அவள் மிக மிக ஈடுபட்டிருந்த பாகவத விஷயத்திலேயே அமைந்தது. கண்ணபிரானைப் பிரிந்திருப்பதனால் உண்டாகும் துன்பத்தை ஆற்றிக் கொள்ள கண்ணபிரானைப் போலவே அனுகாரம் செய்து தரித்த கோபிகைகளைப் பற்றிக் கூறி அவர்களைப் போலவே இவளையும் அனுகாரம் செய்து தரிக்கும்படி கூற, இவள் அந்த கோபிகைகளைப் போலத் தானும் கண்ணபிரானை அனுகரித்து தரிக்காமல், அந்த கோபிகைகளைப் போலவே தன்னை பாவித்துக் கொண்டு திருப்பாவை பாடினாள். அவர்கள் நோற்ற பாவை நோன்பைத் தான் நோற்பதாக அனுகரித்து, இடை நடையும், இடைமுடியும் இடைப் பேச்சும் முடைநாற்றமுமாகி விட்டாள். எனவே ஆண்டாள் மிக மிக ஈடுபட்டிருந்த பாகவத விஷயத்திலேயே அவளுடைய அனுகாரம் அமைந்து விட்டது.

`சங்கத் தமிழ்மாலை’ என்று ஆண்டாளே திருப்பாவையைக் கொண்டாடிச் சொல்லுகிறாள். இதற்கு, `திரள் திரளாக (கூடி) அனுபவிக்க வேண்டும் பிரபந்தம்’ என்று பொருள் காட்டுகிறார் பெரியவாச்சான்பிள்ளை. எனவே பாகவதர்கள் பலர் ஒன்று சேர்ந்து திரளாக அனுபவிக்கும் பிரபந்தமாகவே அவள் திருப்பாவையை அருளிச் செய்தாள்.

அத் திருப்பாவை `வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ என்று கொண்டாடப்படுகிறது. வித்தாவது விதை. வேதத்திற்கு திருப்பாவை விதை என்பது இதன் பொருள். விதையிலிருந்து மரம் உண்டாவது போல திருப்பாவையிலிருந்து வேதம் உண்டானதாக அன்றோ பொருள் படுகிறது? வேதமோ அநாதியானது. இன்ன காலத்தில்தான் உண்டானது என்றில்லாமல் எப்போதும் உள்ளது. ஆனால் திருப்பாவையோ, பூமிப்பிராட்டி ஆண்டாளாக அவதரித்த காலத்தில் அருளிச்செய்தது. ஒரு காலத்தில் அவதரித்த திருப்பாவை எப்படி எல்லாக் காலத்திலுமுள்ள வேதத்திற்கு வித்தாக முடியும் என்ற கேள்வி எழலாம். இங்கு ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்.

விதையிலிருந்துதான் மரம் உண்டாகின்றது என்பது உண்மைதான். அதேசமயம் மரத்திலிருந்தும் விதை உண்டாகிறது. அந்த விதையை விதைத்தால் மறுபடியும் மற்றொரு மரம் உண்டாகிறது. இந்த விதத்தில் பார்க்கும்போது `வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ என்பது நன்றாகவே பொருந்துகிறது. அதாவது வேதமாகிற மரத்திலிருந்து உண்டான விதைதான் திருப்பாவை. மரம் மிகப் பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து உண்டாகும் விதை மிகச் சிறியதாக இருப்பதுபோல, `அநந்தா வை வேதா:’ என்றபடி மிகப் பெரியதான வேதங்களிலிருந்து உண்டான சிறிய விதைதான் முப்பதே பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை. விதையை பூமியில் நட்டு, தண்ணீர் பாய்ச்சி, எருவிட்டால் அது மரமாக முளைக்கிறது. முளைக்கின்ற மரத்தின் அத்தனை உறுப்புக்களும் அந்தச் சிறிய விதையில் சிறுவடிவில் (ஸூக்ஷ்மமாக) இருக்கிறது. அதேபோல் திருப்பாவையிலும் வேதார்த்தங்கள் அனைத்தும் உள்ளே பொதிந்துள்ளன. ஊன்றி நோக்கி ஆசார்யர்கள் விளக்கியருளும்போது அதில் ஸூக்ஷ்மமாகப் பொதிந்துள்ள வேதார்த்தங்கள் அனைத்தும் வெளிப்படுகின்றன. திராவிட வேதமான திவ்யப்ரபந்தம் உட்பட அனைத்து வேதங்களிலும் உள்ள அர்த்தங்களும் திருப்பாவையில் பொதிந்துள்ள படியால்தான் `வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ எனப்பட்டது.

கோதை என்ற சொல்லுக்கு மாலை என்பது பொருள். பெரியாழ்வார் மாலை கட்டுவதற்காக நந்தவனத்திற்குச் சென்றபோது கிடைத்த குழந்தை ஆகையால் கோதை என்றே பெயரிட்டார். கோதை அருளிய சங்கத்தமிழ்மாலை என்பதனை `மாலை கட்டிய மாலை’ என்று விளக்குகிறார் உரையாசிரியர் அழகியமணவாளப் பெருமாள் நாயனார். அதுவே `மாலைக் (திருமாலைக்) கட்டிய மாலை’ என்றும் விளக்குகிறார்.

வேதார்த்தங்கள் அனைத்தையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அருளிச்செய்திருப்பதால் தான் திருப்பாவையைத் `தமிழ்மாலை' என்றாள் என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். தமிழ் என்று சொல்லுக்குத் தமிழ் மொழி என்பது மட்டும் பொருள் அல்ல. தமிழ் என்றால் இனிமை என்றும் எளிமை என்றும் கூடப் பொருள் உண்டு. `இனிமையும் நீர்மையும் தமிழ் என்னலுமாம்' என்று நிகண்டுக்களில் கூறப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ``யாவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லாத வஸ்து, பெற்றம் மேய்த்துண்ணும் இடைச் சேரியிலே வந்து பிறந்து எளியன் ஆனாற்போலேயும், உத்தம வர்ணத்திலே பிறப்புடைய ஆண்டாள் ஆயர் சிறுமியர் திரளிலே ஒருத்தியாய் அந்வயித்தாற்போலவும் அருமறையின் பொருளான உபநிஷத்து தமிழாய் வந்து ஸர்வஸுலபமானபடி'' என்று அருளிச் செய்கிறார். ஸர்வேச்வரனான எம்பெருமான் தன்னை ஒரு ஆயனாகத் தாழவிட்டான்; பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் தன்னை ஆய்ச்சியாகத் தாழவிட்டாள்; உயர்ந்த அர்த்தங்களைக் கொண்ட உபநிஷத்தானது தன்னைத் திருப்பாவையாகத் தாழ விட்டது. எனவே `தமிழ்மாலை' என்பது எளிமையான மாலை என்பதனைக் குறிக்கின்றது என்பது நாயானார் தரும் அற்புதமான விளக்கமாகும்.