தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோவில்கள் ! - 13 பழனி மலை, தமிழ்நாடு!! தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்


குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான். அறு படை வீடு கண்டவன் ஆறுமுக பெருமான். முருகன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தமிழ்நாட்டிலுள்ள மலைக்கோவில்களில் ஒன்றான பழனி முருகன் கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். (சிலர் முதல் படை வீடு படை எனச் சொல்கிறார்கள்)
இந்த முருகன் மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் “ஞானாசிரியனாக” இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.
இந்த கோயில் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இந்நகரம் மேற்குத்தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் மூலவரைப் போகர் என்ற சித்தர் நவபாஷாணத்தால் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு முருகப் பெருமான் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பதால் தண்டாயுதபாணி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
புராதன காலத்தின் துவக்கம் முதலே சித்தர்களும், முனிவர்களும் பழனி மலையில் தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் அதிகப் புனிதத் தன்மையை அடைந்தது.
திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரிய பகவானும் இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. சங்க காலத்தில் இந்த ஊா் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காகக் கோபம் கொண்டு வந்தமர்ந்த முருகப்பெருமானைச் சிவனும் பார்வதியும் இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் “பழம் நீ” என்று முருகனுக்கு சூட்டிய பெயரே நாளடைவில் மருவி பழநி என்று ஊா் பெயர் வரக் காரணமானதாக ஸ்தல புராணம் கூறுகின்றது.
சங்ககாலத்தில் இவ்வூரின் பெயர் பொதினி என்பதாகும். பொதினி என்பது மருவி பழனி ஆயிற்று. வையாவிநாடு என்றும் ஆவிநாடு என்றும் இப்பகுதி சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்குத் தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
பழநி மலை சுமார் 450 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலைக்கு 697 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இதைத்தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு. மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது. மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது.
இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாகப் பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானைத் தரிசிக்க இக்கோவிலுக்கு வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:
இந்தக் கோயிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. புராணங்களின் படி நாரதர் அளித்த ஞானப்பழத்தைப் பெறும் போட்டி முருகனுக்கும் அவர் அண்ணன் பிள்ளையாருக்கும் நடந்தது, முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தைச் சுற்றக் கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக்கொண்டார். இதனால் ஏமாற்றமடைந்த முருகன் அனைத்தையும் துறந்து இந்த மலையில் குடியேறினார். சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானப்படுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லித் தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. பின்னர் வந்த தமிழ் மூதாட்டி அவ்வை “பழம் நீ - ஞானவடிவம் நீ” என்று பாடிய இடம் இது. அதுவே பின்னர் பழனியாகிற்று.
பழனிமலை இந்த இடத்திற்கு வருவதற்கு உதவியவர் இடும்பன்.
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி கயிலாயம் சென்று பிரம்மதண்டத்தில் இருபுறம் சக்திகிரி,சிவகிரி என்னும் இருமலைகளைக் கட்டி தோளில் தூக்கி வந்து கொண்டிருந்தான். வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையைத் தூக்க முடியவில்லை. இடும்பன் முருகனை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். முருகன் அவனுக்கு தன் அருட்பார்வையைச் செலுத்தி, தனக்குக் காவலாக அமர்த்தி அழகு பார்த்தார். இடும்பனைப் போல் தனது சன்னிதிக்குக் காவடி எடுத்து வருவோர்க்கு அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அன்று துவங்கிய காவடி எடுக்கும் வழக்கம் இன்றும் தொடர்கின்றது. மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் வழியில் உள்ள இடும்பனை முதலில் வணங்கி பின்னர் மலையில் முருகனை வணங்க வேண்டும்.

பழனி முருகன் சிலையின் சிறப்பு:

தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்


இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தால் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியைப் பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும். நவபாஷாணங்களால் உருவான பழனிமலை தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது. இதனால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். பழனி முருகனின் நவபாஷாண சிலையைச் சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்தார். பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். இறுதியில் தன்னுடையே சமாதியைப் போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார். தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு பின் (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிகப் புண்ணியம். தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேகம் தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

கோயில் வரலாறும், கல்வெட்டும்:
சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன. புராண காலத்தாலும், சங்க காலத்திலும் பாடல்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம். முருகனை வியந்துபாடும் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிக்கும் ஆவினன்குடியே தற்காலப் பழனி நகரமாகும். அன்னை வள்ளியோடு காட்சியளித்ததாக நக்கீரர் குறிப்பிடுகின்றார். மலைமீது அமைந்துள்ள முருகன் கோயில் குறித்து திருமுருகாற்றுப்படையில் குறிக்கப்படவில்லை. நக்கீரருக்குப் பிறகு பதினெண்சித்தரான போகரால் உருவாக்கப்பட்ட கோயிலே பாலதண்டாயுதபாணி எனப்படும் பழனியாண்டவர் மலைக்கோயிலாகும். அவ்வையார் இத்தலத்து மூலவரைத் தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார்.
வையாவிக்கோமான் எனப்படும் கடைஎழுவள்ளல்களில் ஒருவராகக் கருதப்படும் பேகன் வாழ்ந்த ஊர் இதுவாகும். வையாவிநாட்டின் தலைநகரமாக பொதினி விளங்கியது. மயிலுக்குப் போர்வையைத் தந்தவன் என இவர் புகழப்பெறுகின்றார். இவர் பிறந்த குடிஆவியர்குடி (ஆவினன்குடி) எனப்படும்.
விஜய நகரப்பேரரசின் அரசர்களான மல்லிகார்ஜுனர் மற்றும் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. மல்லிகார்ஜுனராயர் காலத்தில் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்வதற்கும் மூன்று சந்நிதிகளுக்கு மஹாபூஜையாக விளங்க வேண்டும் என்பதற்காக நிவந்தங்கள் (கோயிற் செலவுகள்) அளிக்கப்படுகின்றன. சுவாமியின் திருமுன்பு அமுதுபடைக்கவும் திருநந்தாவிளக்கு எரிக்கவும் திருமாலை திருமஞ்சனம் செய்யவும் இதன் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கு அளிக்கப்பட்ட நிலமானது இரவிமங்கலம் ஊருக்கு மேற்கிலும் கொழுமத்திற்கு போகும் சாலைக்கு தெற்கிலும் பன்றிமலைச் சாலைக்கு தெற்கிலும் அமைந்திருந்தது.

தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோயில் அமைப்பு:
பழனி மலைக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது. முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. பழனி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப் பாதை வழியாக வருவோர், 2வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னிக் குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.
முதல் பிராகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. அடுத்துள்ள நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞானத் தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன. பழனியாண்டவர் முன்பாக ‘மாக்கல்’ எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஸ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்புப் பிரம்மன் விக்கிரகம். இந்தப் பிரம்மன் அம்பு- வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார். ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக, பிறக்கும்படி பிரம்மனுக்குச் சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்குச் சாப விமோசனம் தரும்படி முருகனைப் பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவற்றை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார். திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழனி. அங்காரகனான செவ்வாயும், பழனி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் .

கோயிலின் சிறப்பு :
திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு. குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்குக் கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டுப் படியேறுகின்றனர். பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழனியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள். இவர்களைப் பழனி ஆண்டவர்
பூஜிப்பதாக ஐதிகம். இவர் கையில் உள்ள தண்டம் மிக்க அருள் வாய்ந்தது.
இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் உலகப் பிரசித்தி பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர் மற்றும் தங்க மயில் வாகனம் அமைந்த திருதலம்.

ஸ்தல விருட்சம் : நெல்லி மரம்
ஸ்தல தீர்த்தம் : சண்முக நதி

தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்

திருவிழாக்கள்:
இங்கு தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இவற்றுள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடக்கும் தை பூச விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில் கலந்து கொள்வதற்காகப் பக்தர்கள் மாலையிட்டு, பல நாட்கள் விரதம் இருந்து காவடி தூக்கி, வெறும் காலில் பாதயாத்திரையாகப் பழனிக்கு வருகின்றனர்.

பழனி தைப்பூசத் திருவிழா
தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாகப் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழனி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.தைப்பூச விழாவின் போது நடைபெறும், முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், சண்முக நதி, பழனி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்துகிறார்கள்.

தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோயில் திறக்கும் நேரம்:
காலை
6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும் பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும்.

பிரார்த்தனை:
குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக, வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்க
முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:
முருகனுக்குக் காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்

கோயிலுக்குப் போவது எப்படி:
விமானம் மூலம்: மதுரை விமான நிலையம் அருகிலுள்ளது.
மதுரையில் இருந்து 115 கிமீ தாரத்தில் பழனியில் அமைந்துள்ளது.
இரயில் மூலம்: அருகில் உள்ள இரயில் நிலையம் பழனி.
பழனி இரயில் நிலையம் 2.3 கிமீ தூரத்தில் பழனி மலை அடிவாரம் அமைந்துள்ளது
சாலை வழியாக: திண்டுக்கல் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.

முகவரி:
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி 624601. திண்டுக்கல் மாவட்டம்.

தடைகள் நீக்கும் பழனி ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு அருள் பெறுவோம்!!