2.30க்கு ட்ரெயின். 2.15 ஸ்டேஷன்க்கு வந்தோம். விடு விடு என்று எல்லா சாமானையும் என் கணவர் தூக்க, வேகமாக நடக்ககூட முடியாமல், வழுக்கும் செருப்பையும் கையில் தூக்கிக் கொண்டு பின் ஓடினேன். மூச்சிரைக்க ஒரு பெட்டியில் ஏறி நடந்து நடந்து எங்கள் இருக்கையில் வந்து நின்று, பெட்டிகளை மேலே தூக்கி வைத்து விட்டு அக்கடா என்று அமர்ந்தோம்.
" வயசாச்சு எனக்கு, இனிமே எங்க போனாலும் கார் அல்லது பிளைட் தான் என்றேன்" சொல்லி இருக்க வேண்டாம். இது போல் பேசும் போது கொஞ்சம் யோசித்து பேசவேண்டும். கடவுளுக்கும் நமக்கும் இடையில் உள்ள சிக்னல் சிலசமயம் கிளியர் ஆகிவிடும். அவரும் உடனே ஆசையை நிறைவேற்றி விடுவார்.
எனக்கு அந்த நேரம் சிக்னல் பக்கா கிளியர்.
என் கணவரிடம் " எதுக்கும் ஒரு தடவை டிக்கெட் எடுத்து பாத்துக்கலாம் என்றேன்." இதை சொல்லி இருக்க வேண்டும். எப்போது?, டிக்கெட் வாங்கிய அன்று.
"எதுக்கு"? என்று அலுத்துக்கொண்டார்.
"குடுங்க நான் பாக்கறேன்".
வானுலகில் சிக்னல் கிளியர் ஆனதுனால் வேலையெல்லாம் வேகமாக நடந்தது.
" இன்னிக்கு என்ன தேதி?" சந்தேகத்துடன் அவரிடம் கேட்டேன்.
"ஏன்? 25."
" அய்யோ.. டிக்கெட் 24 க்கு இருக்கே"
வெடுக்கென்று என் கையிலிருந்து டிக்கெட்டை வாங்கி பார்த்தார்.
24 என்று இருந்தது.
"போக வர ஒரே தேதியில் டிக்கெட் புக் ஆகி இருக்கு."
தலையில் கை வைத்து அமர்ந்தார். ரயில் கிளம்ப இன்னும் மூன்று நிமிடம் தான் இருந்தது.
யோசிக்க கூட நேரம் இல்லை.
அத்தனையும் இறக்கினார். வேகமாக கீழே இறங்கினார். நானும் பின் தொடர்ந்தேன்.
இறங்கிய உடனே ரயில் கிளம்ப, பெட்டியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றோம்.
இருவருக்கும் நாளை மீட்டிங். அலுவலகம் சென்றே தீர வேண்டும்.
அவர் என்னிடம் எதும் கேட்க வில்லை.
ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம். அருகில் இருக்கும் ட்டிராவல்ஸிடம் பேசி ஒரு வாடகை காரில் கிளம்பினோம்.
சாமான்களை பின்புறம் வைத்து விட்டு, காரில் உட்காரும் முன் டிரைவரை பார்த்தேன்.
கொஞ்சம் வயசானவரா இருக்காரே, flight செக் பண்ணிருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தது. கணவரை திரும்பி பார்த்தேன். ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார். கடவுளிடம், "தெரியாமல் எதோ நினைத்துக் கொண்டேன். இதுவே போதும். பத்திரமாக ஊரு போய் சேரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
தேவலோகத்தில் கடவுள் வேகமாக சிக்னலை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
"தேவி, அவள் என்னிடம் கடைசியாக எதை கேட்டாள்?"
தேவி யோசித்தாள். "எது வேண்டுமானாலும் கேட்டிருக்கட்டும். நாம் அருள வேண்டியது பத்திரமாக வீடு போய் சேருவது மட்டும் தான்." தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். "எனக்கும் தெரியவில்லை பிரபு. ஆனால் அப்படியே விட்டு விடலாம் என்று தோன்றுகிறது" என்றாள் லோக மாதா.
சரி என்று அயரும் போது, வாசலில் நிழலாடியது.
" நாராயண, நாராயண " என்று நாரதரின் குரல் கேட்டது.
Leave a comment
Upload