தொடர்கள்
கதை
வீடு  -K.ரமணி

20230014104114368.jpg

அன்புள்ள சரஸ்வதி ,...
நம்முடைய பிளான் இது தான். அடுத்த வாரம் ( டிசம்பர் 23 to29) நான் இந்தியாவில் இருப்பேன். நான் மட்டும் தான் அட்லாண்டாவில் இருந்து வருகிறேன். கிஷோர் வரவில்லை. .ஏதோ வேலையாம்.
பொண்ணு பிள்ளை எல்லாரும் பிஸி.
இல்லாவிட்டாலும் யாரு நம்ம கூட இந்தியாவின் தெற்குக் கோடிக்கு மெனக்கெட்டு வரப்போறாங்க?...

23 ம் தேதி சென்னையில் கிஷோர் தங்கை அகிலா வீட்டில் தான் இருப்பேன்.24 காலை பிளைட்ல மதுரை வந்துடறேன்.
நீயும் மும்பையிலிருந்து 24 காலை பிளைட்டில் மதுரை வந்துவிடு.
மதுரைல இருந்து டாக்ஸில நல்லூருக்கு போயிடலாம். ரெண்டரை மணி ட்ராவல் தான்.

ஐம்பது வருஷம் கழிச்சு நாம் இரண்டு பேரும் ஒரு நாள் நம்ம நல்லூர் வீட்ல முழுசா இருக்கப்போறோம் என்றஎண்ணமே அவ்ளோவ் நல்லா இருக்கு..

இருபத்திஞ்சு கிளம்பி மதுரை வந்துடலாம்.அப்புறம் நீ மும்பை.. நான் சென்னை. சரியா?

வராமல் மட்டும் இருந்து விடாதே. இது நம்முடைய வாழ்க்கையின் மிக முக்கியமான சந்திப்பு... நல்லூர் வீட்டில்....இல்லையா?

லட்சுமி மெயில் அனுப்ப, 👍🏼 என்று உடனே தம்ஸ் அப்பி சம்மதித்து பதிலளித்தாள் சரஸ்வதி.
லட்சுமிக்கு எழுபது வயதாகிவிட்டது.
அமெரிக்காவில் ஐம்பது வருஷ வாழ்க்கை. ஒரு பிள்ளை ஒரு பெண் மூன்று பேரக் குழந்தைகள். புகழ் பெற்ற கர்நாட்டிக் மியூசிக் டீச்சர் என்ற பேர்.
.
.இரண்டு வயது இளைய
தங்கை சரஸ்வதிக்கு திருமணமாகி கணவருடன்பம்பாய் சென்று. ஐம்பது வருஷம் முடிந்து விட்டது.

ஸ்கூல் தலைமை ஆசிரியை ஆகி
ரிடயர் ஆயாச்சு. கணவர் சதீஷ் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ்.. ஒரே மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறான்.

லட்சுமி, சரஸ்வதி...பெற்றோர்க்கு இவர்கள் இரண்டே பெண்கள். அப்பா சென்னையில் பௌதீகப் பேராசிரியராக இருந்தவர்.
அம்மா வீட்டு மனைவியாக வாழ்ந்தவர்.

நல்லூர் வீடு அம்மாவுடைய அப்பாவான தாத்தாவுடையது. பின் ஒரே பெண்ணான அம்மாவுடையது ஆனது ... அப்புறம் லட்சுமி, சரஸ்வதி யுடையதானது.

ஆனால் இவர்கள் தங்கள் ஊருக்கு போய் அம்பது வருஷமாச்சு.

இந்த முறை இருவரும் சேர்ந்து
ஊருக்கு, வீட்டுக்கு போவது, அங்கு ஒரு நாளாவது இருப்பது என்று முடிவு செய்து செயல் வடிவத்தில் தீவிரமாகக் கொண்டு வந்தாச்சு.


நெல்லை தாண்டி,தென்காசி வழியில்,பேட்டை,பின் கல்லூரில் இடப்புறம் திரும்பி பச்சை வயல், வாய்க்கால், கொக்குப்படை, வாழை, கரும்பு, அம்மன் கோவில், ஆலமரம் தாண்டி வலப்புறம் திரும்பினால் மேலத்தெரு.இடது பக்கம் ஐந்தாவது வது வீடு. நம்பர்.24/32.

டாக்ஸி நின்றதும் பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட் எசக்கித் தேவர் வரவேற்றார்.

"வாங்கம்மா வாங்க. இவ்வளவு வருசம் களிச்சு இப்போம் தான் இங்கிட்டு வர வேள வந்துதா."
என்று வீட்டுச் சாவிக்கொத்தை லட்சுமியிடம் கொடுத்தார்.

"நான் தான் தொறப்பேன்"
என்று முந்திய சரஸ்வதி ,லட்சுமி கையில் இருந்து சாவிக்கொத்தைப் பிடுங்கினாள்.


வீட்டுக்குள் செல்ல முதலில் தெருவிலிருந்து மூன்று படி ஏற வேண்டும்.பின்னர் மூன்று புறமும் ஆறடி உயர காம்பௌண்ட் சுவர் கொண்ட தாழ்வாரம்.
அதில் ஐந்தடி உயர,உள்ளும் புறமும் ஊஞ்சலாடும் குட்டை மரக்கதவு.அதில் .
ஒரு பழைய திண்டுக்கல் பூட்டு.
சரஸ்வதி பூட்டை திறந்து வலது காலைத் தாழ்வாரத்துக்குள் உள்ளே வைக்க, லட்சுமி கை தட்டிச் சிரித்துத் தொடர்ந்தாள்.

தாழ்வாரம் தாண்டிய பின் பெரிய நிலைக்கதவு.
"வட கிழக்கு பார்த்த தேக்கு நிலைக் கதவு. வீட்டுக்கு, குடும்பத்துக்கு ரொம்ப நல்லதுன்னு பாட்டி அடிக்கடி சொல்லுவா. " என்றாள் லட்சுமி.

கதவுக்கு மேல்புறத்தில் வரிசையாக கோர்வையாக சிறு வெண்கல மணிகள் அந்தக்காலத்தில் கட்டப்பட்டிருக்கும். இப்போ ஒன்றும் இல்லை.

முக்கால் அடி நீளமான பெரிய இரும்புச் சாவியை நிலைக் கதவு ஓட்டைக்குள் நுழைத்த சரஸ்வதி மூன்று முறை அதைத் திருப்பி கதவின் அடி பாகத்தில் எட்டி உதைக்க தூங்கி எழுந்த அலுப்பில் கீ என்ற சப்தத்துடன், எரிச்சலுடன் கதவு திறந்தது. உள்ளே கூடம்.
மழமழ என்று ரெட் ஆக்சைடு தரை.
கூடத்து எதிர்ச் சுவரில் அடுத்தடுத்து பெரிய லட்சுமி,சரஸ்வதி. ஓவியங்கள்.
ரவிவர்மாவின் படங்கள்.

"திருவாங்கூர் அரண்மனைல நம்ம வக்கீல் தாத்தாவுக்கு அரசாங்க கேஸ்
ஜெயித்து கொடுத்ததுக்காக மந்திரி குடுத்தாராம்."என்றாள் சரஸ்வதி .

"ஒரிஜினல் ரவிவர்மா படமா?"

"அப்படித்தான் இன்று வரை நினைத்துகொண்டிருக்கிறேன். எல்லார் கிட்டயும் சொல்லியும் இருக்கிறேன் " என சிரித்தாள் சரஸ்வதி.
"நம் இருவரையும் இந்த வீட்டில் நம் தாத்தா பாட்டி இருவரும் லட்சுமி தேவி.. சரஸ்வதிதேவியாகத்தான் பார்த்தார்கள்.இல்லையா லட்சுமி?"

உண்மை தான்.தாத்தாவின் உயிர் இவர்கள் தான்.

ரவிவர்மாவின் லட்சுமிபடத்துக்கு இடது பக்கத்தில் உள்ள சின்ன அறை தான் குச்சில். 1908 இல் இந்த வீடு கட்டியதிலிருந்து தெருவுக்கே பிரசவ அறை இது தான்.

வீட்டுப் பெண்கள் தவிர தெருவில் முக்கால் வாசி பேருக்கு இங்கு தான் பிரசவம் நடந்திருக்கும்.லட்சுமியும் சரஸ்வதியும் கூட பிறந்தது இங்கு தான்.

அப்பா மதுரை கல்லூரியில் முதலில் விரிவுரையாளராக இருந்த போது,
லட்சுமி, சரஸ்வதியை நல்லூர் போர்டு எலிமெண்டரி பள்ளியில்
தாத்தா சேர்த்தார்.அப்புறம் ஹை ஸ்கூலுக்கு தான் மெட்ராஸ் சென்றார்கள். அப்பொழுது அப்பா மெட்ராஸ் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஆகிவிட்டிருந்தார்.


" இந்த வீட்டுக்கு இடப்பக்கம் இருக்கற வீடு தான் அப்போ ஸ்கூலா இருந்தது, ஞாபகம் இருக்கா..சச்சு ? "

"இல்லாமே. ஸ்கூல் போர் அடிச்சா நைசா திண்ணை ஏறி நம்ம வீட்டுக்கு வந்திடுவோமே. தாத்தாக்கு தெரிந்தால் திட்டுவாரு இல்லயா!." என்றாள் சரஸ்வதி..

கூடத்து நடுவில் பெரிய கருங்காலி மர ஊஞ்சல்...அப்படியே இருந்தது.

பித்தளைச் சங்கிலிகள்.
சங்கிலிகள் நாலும் இணை கோடுகள் போல அமைந்திருக்கும்.

கீழே பலகையிலிருந்து மேலே ஒடுங்கிப்போகாது.அதனால் ஆடும்போது மேலும் கீழுமாகச் செல்லாது.பலகையைப் பிடித்துக்கொள்ளா விட்டால் வழுக்கும். முதல் முறை ஆடியபோது நான்கு வயது சச்சு ஊஞ்சலில் இருந்து வழுக்கி விழுந்து
முகவாய்க்கட்டை பிளந்து, ரத்தம் கொட்டி,பேட்டை ஆஸ்பத்திரியில் தையல் போட்டதை இப்பொழுது நினைவு கூர்ந்து முகவாய்க்கட்டைத் தழும்பைத் தொட்டு "ஆ வலிக்கிறதே!" " என்று சிரித்துக் கொண்டாள் .சரஸ்வதி.

கூடத்தின் நடுவில் பெரிய மணைகள் மீது அமர்ந்தபடி சகோதரிகளின் கச்சேரி நவராத்திரியில் நடக்கும்.
கிழக்கே பார்த்து ஒன்பது படிகளில் கொலு இருக்கும்.குரு சுப்பையா பாகவதர் முதலில் அமந்திருப்பார். சுற்றிசூழ மக்கள்.
" என்னமா பாடறதுகள்.
ராதா ஜெயலட்சுமி மாதிரி" என்று
ரசனையில் ஊறிய குரல்கள் அங்கலாய்ப்பது இவர்களுக்கு பெருமையாய் இருக்கும்.

"ரெண்டு பேரும் மெட்ராஸ் போய் மியூசிக் அகாடமில பாடுங்கோ" என்பார்கள்.

"நீ ஏண்டி அப்பொறமா பாடற தயே விட்டுட்டே?. என்று கேட்டாள் லட்சுமி.

"ஒவ்வொருவருக்கும் ஒரு பிராப்தம் இருக்கும். அதுபடி தான் யெல்லாம் நடக்கும் ". சிரித்தாள் சரஸ்வதி.

"அட் லீஸ்ட் நீயாவது ஒரு பெரிய்ய மியூசிக் டீச்சராக அமெரிக்காவில் இருப்பது சந்தோஷம். "

கூடம் தாண்டி குறுகலான ரேழி
வழியாகச் சென்று மாடிப்படி ஏறினார்கள். தேக்கு மரத்தாலான
கிட்டத்தட்ட செங்குத்தான படிகள்.

"லட்சுமி கொஞ்சம் பிடிச்சுக்கோ " என்று கூறி முன்னால ஏறினாள் சரஸ்வதி..

மாடியில் சேரும் போது படியின் லாண்டிங் ரொம்ப
அபாயகரமாக இருக்கும்.. படி முடிவில் மாடித் தரையில் ஒரு சதுரக்கதவு இருக்கும். முதலில் படி ஏறினவர் சதுரக் கதவின் பூட்டை அகற்றி தலையால் எம்பி கதவை மேலாகத்திறந்து நிறுத்திப் பின் கைகளை அழுத்தி ஒரு தாவு தாவி சதுர ஓட்டை வழியாக மாடித்தரையில் அமர வேண்டும்.
சரஸ்வதிக்கு எப்பவும் மாடி ஏறும் பயம் உண்டு. இன்றும் இருந்தது!
" லட்சுமி கொஞ்சம் என்னைத் தள்ளி விடு "என்று கூறி எம்பி மாடியில் அமர்ந்தாள். பின்னால் லட்சுமியும் ஏறினாள்.
மாடிக்கூடத்தில் ஏகப்பட்ட ஓட்டடையுடன் தேக்கு மர ஸ்டூலில் கம்பீரமாய் நின்றதுபழைய ஹெச். எம்.வி.கிராமபோன்.

"எவ்வளவு வருஷம் ஆச்சு
இதக்கேட்டு " என்றாவாறு தூசி துடைத்து, கீழே கிடந்த இரும்பு
ஹாண்டலை கிராமபோனில் செருகி சுற்றினாள் லட்சுமி.
ம்ஹூம் அது சுற்றவில்லை.ஒரே துரு மயம்.
ஏமாற்றத்துடன் கீழே இருந்த தகரப்பெட்டியைப் பார்த்தாள். அந்தக்காலத்தில் அதற்குள் ஏகப்பட்ட இசைத்தட்டுக்கள் இருக்கும். எம்.எஸ், என். சி. வி,
டி.கே. பி , ஜி. என். பி, மதுரை மணி...என்று.
இப்போ திறந்து பார்த்தாள். ம்ஹூம்
ஒன்று கூட இல்லை. காலி!

மூலையில் ஒன்று மேல் ஒன்றாக நிறைய டிரங்க் பெட்டிகள்.
தூசி தட்டித் திறந்தார்கள்.

பழைய பத்திரிகைகள்...கரப்பு .வாசனையுடன்....
சுதேச மித்திரன், மணிக்கொடி , ஆனந்த போதினி ஆனந்த விகடன், சுதந்திரச்சங்கு,கலைமகள், கல்கி என்று ஏராளமான பத்திரிகை இதழ்கள்.
"ஒரு காலத்தில் இதையெல்லாம் ஒரு எழுத்து விடாமல்
படித்திருக்கிறோம். இந்த மாலி கார்ட்டூன் பாரு. "
என்று ஒரு அரதல் பழசான விகடனின் அட்டையைக் காட்டினாள்.

கடைசிப்பெட்டியின் அடியில் இருந்தது லட்சுமிக்கு வந்த அந்த பழைய இன் லேண்ட் லெட்டர்.
From அஜய் பிஸ்வாஸ் என்று இருந்தது.

சரஸ்வதி அந்த லெட்டரை எடுத்து லட்சுமியிடம் தந்து அவளை
தீர்க்கமாகப் பார்த்து " இது தான் , நம் விதியை மாற்றின அந்த ஃபேமஸ் லெட்டரா? " என்று கேட்டாள்.

சில நொடிகள் அந்த லெட்டரையே பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி, பின் நிதானமாக,
"ஆமாம். அப்புறம் பேசலாம் " என்று லெட்டரை வாங்கித் தன் கைப்பையில் வைத்தாள்.

மாடியை விட்டு கீழே இறங்கிச் சென்று ரேழி தாண்டி பட்டாசாலை க்கு வந்தார்கள். பெரிய அறை அது.

அந்த காலத்தில் யானை சைஸில் ரெண்டு நெல் குதிர்கள் பட்டாசாலை மூலையில்இருக்கும்.அறை முழுக்க நெல் வாசனை.
பக்கத்தில் தரையில் இருந்த பொந்திலிருந்து ஒரு மே மாதம் வெள்ளிக்கிழமை சாயங்காலம்
பாம்பு ஒன்று மெதுவாக எட்டிப் பார்த்தது.

லட்சுமி, சரஸ்வதி,இருவரும் அம்மாவுடன் ஹை ஸ்கூல் லீவில் மெட்ராஸில் இருந்து வந்த சமயம்.
பாம்பைப் பார்த்த பாட்டி அலற, ஊர் முழுவதும் அங்கு வந்துவிட்டது. பாம்பு மிரட்டலாக இரண்டு கை சேர்த்து விரித்தது போல படம் வேறு எடுக்க ஆரம்பித்து விட்டது.பெரிய நாகப்பாம்பு. ஒருவருக்கும் கிட்ட போக தைரியம் இல்லை.

கோவிலுக்கு நேர்ந்து கொண்டார்கள். கருட தண்டகம் சொன்னார்கள்.வெண்கலக் குண்டானில் பால் கொண்டு வந்து பாம்புக்கு சற்று தள்ளி பயத்துடன் வைத்தார்கள்.

நாகம் அசையாமல் நின்று எல்லாரையும் மிரள விட்டது.

"கொஞ்சம் நகருங்க " என்று முன்னே வந்தபத்தாம் கிளாஸ் சிறுமி லட்சுமி,
அம்மா தடுப்பதை உதாசீனம் செய்து மூலையில் இருந்த பிரம்பை எடுத்து நாகம் பக்கத்தில் சென்று சுள் என்று தரையில் தட்டினாள். பாம்பு படமெடுப்பதை விட்டு விட்டு மரியாதையாய் தரையில் விழுந்து கும்புடுவது போல..லட்சுமி காலருகில் விழுந்து ...பின் விர்ர்... என்று பொந்துக்குள் மறைந்தது.

லட்சுமி ஒரு மினி நாக தேவதையாகவே அன்று ஊருக்குத் தோன்றினாள்!.போற்றப்பட்டாள்!

" குதிர் எல்லாம் இல்லை இன்று.
ஆனாலும் அந்த பாம்புப் பொந்து மட்டும் இன்னும் இருக்கு பாத்தியா டீ. " என்று சுவற்றில் இருந்த ஒரு ஓட்டையைக் காட்டினாள் சரஸ்வதி.

பின் "அது சரி. அன்னிக்கு பாம்பைத்
தொறத்தும் அளவு உனக்கு எப்படி டீ தைரியம் வந்தது. " என்றாள்.

"ஏதோ அசட்டு தைரியம் தான்.பாம்புக்கு பதிலா கரப்பாம் பூச்சி என்றால் அந்த இடத்தை விட்டே ஓடி இருப்பேன். இன்றும் அப்படித்தான். " என்று சிரித்தாள் லட்சுமி.

பின் கதவு திறந்து புழக்கடைப் பக்கம் போனார்கள்.
அந்தக்காலத்தில் அங்கு நீண்ட தோட்டம் இருந்தது. இன்று சில வேப்ப, பூவரசன் மரங்களும் வேலிக்காத்தான் முள் செடிகள் மட்டும் தான்.

கடைசியில் ஒரு பெரிய கல் திண்ணை. அப்புறம் பின்புற கேட்
உண்டு. கேட்டுக்கு பின்னே ஐம்பது அடியில் குதூகலத்துடன் ஓடும் தமிரபரணி ஆறு.

கல் திண்ணையில் இருவரும் ஆசுவாசமாக அமர்ந்தனர்.

"சரி லட்சுமி. மாடில டிரங்க் பொட்டில இருந்து எடுத்த லெட்டர் பத்திப் பேசலாமா. அந்தக் கதை எனக்கு இன்னமும் முழுசா தெரியாது. " என்று சிரித்தாள் சரஸ்வதி.
.
"சொல்றேன்" என்றாள் லட்சுமி.

"நான் பி.யூ.சி க்கு அப்புறம் கலா ஷேத்ரால கார்னாட்டிக் மியூசிக் ல ரொம்ப ஆசைப்பட்டு சேந்த போது எனக்கு அங்கு பரிச்சயமானவன் அஜய்... ஒரு பெங்காலி.
பரத நாட்டிய மாணவன் . ஓவியம், சிலை அமைப்பு இவற்றில் மிக ஈடுபாடு உண்டு. அதிலும் Ph. D ஆராய்ச்சி மாணவன். ரொம்ப நல்லவன். நம் ஊர் பக்க கோவில்களின் அருகில் தங்கி ஆராய்ச்சி செய்யத் திட்டமிட்டிருந்தான். இந்த வீட்டில் ஒரு அறையில் ஒரு மாசம் தங்க, தாத்தாவின் அனுமதி கோரி எழுதியிருந்தான். அவ்வளவு தான். "

"அவ்வளவு தானா. அப்போ தாத்தாவும் அப்பாவும் ஏன் ருத்ர தாண்டவம் ஆடினாங்க?."

அந்த லெட்டர்ல அஜய் ஆங்கிலத்தில் எழுதியது இது தான். கேள் "என்ற லட்சுமி
அந்த இன் லேண்ட் லெட்டரை பிரித்து ஆங்கிலத்தில் படித்தாள்.

"டியர் லட்சுமி.
நாம் ஏற்கனவே விவரமாகப் பேசிய விஷயத்தையும்
அதில் நீயும் சம்மதிக்கிறாய் என்பதையும் சேர்த்து உன் தாத்தாவிடம் சொல்லி வை . நான் நல்லூரில் இருபத்தி இரண்டாம் தேதி தாத்தாவை சந்தித்துப் பேசுகிறேன்.உன் பதிலை எதிர்பார்க்கிறேன்.
வித் லவ்
அஜய்.

இவ்வளவுதான்.
ஆனால் போஸ்ட்மேன் தாத்தாவிடம் லெட்டரை கொடுக்க பூகம்பம் வெடித்தது. நான் தாத்தாவிடம் அஜய் நம் வீட்டில் ஒரு மாசம் தங்கும் விஷயம் பற்றித்தான் எழுதியிருக்கிறான் என்றதை அவர் சுத்தமாக நம்பலை. வித் லவ் என்று எழுதுவது சகஜம்தான். லவ் என்பது சகஜமான அன்பைத் தான் குறிக்கும் என்பதைத் தாத்தா ஒப்புக்கொள்ளவே இல்லை.
அப்பா அம்மாவை உடனே மெட்ராசில் இருந்து அழைத்தார் தாத்தா...'பெண்கள் படிச்சுக் கிழிச்சது போதும்'..என்றார்.

மூணே மாசத்தில எனக்கு அமெரிக்கா என்ஜினீயர் கிஷோரையும் உனக்கு சதீஷ் ஐ.ஏ. எஸ் ஐயும் கல்யாணம் செய்து நம்மை அமெரிக்கவுக்கும் பாம்பேக்கும் விரட்டி விட்டுவிட்டார்கள்,இவர்கள் எல்லாரும் சேர்ந்து.

தாத்தா,பாட்டி, அப்பா,அம்மா, இவர்கள் மறைவுக்கு அப்புறம் அவர்கள் காரியம் நடக்கும் போது தான் நீயும் நானும் மெட்ராசில் பார்த்துக் கொண்டோம்.

அம்பது வருஷம் கழிச்சு இன்னிக்கு தான் நல்லூரில் நம் வீட்டில் மீண்டும் சேர்ந்து இருக்கிறோம். கதை முடிந்தது. சுபம் "என்று முடித்தாள் லட்சுமி..

இசக்கித் தேவர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்தது.
இரவு முழுவதும் பழய நினைவுகளைச் சுமந்து,கடந்தனர் இருவரும்.
காலையில் குளித்து கோவில் சென்று வந்த போது இசக்கித் தேவர் வந்தார்.

"தேங்க்ஸ் தேவரே. ஒருநாள் இந்த வீட்டில் இன்பமாய் இருந்தோம். உங்க புண்ணியம்."

"என்னம்மா இப்படிச் சொல்லுதிய. இது உங்க பாட்டன்,ஆத்தா வீடு பொறவு உங்கவீடுல்லா.
இப்பந்தானே......"

"இல்லை தேவரே. தாத்தா அப்பா யாரும் இல்லாத போது வீட்ட பாத்துகிட்டிக . அப்பொறம் எங்களலே முடியாம நாங்க விக்க நினைச்ச போது நல்ல வெல கொடுத்து வீட்ட வாங்கிட்டிக.
இப்போ கால ஓட்டதுக்கு ஏத்த மாதிரி வீட்ட இடிச்சு பதினாறு பிளாட் கட்டப்போறீங்க. நல்ல காரியம் தானே.எல்லாம் புக் ஆயிடிச்சுனு சொன்னாக.

வீட்டை இடிக்கும் முன்னாடி நாங்கள் ஒரு முறை கடைசியா வீட்ட பார்க்க ஆசைப்பட்டதால எங்களுக்காக வெயிட் பண்ணியிருக்கீங்க.
ரொம்ப நன்றி. எங்கள் பெற்றோர், தாத்தா பாட்டி, இவர்களைக்கூட அவர்கள் கடைசி காலத்தில் மரணத்துக்கு முன் எங்களலே பார்க்க முடியலே.
வீட்டு விஷயத்தில அது முடிந்தது ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி தேவரே . "
என்ற லட்சுமி டாக்ஸியில் ஏற சரஸ்வதி தொடர்ந்தாள்.இருவர் கண்களிலும் நீர் மறைத்தது.

டாக்ஸி நெடுஞ்சாலையில் நெல்லை நோக்கி செல்லும்போது சரஸ்வதி,

"லட்சுமி! அந்த அஜய் பிஸ்வாஸ நீ அன்னிக்கு லவ் பண்ணியா, இல்லையா? இல்லைனா, பண்ணவே இல்லைனு இப்ப சத்தியம் பண்ணு!" என்று தன் வலக் கையை நீட்டினாள்.

புன்னகையுடன் அவளைஉற்றுப் பார்த்த லட்சுமி " எனக்கு தெரியலையேம்மா "
என்று நாயகன் படக் கமல் பாணியில் பதில் சொன்னாள்.!!