தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் 68 - ஆர் . ரங்கராஜ்

பஞ்சேஷ்டி (பஞ்செட்டி) யில் ஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்.

20230020211614161.jpg

பஞ்சேஷ்டி என்னும் சிவத்திருத்தலம் சென்னை கும்மிடிபூண்டி நெடுஞ்சாலையில் காரனோடை பாலம் தாண்டி அமைந்துள்ளது. ஆனந்தவல்லித் தாயார் சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என மூன்று வகையிலும் அருட்புகழ் பெற்ற ஆலயம்.

அகத்தியர் இங்கே பல்லாண்டு காலம் வாழ்ந்து, அகத்தியர் தீர்த்தம் என்னும் தடாகத்தை ஏற்படுத்தினார். சுகேது எனும் யட்சர் சாபம் நீங்க, ஐந்து யாகங்கள் இங்கே நடத்தியதால், இவ்வூர் பஞ்சேஷ்டி எனப்பெயர் பெற்றது. இப்பொழுது பஞ்செட்டி என்றும் அழைக்கிறார்கள்.

20230020211643203.jpg

ஆலய வரலாறு:

காஞ்சி நகரை ஆண்டு வந்த பேரரசன் மித்தர துவசன் பஞ்சேஷ்டியில் அகத்தியரை பூஜித்துக்கொண்டு பிரதோஷ விரதமிருந்தான். குசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள வனத்தில் அரசன் நடந்து போகும்போது காப்பாற்று காப்பாற்று என்ற குரல் கேட்டது.

அரசன் உருவிய வாளோடு ஓடி வர, ஒரு பிராமணனைப் புலி கீழே தள்ளியிருப்பதைக் கண்டான். "அரசன் புலியைத்தடுத்து, எலும்புந்தோலுமாக இருக்கும் இப்பிராமணனைக் கொல்லாதே என்றான்.

புலி மனிதரைக் கொன்று தின்பது என்பது என்னுடைய தர்மம். எனக்குக் கண் தெரியாது. இந்த மனிதனை விட்டுவிட்டால் மூன்று நாட்களாகப் பட்டினி கிடக்கும், என் குட்டிகள் செத்துப் போய்விடும். நானும் சாவேன், அதற்கு என்ன சொல்கிறாய் என்று கேட்டது. புலியே இவரை விட்டுவிடு; அவரைவிட நான் நல்ல உணவாவேன், வேதியனைக் காப்பாற்றுவதற்கு உயிரைக் கொடுத்தால், நான் நல்ல கதியே அடைவேன். ஆனால் ஒரு வேண்டுகோள் பஞ்சேஷ்டி பெருமானை அர்ச்சிப்பதற்காக வில்வதளங்களைப் பறிந்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது பிரதோஷ காலம் பகவானைத் தரிசித்து வந்து விடுகிறேன். பிறகு என்னைக் கொன்று உன் குட்டிகளுக்கு ஆகாரமாகக் கொடுத்துவிடு என்றான். புலியும் சம்மதித்தது.

வேதியர் எழுந்து ஓடி விட்டார். மித்திரதுவசன் அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி, பிரதோச கால தரிசனம் செய்து வில்வபத்திரத்தைப் பெற்றுப் புலியிடம் போனான். அவனைக் கொல்ல புலி தயங்கியது". என்று அந்தக்காட்சியை அழகாக விவரிக்கிறார், மீரா நாகராஜன்.

(தொடரும்)

- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,

9841010821 rangaraaj2021@gmail.com)