சென்ற மாதம் வரை தமிழக அரசியலில் காட்சிகள் மாறும் என்று எந்த தலைவருக்கும் தெரியாது. ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வே.ரா திருமகன் திடீரென காலமானார். அதனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடக்கும் நாடகம் எல்லாம் இப்போது நமக்கு புதியதாகத் தெரிகிறது.
நன்றி: தினமணி
ஜெயலலிதா ஆளுமையான அதிமுக இருக்கும் போது லெட்டர் பேட் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு போயஸ் கார்டன் தேடி போய் ஆதரவு தரும். கூடவே, அந்த ஆதரவுக்கான சன்மானமும் கிடைக்கும். ஆனால், இப்போது எல்லாமே தலைகீழ்.
ஜான்பாண்டியனிடம் போய் நுங்கம்பாக்கம் கட்சி அலுவலகத்தில் எடப்பாடி தரப்பு போய் ஆதரவு கேட்கிறது. ஜான்பாண்டியன் என்னுடைய ஆதரவு எப்போதும் இரட்டை இலைக்கு என்கின்றார். அதாவது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் என் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் என்பது அதன் பொருள்.
ஏ.சி.சண்முகத்தை போய் ஓபிஎஸ் பார்க்கிறார். அவரும் ஆதரவு கேட்கிறார். ஏ.சி.எஸ் இருவரையும் ஒன்று சேர்க்க நான் முயற்சி செய்வேன் என்கிறார். அதாவது முடியாத காரியம் என்று தெரிந்தும் அவர் இப்படி சொல்வதிலிருந்து அவரது ஆதரவு நிலைப்பாடு தெரிந்து விட்டது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இந்த முறை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிக்கும் என்று எடப்பாடி பார்த்து சால்வை எல்லாம் அணிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, ஜி.கே.வாசன் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்கள். மாலை ஓபிஎஸ், ஜி.கே.வாசனையை சந்தித்து ஆதரவு கேட்கிறார்.
பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலையை எடப்பாடி சார்பாக கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்திக்கிறார்கள்.
இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தான் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து ஓபிஎஸ் ,அண்ணாமலை சந்திப்பு அவரும் ஆதரவு கேட்டு திமுகவுக்கு மாற்று அதிமுக அதிமுகவுக்கு மாற்று திமுக இதுவரை தமிழக அரசியலில் இருந்த நிலைப்பாடு இதுதான். இதுதான் வரலாறு கூட ஆனால் இப்போது காட்சிகள் அப்படியே உல்டாவாகிறது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யாருக்கும் ஆதரவில்லை என்கிறார்.
கமலஹாசன் கதை வேறு.
இந்த இடை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பார் என்பது எதிர்பார்த்ததுதான் ஏற்கனவே டெல்லியில் ராகுல் காந்தியுடன் தேசிய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கூட்டணிக்கான சிக்னலை தந்துவிட்டார் கமலஹாசன்.அதன் பிறகு இ வி கே எஸ் இளங்கோவன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார் அதைத்தொடர்ந்து நிருபர்களை அழைத்து மறுதினம் இ வி கே எஸ் இளங்கோவனை ஆதரிப்பதாக அறிவிப்பு செய்தார். அப்போது ஒரு நிருபர் இந்த ஆதரவு மூலம் எம்பி தேர்தலில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உறுதி என்று கிண்டலாக சொல்ல அப்போது கமலஹாசன் நான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்னபோது நீங்கள் யாரும் என்னை கிண்டல் அடிக்கவில்லை இப்போது ஆதரவு என்றதும் எம்பி பதவியா என்று கிண்டல் செய்கிறீர்கள் அவரும் நிருபர்களுடன் சேர்ந்து சிரித்து சமாளித்தார்
தேமுதிக, அதிமுக நான்காக உடைந்து விட்டது. அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பதே சந்தேகமாய் இருக்கிறது. எனவே, தேமுதிக வேட்பாளரை நிறுத்துகிறது என்று வேட்பாளர் பெயரை அறிவிக்கிறார்கள். ஆனால், அதிமுக யார் ஆதரவையும் அவர்கள் இதுவரை கேட்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தல் தேவையற்றது என்ற ஒரு புதிய காரணத்தைக் கண்டுபிடித்து யாருக்கும் ஆதரவில்லை என்கிறது. சின்ன சின்ன கட்சிகளுக்கெல்லாம் இப்போது மீசை முளைத்து தைரியம் வந்துவிட்டது. இதுதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சொல்லும் பாடம்.
பெரியக் கட்சிகளுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால் தான் இந்த புது நாடகம்.
திமுக தலைமையில் தான் மதச்சார்பற்ற கூட்டணி அமைந்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தும் என்கிறார். அதன் பிறகு தான் மதசார்பற்ற கூட்டணி சார்பாக காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை கூட்டணி கட்சிகள் ஆதரிக்கும் என்று மதச்சார்பற்ற கூட்டணி தலைவர் அறிக்கை வெளியிடுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று தெரியாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, இருவரும் வீடு வீடாக சென்று கை சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு கேட்கிறார்கள். இவர்களுடன் எந்த காங்கிரஸ் தொண்டனும் வரவில்லை திமுக தான் தேர்தல் பணிக்குழுவை முதலில் அறிவித்தது.
திமுகவுக்கு இந்த தேர்தல் வெற்றி காலத்தின் கட்டாயம் 20 மாத திமுக ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு தேர்வு. இந்த தேர்தலில் திமுக கட்டாயம் பாஸ் பண்ணியே தீர வேண்டும் அப்போதுதான் பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்த பாஸ் உதவும்.
காங்கிரஸ் தலைமையிடம் என் இளைய மகன் போட்டியிட அனுமதி கேட்டு இருக்கிறேன் என்கிறார். அப்போது இ.வி.கே.எஸ் இளங்கோவன் வீட்டுக்குச் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நமக்கு கொஞ்சம் மாஸ் வேட்பாளர் தேவைப்படுகிறார். எனவே நீங்கள் நில்லுங்கள் உங்கள் மகனுக்கு பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு தருகிறோம் என்கிறார்.
திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தமிழ் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவை தொடர்பு கொண்டு இ.வி.கே.எஸ் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவியுங்கள் என்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு திமுக தான். இதுதான் இ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட கதை.
எடப்பாடி கதைக்கு வருவோம். எடப்பாடிக்கு இப்போதைக்கு பாரதிய ஜனதா பயம் இல்லவே இல்லை. அதனால்தான் ஓபிஎஸ் மாதிரி பாரதிய ஜனதா போட்டியிட்டால் நான் ஆதரிக்க தயார் என்று சொல்லவில்லை. ஓபிஎஸ் மாதிரி அவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவில்லை தனது சகாக்களை மட்டும் அனுப்பினார் எடப்பாடி.
பாரதிய ஜனதாவை பொருத்தவரை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் சேர்ந்திருந்த ஒன்றிணைந்த அதிமுகவை தான் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எடப்பாடி பொறுத்த வரை சசிகலா தினகரன் ஓபிஎஸ் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பாரதிய ஜனதா தனது செல்வாக்கை பயன்படுத்தி இரட்டை இலையை முடக்கினாலும் பரவாயில்லை. நான் முதல் முதலில் சட்டமன்றத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் தேர்வு செய்யப்பட்டு போகவில்லை ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று இரண்டாகப் பிரிந்த போது சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் என்கிறார் எடப்பாடி.
சின்னக் கட்சிகளை தேடிப் போய் சந்திப்பது பற்றிய சர்ச்சைக்கு எடப்பாடியின் பதில் வேறு மாதிரி இருக்கிறது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி கள நிலவரம் தெரிந்து கொள்ளவும் ஈரோடு வந்தார் எடப்பாடி.கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி அதைத்தொடர்ந்து 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைத்திருப்பதாக அறிவித்தார்.அப்போதுதான் சின்னக் கட்சிகளை தேடிப் போய் சந்திப்பது பற்றிய பிரச்சனை எழுந்தது. அப்போது தான் எடப்பாடி இது எல்லாம் பூதகண்ணாடி வைத்து பார்க்காதீர்கள்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க நமது பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூப்பனாரை நேரில் போய் சந்தித்தார்.இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது தொலைபேசியில் பேசிவிட்டு தைலாபுரத்துக்கு மூத்த நிர்வாகிகளை அனுப்பினார் ஜெயலலிதா தேர்தல் அரசியலில் தேவை இல்லாதவற்றை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி.
பாரதிய ஜனதா அது ஒரு தமாஷ் நாடகம். அண்ணாமலை சமூக வலைத்தளங்களில் தனக்கு இருக்கும் ஆதரவை நம்பி அதுதான் வாக்கு வங்கி என்ற எண்ணத்தில் கனவில் அரசியல் செய்கிறார்.
அண்ணாமலை.சென்ற வாரம் கடலூரில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதற்கு முன்பு முக்கிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இடைத்தேர்தல் பற்றி பேச்சு வந்தது. பெரும்பாலான முக்கிய தலைவர்கள் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா போட்டியிட வேண்டாம் அதிமுகவை ஆதரிப்போம். அதாவது எடப்பாடி அணியை ஆதரிப்போம் என்று சிலரும் சிலர் யாருக்கும் ஆதரவில்லை என்று நடுநிலை வகிப்போம் என்றும் சொல்லிவிட்டு பாரதிய ஜனதா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது பெரும்பாலோர் கருத்தாக இருந்தது.
மாநில பொறுப்பாளர் கேசவ்விநாயகம் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் இன்னும் சில பிரமுகர்கள் நாம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் திமுக கூட்டணியில் தேசிய கட்சி தான் போட்டி போடுகிறது.
நாம் தேசிய ஆளும் கட்சி நாம் போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை உசுப்பேத்தி இருக்கிறார்கள். அண்ணாமலை உள் மனதிலும் அந்த ஆசை இருந்திருக்கிறது. அதன் விளைவு தான் செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை தெளிவாக பேச முடியாமல் குழம்பி தான் பேசினார். ஏதோ ஏரோப்ளேன் உதாரணமெல்லாம் சொல்லி நடுவானில் இருக்கிறோம் யாரும் மேலேயும் போக முடியாது கீழேயும் இறங்க முடியாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார்.
அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி என்று இரண்டு கருத்துக்கணிப்புகள் நடத்தினார் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது அவரது அபிமான வார்ரூம் இன்னொரு கருத்துக்கணிப்பை தனியாரை விட்டு நடத்த சொன்னார் வார்ரூம் கருத்துக்கணிப்பு அண்ணாமலைக்கு அமோக வெற்றி என்றது.
தனியார் நிறுவன கருத்துக்கணிப்பு அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று சொன்னது. அதன்பிறகு தான் அண்ணாமலைக்கு லேசான மன மாற்றம்.
அதிமுக பெரிய கட்சி என்றார் அதிமுக கூட்டணி தலைமையில் வேட்பாளரை நிறுத்துவோம் என்கிறார். திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எதிர்க்க வலுவான வேட்பாளர் தேவை என்கிறார்.
கூட்டணி பற்றி அண்ணாமலை கருத்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கும் ஆதரவில்லை என்பது பற்றியோ தேமுதிக தனித்துப் போட்டி என்பது பற்றியோ அண்ணாமலையால் எந்த கருத்தும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், இவர்களை எல்லாம் சரி செய்யும் இடத்தில் இப்போதைக்கு அண்ணாமலை இல்லை. இப்போது அதிமுக பற்றி பேசும்போது கூட அதிமுகவில் இருப்பது உள்கட்சி பிரச்சனை. அவர்கள் தொண்டர்களாக சேர்ந்து முடிவு எடுக்கிறார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசும் போது சொல்லி இருக்கிறார். புதிதாக ஆராய ஒன்றுமில்லை சற்று பொறுமையாக இருங்கள் எங்கள் கட்சி மூத்த தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
31-ஆம் தேதிக்கு இன்னும் நாள் உள்ளது ஒரு நல்ல முடிவு எடுப்போம். திமுகவை எதிர்த்து நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். தவிர, பலப்பரீட்சை அல்ல என்கிறார். கூடவே இந்தத் தேர்தலில் மூலம் பாரதிய ஜனதா செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்கிறார். இவையெல்லாம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாடக காட்சிகள் இவை எல்லாவற்றையும் வாக்காளர்கள் ரசித்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஒட்டு மொத்த தமிழக மக்களும் தான்.
Leave a comment
Upload