தொடர்கள்
கதை
நின்று போன கடிகாரம். - பா.அய்யாசாமி

20230014000028818.jpg

டேய் மாரி !

உங்க ஐயா வருகிறார் பாரு என ஓட்டல் முதலாளி சப்ளையர் மாரியை அழைத்துக் கூறவும்,

வயது எண்பதை கடந்த முதியவர், நாலு முழத்தில் வெள்ளைவேட்டி பளிரென்ற வெள்ளைசட்டை அணிந்து, நடக்க முடியாமல் படியேறி வந்துக்கொண்டிருந்தார்.

ஓடிச்சென்று கைத்தாங்லாக அழைத்து வந்து தனது சர்வீஸ் மேசையில் அமர வைத்த மாரி, பத்தாண்டுகளாக இந்த ஓட்டலில் சர்வர்.

கடிகாரத்தைப் பார்த்த மாரி, மணி சரியாக எட்டாக ஐந்து நிமிடமியிருந்தது.

பத்து நிமிடமே ஆகும் தாத்தாவின் வீட்டிலிருந்து ஓட்டலுக்கு வந்து சேர,

ஒரு ஒப்பந்தம் இந்த தாத்தா பாலுவிற்கும் மாரிக்கும். எட்டு மணிக்குப் பின் அவர் சாப்பிட வந்தால்,அவர் சாப்பிடும் இரண்டு இட்டிலி மற்றும் காபியின் செலவு முப்பது ரூபாய் மாரியினுடையது.

மாரி பாவம் அவன், கொடுக்க கூடாது என்பதற்காகவே நேரத்திற்கு வந்து சாப்பிடுவார் தாத்தா.

கனிவாக கவனித்ததிலும், சாயலிலும்,இழந்த தன் பிள்ளையை மாரியாக நினைவு கூர்ந்தார். அவர் நேரம் தவறாமல் சாப்பிடனும் அதுதான் முக்கியம், என்பதற்காக தன் காசை எடுத்துக் கொடுப்பதில் மாரிக்கும் மகிழ்ச்சிதான்.

இந்தப்பு ரிதல் இருவருக்குமே நன்கு உண்டு. இருவருக்கிடையேயான இந்த போட்டியை ஓட்டலில் என்ன கூட்டம் இருந்தாலும் தினம் முதலாளி உட்பட சக தொழிலாளர்களும் ரசிப்பதுண்டு.

தாத்தா சாப்பிட்டவுடன் அவரை வண்டியில் அமர வைத்து அவர் வீடு வரை திரும்பக் கொண்டு விட்டு வருவான் மாரி, கடந்த இரண்டு வருடங்களாக..

அவருக்கென வீட்டில் யாருமில்லை,மகனை இழந்து, தன் மனைவியையும் இழந்து தனி மரமாக வாழ்க்கை, அவரின் தற்போதைய ஒரே சொத்து தங்கியிருக்கும் அந்த எழுநூறு சதுரஅடி குடிசை வீடு.

சொந்தமாவது, பந்தமாவது இந்தக் காலத்திலே, காசு பணத்திலேதான் குறியாக இருக்காங்க, நீயாவது என்ன சாப்பிடறே கேட்கிறே,கேட்க வேற நாதியில்லை எனவும்

சாகிற வயசு வந்த பின்தான், மனுசங்க முக்கியம்னு புரியுது என அடிக்கடி புலம்புவார் தாத்தா.

என்னடா மாரி, இன்றைக்கு பாலு தாத்தா வரலை, காசை நீ ரெடி பண்ணிக்க, தினத் தவணை கட்டிடாதே, கண்டிப்பாக நீதான் இன்று கொடுக்கப்போகிறாய் என்றார் முதலாளி.

அதைவிட அவர் ஏன் வரலை? மணி் ஒன்பதை தாண்டி விட்டது என்ற கவலைதான் மாரியை வருத்தமடையச் செய்தது.

ஒரு எட்டு தாத்தா வீடு சென்று பார்த்துவிட்டு வந்திடலாமா? என முதலாளியிடம் கேட்டதற்கு கூட்டம் குறையட்டும் போய் பாரு என்றார்.

ஓட்டல் இரவு மூடுவதற்கு முன் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிச்

சென்ற மாரியைக் காணாது, முதலாளியும் பாலுதாத்தாவின் வீடு நோக்கி சென்றார்,

அங்கே சிறிய கூட்டம் குழுமியிருக்க, என்னவென்று அருகே சென்று பார்த்ததில் படுக்கையில் படுத்தபடி இருந்த தாத்தாவின் அருகில் மாரி அழுதபடி இருந்தான்.

சுவர்கடிகாரம் ஏழு முப்பதிலேயே நின்று போயிருந்தது. தாத்தாவின் கையைப் பற்றியபடி ஒவென்று

அழுதான் மாரி. மடக்கியிருந்த தாத்தாவின் கைகளில் கசங்கியிருந்தது முப்பது ரூபாய்.

ஐயா, தாத்தா என்னை விட்டு போயிட்டாருங்கய்யா என பெருங்குரலெடுத்து அழுதான் மாரி.

அவன் மட்டுமே அங்கு அழுதான்.