எனக்கு டயரி எழுதும் பழக்கம் எப்போதுமே கிடையாது. ஆனால் சில சமயம் என் அப்பாவை பற்றி நினைக்கும் போது எழுதியிருக்கலாமோ என்று தோன்றும். ஒரு வித்தியாசமான மனிதர் அவர். குழந்தைகள் உலகத்தில் தன்னை ஐக்கியமாக்கி கொள்ளுவார். எதேதோ கதைகள் சொல்லுவார். சிரித்துக்கொண்டே இருப்போம். ரேடியோவை பிரித்து போட்டு சரி செய்வார். அருகில் சென்று அமர்ந்து இருப்பேன். உள்ளே இருக்கும் சில வால்வுகளை காண்பித்து, இது சிவாஜி, இது MGR என்பார். "இது வழியாதான் பாடுவா” என்பார். அதிசயத்துடன் பார்த்து கொண்டிருப்பேன். நிறைய கட்டு கதைகள் சொல்லுவார்.
" இந்த வானம் இருக்கே அது முன்னாடி எல்லாம் தலையை இடிக்கும். அவ்வளவு பக்கத்துல இருக்கும். "
" அப்பறம் எப்படிபா மேல போச்சு?"
“ஒரு மோரு விக்கற பாட்டி தலை மேல மோரு பானையோட வந்தா. இந்த வானம் சும்மா இல்லாம பானைய தட்டி விட்ருத்து. அதுனால கோவபட்டு மேல போன்னு சபிச்சுட்டா.”
அதோடு நிற்கமாட்டார். ஒரு பாட்டிய காட்டி இது தான் மோரு பாட்டி. பேரு மாலைன்னு சொல்லுவார். நான் அந்த பாட்டியை அதிசயமாய் பார்த்துகொண்டு நிற்பேன்.
ஒரு நாற்பது வருடம் முன் குழந்தைகள் உலகம் வேறாகத் தான் இருந்தது. எல்லாவற்றிலும் அதிசயத்தை பார்க்கும், ஒரு குழந்தைக்கே உண்டான, அறியாமை இருக்கும். சிறு சிறு விஷயங்களில் சந்தோஷம் அடைய முடிந்தது.
எங்கள் கிராமத்துக்கு பஸ் நிலையத்தில் இருந்து ஒரு மைல் நடக்க வேண்டும். அப்பா கையை பிடித்துக்கொண்டு நடந்தால் கதை கேட்டுக்கொண்டே நடக்கலாம். பஸ்சிலிருந்து இறங்கிய உடனே அப்பா பக்கத்திலிருக்கும் ஒரு பெட்டிக்கடைக்கு கூட்டி செல்வார். ஆளுக்கு ஒரு தேங்காய் சில்லும், கருப்பட்டியும் கிடைக்கும். இரண்டையும் கடித்துக்கொண்டே நடந்தால் ஒரு மைல் நடப்பதே தெரியாது. வயல், வாய்க்கால், சின்ன பாலம். பெரிய பாலம், சொட்டக்கால், நயினாபிள்ளை(வயல்களின் பெயர்), ஒவ்வொன்றை பற்றியும் ஏதாவது கதைகள் இருக்கும். சில சமயம் கேட்ட கதையாகவே இருக்கும். ஆனாலும் மறுபடியும் கேட்போம்.
நங்கள் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாய் அப்பா எங்களிடமிருந்து விலக ஆரம்பித்தார். எங்கள் படிப்பு, எங்கள் நட்பு வட்டம், திருமணம், குழந்தைகள், வேறு ஊர் எல்லாம் மாற மாற நாங்கள் மாறினோம், எங்கள் உள்ளிருந்த குழந்தைகள் காணாமல் போனார்கள். ஒவ்வொருமுறை வீடு திரும்பும் போதும் மகிழ்ச்சியாக வரவேற்பார். எங்கள் குழந்தைகள் அப்பொழுது அவரின் உலகமாய் மாறியது. குழந்தைகளின் எந்த கேள்விக்கும் அலுக்காமல் பதில் சொல்லவேண்டும் என்பார்.
ஒரு முறை என் மகன் வாசலிலிருந்து "அம்மா அம்மா" என்று கூச்சல் போட்டான். பயந்து போய் விழுந்தடித்துக்கொண்டு வாசலுக்கு ஓடினேன். "மாடு பாரு" என்று எதிர்த்த வீட்டின் வாசலில் வந்து நின்ற மாட்டை பார்த்து மகிழ்ச்சியுடன் கத்தினான்.
"இதுக்கு போயாடா இப்படி கூப்பிட்ட ?" கோவமாய் அவனிடம் கூறினேன். "உனக்கு அது பழசு அவனுக்கு அது புதுசு தானே. நீ எங்கயாவது அவனுக்கு மாடு காமிச்சுருக்கயா? புதுசா பாக்கறான். நீயும் சேர்ந்து சந்தோஷப் படு, அதுக்கு பதிலா குழந்தை மேல கோவ படறயே " என்று கூறிவிட்டு அவனை தூக்கிக் கொண்டு எதிர்த்த வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தைகளை திட்டக்கூடாது, அடிக்க கூடாது.
" திட்டலேன்னா குழந்தைகளுக்கு புரியாது அப்பா" என்று பதில் சொல்லுவோம். ஒன்றும் பேச மாட்டார். எங்கள் வளர்ப்பு மேலயே நம்பிக்கை இல்லாமல் போனது அவருக்கு.
லீவுக்கு போகும் போதெல்லாம் குழந்தையை தூக்கிக்கொண்டு ரயில் பார்க்க சென்று விடுவார். வீட்டிற்று அருகிலேயே லெவல் கிராஸ்ஸிங் இருக்கும். ரயிலை பார்த்து குழந்தை கைதட்டி சிரிக்கும் போது மகிழ்ந்து போவார். நாங்கள் அவருடன் இருக்கும் வரை அது தினந்தோறும் நடக்கும்.
திடீரென்று ஒரு நாள் ஊரிலிருந்து தொலைபேசியில் அழைத்தார். இரவு ஒரு பத்து மணி இருக்கும்.
"என்னப்பா இந்த நேரத்துல. தூக்கம் வரலையா?"
"இல்லை. எனக்கு திடீர்னு பழைய ஞாபகம் வந்ததா ஒடனே உன்ன கூப்பிட்டேன்."
" என்ன ஞாபகம் பா?"
அவருக்கு வயசாகிவிட்டது. நிறைய பேச ஆரம்பித்திருந்தார். பழைய கதைகள். சிறு வயதில் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். அலுக்கவே அலுக்காது. இப்போது பல பொறுப்புகள், கவலைகளுக்கு நடுவில் சில சமயம் அப்பாவின் பேச்சை கேட்கக்கூட பொறுமை இல்லாமல் போனது.
" என்ன ஆச்சு பா?" சீக்கிரம் தூங்க வேண்டும். காலையில் ஐந்து மணிக்கு எழுந்தால் தான் வேலை முடியும். ஒரு சலிப்புடன் கேட்டேன்.
அவருக்கு அந்த சலிப்பெல்லாம் புரிந்ததா என்று தெரியவில்லை,
"வாசல்ல திண்ணையில படுத்துண்டுஇருக்கேன். நீங்க மூணு பேரும் குழந்தையா இருக்கும் போது, வலது கைல உன் அக்கா, இடது கைல அண்ணா, மேல நீ படுத்துப்ப. கதை சொல்லுவேன்.அப்படியே தூங்கிடுவேள். என்னவோ இன்னிக்கு திடீர்னு உன்கிட்ட இதை சொல்லணும் போல தோணித்து."
நாங்கள் தொலைத்தும், மறந்தும் விட்ட எங்கள் குழந்தை பருவத்தை அவர் பத்திரமாக வைத்திருந்தார்.
" சரிப்பா. நேரமாச்சு தூங்க போகலாமே. நான் முடிந்தால் இந்த வாரம் வரேன்"
" அதெல்லாம் வேண்டாம். ஆபீஸ்க்கு லீவு எல்லாம் போடாதே. குழந்தைகளை கூட்டிண்டு லீவுக்கு வா " என்று பதில் சொன்னார். அவருக்கு வளர்ந்த நாங்கள் குடுக்கும் சந்தோஷத்தை விட எங்கள் சிறு வயது ஞாபகங்கள் அதிக சந்தோஷத்தை குடுத்திருக்கவேண்டும்.
அவர் எதிலும் எங்களை சார்ந்து இருந்தது இல்லை. எங்களை பற்றிய பெருமையான நினைவுகளைச் சார்ந்தே அவர் இருந்திருக்கிறார்.
இப்பொழுது என்னக்கு ஐம்பது வயது ஆகிறது. அப்பா காலமாகி ஏழு வருடம் ஆகி விட்டது. உலகத்திலேயே மிகவும் சிரமமானது தன்னுள் இருக்கும் குழந்தையை கடைசி வரைக்கும் தக்க வைத்துக்கொள்வது தான். ரயில் அடி, மோர், வானம், மாடு, ரேடியோ, வயல்கள், ஆறு அத்தனையும் கதைகளாய் நிரம்பி இருக்கின்றன.
எனக்கென்னவோ அது அதி முக்கிய பாடமாக தோன்றுகிறது. நாம் நம் தலைமுறைகளுக்கு விட்டு சொல்லவேண்டியது சில நல்ல கதைகளும், குழந்தையாய் இருப்பதற்கு சில உத்திகளும்.
Leave a comment
Upload