பள்ளிவாசல்
காலை எட்டு மணி.
அவர் குளித்திருந்தார். சொற்ப தலைகேசம் செம்பட்டையாய் இருந்தது.
கைலியை இடுப்பில் மடித்து விட்டிருந்தார். இரு பாக்கட்கள் வைத்த காடா
பனியன் அணிந்திருந்தார். மீசை இல்லாத மேலுதடு தடித்து வீங்கி இருந்தது.
அவரது வாய் ஒரு ஹிந்தி பாடலை முணுமுணுத்தது. துவைத்த ஆடைகளை
கொடியில் காயப்போட்டார். அவருக்கு வயது 40இருக்கும். ஜாவேத் காலிம்
தலைமையில் பத்து பேர் கூட்டம் திமுதிமுவென உள்ளே நுழைந்தது.
வந்தவர்கள் யாரென தெரியாவிட்டாலும் அவர் “அஸ்ஸலாமு அலைக்கும்!”
என்றார்.
ஜாவேத் “உன் சலாம் யாருக்கு வேணும்?”
“என்ன விஷயமாக வந்திருக்கீங்க? இமாமை பாக்கனுமா?”
“பார்யா இவனை… சூப்பரா தமிழ் பேசுரான்…”
“வந்து ஒன்றரை வருஷமாச்சு. அதுக்குள்ள மூணுதடவை தமிழ்
கத்துக்கலாமே…’’
“நீ பீகார்காரன் தானே?”
“ஆமாம்!”
“அங்க எங்கிருக்க?”
“பாட்னா பக்கத்ல..”
“உன் பெயர் என்ன?”
“ஷபி உல் உமாம்…”
“உனக்கு கல்யாணமாய்ருச்சா?”
“கல்யாணமாகி பத்து வருஷமாகுது. நான்கு குழந்தைகள். மூத்தது
பெண். அடுத்த மூணும் ஆண் குழந்தைகள்!”
“நாலு குழந்தைகளை பெத்து போட்டுட்டு தமிழ்நாட்டுக்கு ஓடி
வந்திட்டியாக்கும்.. உன் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நாங்கதான் சோறு
போடனும் போல…”’
வந்திருந்தவர்களின் வெறித்தனமான கோபத்தை அவதானித்தார்
உமாம். “என் மேல எதனாலேயோ கோபமா வந்திருக்கீங்க.. பொறுமையா
பேசுங்க… என்ன விஷயமா வந்திருக்கீங்க?”
வந்திருந்தவர்களில் ஒருவன் கையுயர்த்தினான்.
“ரொம்ப அமைதியா பேசுன்னா உன் மேல தப்பில்லைன்னு ஆய்ருமா?”
“என்ன தப்பு?”
“நீ என்ன படிச்சிருக்க?”
“பத்தாம் கிளாஸ் பெயில். ஆலிமுக்கு படிச்சிருக்கேன் அவ்வளவுதான்…”
“நான் ஏழுவருடங்கள் ஆலிம் படிப்பு படித்தவன். ஆயிரத்திசொச்சம்
மார்க் எடுத்து ப்ளஸ்டூ பாஸ் பண்ணிருக்கேன். எனக்கு இமாம் பணியும்
கிடைக்கல மோதினார் பணியும் கிடைக்கல..”
“எதாவது பள்ளில இமாம் போஸ்ட் காலியா இருக்கான்னு கேட்டு
சொல்லவா?”
“நீ சிபாரிசு பண்ணி எனக்கு வேலை கிடைக்ற நிலைமைல நாங்க
இருக்கம் பாரு..”
“உதவி யாரும் யாருக்கும் பண்ணலாமில்ல?”
“பாட்னால 238மசூதிகள் இருக்கே… அங்கேயே வேலை தேடிக்காம தமிழ்
நாட்டுக்கு ஏன்ய்யா வந்த?”
“என்ன பாய் இப்படி கேக்றீங்க? தமிழ்நாடு இந்தியாவுக்குள்ளதான
இருக்கு? உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்தானே? நாங்களும்
நீங்களும் குர்ஆனை வேற வேற மாதிரியா ஓதுரோம்?”
“உன் உச்சரிப்பு வேற எங்க உச்சரிப்பு வேற…”
“சிறுசிறு வித்தியாசம் பெரிய விஷயமில்லை..”
“தமிழ்நாட்டில் முக்கியமான மதரஸாக்கள் நாற்பது உள்ளன.
அவற்றிலிருந்து வருடம் 500ஆலிம்களாவது பட்டம் பெற்று வெளியே
வருகின்றனர். தமிழ்நாட்டில் 3000மசூதிகள் இருந்தும் 500ல் 100ஆலிம்கள்தான்
இமாம் பணி பெறுகின்றனர். மீதி 400பேர் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக
மெக்கானிக்குகளாக கசாப்புகடைகாரர்களாக வழி மாறி போய் விடுகின்றனர்.
வழிமாறி போகும் அவர்கள் ஒரு நாளும் இமாம் பணிக்கு திரும்புவதில்லை!”
“இந்தியாவில் 24010மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் அங்கீகாரம்
பெற்றவை 4878. அந்த மதரஸாக்களில் படித்தோர் அனைவருக்கும் இமாம்
வேலை கிடைத்து விடுகிறதா என்ன?”
“பார்ரா இவன்.பதிலுக்கு பதில் புள்ளிவிவரங்களை அள்ளி விடுறதை…”
“நிதர்சனத்தை சொன்னேன்..”
“தமிழ்நாட்ல ஆலிமுக்கு படிச்சவங்களுக்கு பீகார்ல இமாம் பணி
தருவீங்களா?”
“வடநாட்டை விட தமிழ்நாட்ல கல்வியறியும் வேலைவாய்ப்பும்
அதிகம். தண்ணீர் இருக்ற இடம் தேடி மான்கள் வரத்தானே செய்யும்!”
“வர்ற மான்கள் வெறும் தண்ணி மட்டுமா குடிச்சிட்டு போகுதுக?
பள்ளிவாசலுக்குள்ள செம பாலிடிக்ஸ் பண்ணுதுக. பள்ளி நிர்வாகிகளுக்கு
இடையே குடுமிபிடி சண்டையை மூட்டி விட்ருதுக. நல்லா இருக்ற இமாமை
கோள்மூட்டி அடிச்சுவிரட்டிட்டு தன் ஆளை கொண்டு வந்து பணி
அமர்த்துதுக. நாங்க வாங்ற சம்பளத்ல இரண்டாயிரம் மூவாயிரம் குறைச்சு
வாங்கிக்கிரதுகள். பள்ளிபணியோட ஊறுகா விக்றது டீத்தூள் விக்றது சீட்டு
போடுறது துணிமணி விக்றதுன்னு சைடு பிசினஸ் பண்ணுதுக..”
“சம்பளம் பத்தலேன்னா சைடு பிசினஸ் பண்ணத்தான் செய்வாங்க.
பள்ளிவாசல் பணியை சிறப்பா நிறைவேத்திட்டு மத்த நேரத்ல அவங்க
எதாவது பண்ணிட்டு போகட்டுமே…”
“எங்களுக்கெல்லாம் பொண்டாட்டி பிள்ளைகளை வாரம் ஒரு
தடவையாவது பாக்கலேன்னா எங்க இதயம் வேர்த்திடும். நீங்கல்லாம் எப்ப
தான்ய்யா உங்க பொண்டாட்டி பிள்ளைகளை போய் பாக்றீங்க?”
“கோவைலயிருந்து ஷோன்பூருக்கு ட்ரெய்ன் இருக்கு. பாட்னாவுக்கு
பத்துகிமீ தூரம். மூணுமாதத்துக்கு ஒருதடவை குடும்பத்தை போய் பாத்துட்டு
வருவேன். மாதாமாதம் சம்பளம் வந்தவுடன் மனைவியின் வங்கி கணக்குக்கு
மறக்காம பணம் அனுப்ச்சிருவேன். தினம் ஒரு முறையாவது நானும் என்
குடும்பமும் விடியோகாலில் பேசிக்குவோம். நாலுபிள்ளை பெத்த பிறகு
பொண்டாட்டி பக்கத்ல இருந்தா என்ன தூரத்ல இருந்தா என்ன?”
“நாங்க இங்க உன்னை நேர்காணல் பண்ண வரல… உன் வீரதீர
சூரதனத்தை குப்பைல போடு. நாங்க வந்த நோக்கம் வேற!”
“என்ன நோக்கம்?”
“உன்னை பொட்டிபடுக்கையோட பாட்னாவுக்கு அடிச்சு துரத்த
வந்திருக்கிறோம்!”
“தமிழ்நாட்ல நான் மட்டுமா இருக்கேன்? நூத்துக்கணக்கான உபிகாரர்கள்
பீகார்காரர்கள் ஜார்கன்ட்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் என்ன
செய்வீங்க?”
“நாங்க விரட்றதை பாத்து மத்தவங்களும் விரட்ட ஆரம்பிச்சிருவாங்க…”
“இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவம் எங்கே போகும்?”
“வயித்துக்கு பிறகுதாய்யா சகோதரத்துவம்? கிஜேபிக்கு ஓட்டை
போட்டுட்டு வேலை செய்ய மட்டும் தமிழ்நாட்டுக்கு வரும் நார்த்
இன்டியாகாரன்களை பாத்தா வயிறு எரியுது. உங்களை எங்காள்க ‘பான்பராக்
வாயன்கள்’ என்றுதான் அழைக்கிறான்க!”
“நான் பான்பராக் போடுவதில்லை. நான் சோடிக்கு ஓட்டு
போடுவதில்லை. அகிலேஷ்யாதவ்வுக்கு தான் போட்டேன்!”
“வெட்டிபேச்சு எதுக்கு? உனக்கு ஒருவாரம் டயம் தரேன். அதுக்குள்ள
உன் கணக்கை செட்டில் பண்ணிட்டு பாட்னாவுக்கு ஓடி போய்ரு!”
“போகலன்னா என்ன பண்ணுவீங்க?”
“அடிச்சு பார்சல் பண்ணிடுவோம்.. கபர்தார்!”
“வன்முறை தேவையா?”
“அன்பாய் சொல்வோம் கேக்கலேன்னா அடிச்சு சொல்வோம்..”
காட்சியமைப்புக்குள் அந்த மஹல்லாவின் மிகமூத்த தொழுகையாளி
அப்துஸ் சத்தார் வந்து சேர்ந்தார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“என்ன பிரச்சனை?”
ஜாவேத் காலிம் நடந்தததை விவரித்தான்.
“வடநாட்டு ஆலிம்கள் தமிழ்நாட்டு இமாம் மோதினார் பணிகளுக்கு
வருவதில் பல நெகடிவ் பல பாஸிடிவ் அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டு
ஆலிம்களுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டு பள்ளிவாசல்களில் பணி தரனும்னு
எதாவது சட்டம் போடமுடியுமா? அப்படி ஒரு சட்டத்தை தமிழ்நாட்டு ஐக்கிய
ஜமாஅத் உலமா சபையோ வக்புபோர்டோ தமிழ்நாட்டு அரசாங்கமோ
நிறைவேற்ற முன் வரும்களா? ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும்
தனித்தனி தீவுக்கூட்டமா செயல்படுறாங்க. அவங்க விருப்பத்துக்கு தான்
இமாமும் மோதினாரும் நியமிச்சுக்கிராங்க. ஒரு தமிழ்நாட்டு ஆலிம்
இன்னொரு தமிழ்நாட்டு ஆலிமை ஆதரிக்கிறதில்லை. ஒரு வடநாட்டு ஆலிம்
பத்து வடநாட்டு ஆலிம்களை தமிழ்நாட்டுக்குள்ள கொண்டு வராங்க.
கூட்டமைப்பு செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை தனிநபர் வன்முறை
நிறைவேத்தி விட முடியாது. மேற்கொண்டு மோதினாரை தொந்திரவு
செய்யாமல் அவரவர் பணிகளுக்கு திரும்பி செல்லுங்கள்…”
ஜாவேத் காலிம் இருண்டான்.
“மோதினார்! வறுமையின் காரணமாகவும் வேலையில்லா திண்டாட்டம்
காரணமாகவும் எங்கள் இடத்துக்கு வந்து பணி சேர்கிறீர்கள். உங்களிடமுள்ள
எல்லா நெகடிவிட்டிகளையும் தலை முழுகிவிட்டு எங்களுடன்
சகோதரர்களாக இணைந்திடுங்கள்!”
ஷபி உல் உமாம் தலையாட்டினார்.
“தகுதியான ஆலிம் புனித மெக்காஹ்வின் இமாமாக கூட
பணியாற்றலாம்… உலகின் 197 கோடி முஸ்லிம்கள் சகோதர சகோதரிகளாக
பிறமத சகோதரர்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்வோம்!”
முட்டிமோதிக் கொண்ட இரு ஆலிம்களும் கூட கூட்டாக “வாழ்க
இந்தியா!” என கோஷமிட்டனர்.
Leave a comment
Upload