தொடர்கள்
சினிமா
மொராக்காவில் நடிகர் மோகன்லால் !- கேரவன் M அருணாச்சலம்

2023002016045534.jpg
சமீபத்தில் 'ராம்' என்கிற மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகும், மோகன்லால் நடிக்கும் த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கும் திரைப்படத்திற்காக 50 நாட்கள் வடக்கு ஆப்பிரிக்காவின் மூக்கின் நுனியில் இருக்கும் மொராக்கோவிற்கு சென்று நிர்வாகத் தயாரிப்பாளர் என்கிற முறையில், தங்கி படப்பிடிப்பு நடத்த நேர்ந்தது.
சுமார் 15 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு… குளிக்காமல், கசங்கிய டிஷ்யூ பேப்பர் போல் காசாபிளாங்கா விமான நிலையத்தில் இறங்கும் வரை நமது சென்னை விமான நிலையம்தான் உலகிலேயே மோசமான விமான நிலையம் என்ற நினைப்பை முற்றிலுமாக மாற்றிக் கொள்ள நேர்ந்தது.
படு சுமாரான ஏர்போர்ட். இப்போது இந்த மோசமான வரிசையில் முதலிடத்தை காசபிளங்கா தக்கவைத்துக் கொண்டுவிட்டது. நகரும் பட்டை விசிறியடித்த பெட்டியை ட்ராலியில் தள்ளிக்கொண்டு வெளியில் வந்தால், 10 டிகிரியில் குளிர் முகத்தில் அறைந்தது.
அங்கிருந்து குழுவினருடன் காரில் ஏறிப் புறப்பட்டோம். மொராக்கோ வின் மத்திய, சுற்றுலா நகரான மர்ரகேச் அங்கிருந்து இரண்டரை மணி நேர சாலைப் பயணம். 'சரி..வழியெங்கும் புதிய இடங்களைக் கண்டு ரசித்துக் கொண்டே போகப் போகிறோம்' என்கிற எங்களின் நினைப்பில், அங்கிருக்கும் சஹாரா -வின் மொத்த மண்ணையும் அள்ளிப் போட்டதுபோலாகி விட்டது. முதல் 10 நிமிடங்கள் சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணலும், மணல் சார்ந்த கட்டாந்தரையும்தான். அலுத்துப் போய் கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டேன். ஒரு மணி நேரம் கடந்து வந்திருந்தோம். 'அடடா.. முக்கிய இடங்களைத் தவற விட்டிருப்போமோ? என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன். கார் அங்கேயே நின்று கொண்டிருந்ததோ? பக்கத்திலிருந்த அசோசியேட் கண்ணன்,' பதறாதீங்க..ஒண்ணும் கெட்டுப் போயிடலை..சிம்பு நடிச்ச 'மாநாடு' படம் மாதிரி, மண்ணு, தரை, ரோடு.. ரிப்பீட்டுதான்..நீங்க தூக்கத்தை கன்டினியு பண்ணுங்க' என்றார்.

20230020160551689.jpg
நாங்கள் இறங்கிய காசாபிளாங்கா நகரம் நமது மும்பையைப் போல வணிகத் தலைநகரம் என்றால், நாங்கள் சென்று கொண்டிருக்கும் மரக்கேச் நகரம் ஒரு சுற்றுலாத் தலைநகரம்.

20230020160633722.jpg
பெரும்பாலான சுற்றுலா மையங்களுக்கு இந்த இடத்தில் இருந்து எளிதாகச் சென்று விட முடியும் என்பதால், மரக்கேச் எப்போதும் சுற்றுலாவாசிகளின் விருப்பமான தேர்வாக இருக்கிறது. இங்கு நகரங்களை ஒருவிதமான தனித்துவத்தோடு அழகு படுத்துகிறார்கள். காசாவில் அத்தனை கட்டிடங்களும் சொல்லி வைத்தார் போல் வெள்ளையடித்து மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன என்றால் மரக்கேச் நகரம் முழுவதும் பிஸ்கட் கலர் வண்ணத்தில் வசீகரிக்கிறது.
முகமதிய அரசரின் கீழ் இயங்கும் மொராக்கோ நாடு என்றாலும், அநாவசியத் துதிபாடல்கள் அறவே இல்லை. பிரஞ்சு கலாச்சாரம் ஓங்கியிருந்தாலும், பிரான்ஸ் விருந்தினர்களை ஆராதிப்பதில்லை..(பிரஞ்சு காலனியாதிக்கக் கோபம் என்று எடுத்துக் கொள்ளலாம்).

20230020160702281.jpg
மொராக்கோ நாட்டவர்கள் 85 சதவிகிதம் பேர் நான் வெஜ் அதாவது புலால் உணவை புசிப்பவர்கள் என்றாலும், இதய நோயாளிகளின் எண்ணிக்கை 2 சதவிகிதம் கூட இல்லை .இங்கு மருத்துவமனைகளே மிகவும் குறைவுதான். ஞாயிற்றுக் கிழமைககளில் மருந்துக் கடைகளை அரை நாளில் மூடிவிட்டு, மதுபான விடுதிகளை விடிய,விடியத் திறந்து வைக்கிறார்கள். (மூக்கு ஒழுகலுக்கு மாத்திரை தேடி அலைந்துவிட்டு, வேறு வழியின்றி இரண்டு பெக் பிராந்தி அடித்துவிட்டு படுக்க நேர்ந்த போதுதான் அதை உணர்ந்தேன்).
'எப்படி மொராக்கா நாட்டில் வசிப்பவர்கள் மட்டும் மருத்துவர்கள் நாடிச் செல்வதில்லை? என்ற காரணத்தினை ஆராய்ந்த போது, மொராக்கர்கள் எப்போதும் சமச்சீரான உணவையே உட்கொள்கிறார்கள். மாமிசத்திற்கு இணையாக, காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். புலால் சமைப்பதிலும் ஆழ் எண்ணெய்(deep fry) வறுவல்கள் கிடையாது. எல்லாம் அவியல்கள் தான். அதுவும் ஆலிவ் எண்ணை!.

2023002016073266.jpg
மொரக்கா நாட்டினர் உண்ணும் மொத்த உணவில் மாவுச்சத்து 15 சதவிகிதத்திற்கு மேல் இல்லை. (நம் ஊரில் அப்படியே தலைகீழ்!). தக்காளியையும், கத்தரிக்காயையும் கிலோக் கணக்கில் உள்ளே தள்ளுகிறார்கள். அரிசிச் சோறு உள்ள மெனுவில் கூட, சாதத்தை ஊறுகாய் அளவில்தான் பரிமாறுகிறார்கள்..(ஆனால் 'ஊறுகாய்' என்கிற பதார்த்தமே கிடையாது! உப்பு கூட அரையளவுதான்). எங்களுடன் வந்திருந்த ஜேம்ஸ், அரிசி சாதத்தை ரவுண்டு கட்டி அடிக்கும் ஒரு 'சாத' வெறியன். அவன் உள்ளே தள்ளும் சாத அளவைப் பார்த்த பக்கத்து மேஜையில் சாப்பிட ஆர்டர் பண்ண காத்திருந்து அமர்ந்திருந்த மொராக்கன், பேயறைந்தது போலாகி அடுத்த ரெஸ்டாரென்ட்டுக்கே போய்விட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்", என்று தனது பயண அனுபவத்தினை கேரவன் அருணாச்சலம் நம்மிடம் பகிர்ந்தார்.