இந்தியப் பாடகர்களில் அவர் ஒரு ஆச்சரியம், அவரின் குரலும், இசையும் தெய்வம் கொடுத்த வரம். அவர் தந்தை ஒரு பாடகர், எனினும் அதைத் தாண்டி இந்திய இசை அடையாளமாக அவர் தன் வட்டத்தை மீறி வந்து வரலாறு படைத்ததெல்லாம் அவரின் முற்பிறவியின் பலன்
ஆம். கிட்டத்தட்ட 24 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்களைப் பாடி 60 வருடமாகக் களத்தில் நிற்கும் மிகப் பெரும் சாதனை. மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற சாதனைக் கலைஞன்.
கட்டச்சேரி ஜோசப் ஜேசுதாஸ் எனும் கே ஜே ஜேசுதாஸ்
தந்தை ஜோசப் தான் அவரின் முதல் குரு, அடுத்து செம்பை வைத்யநாத பாகவதர் எனும் இசைமேதையிடம் தன்னைக் ஒப்புக்கொடுத்தார், முழுவதுமாய்.
ஞானி இன்னொரு ஞானியினை உருவாக்குவது போல அந்த இசைமேதை ஜேசுதாஸ் எனும் மாபெரும் கலைஞனை பட்டை தீட்டினார்.
அதன் பின் ஒளிர ஆரம்பித்தார் ஜேசுதாஸ், மலையாளப் பாடகரான அவர் வீணை எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் "நீயும் பொம்மை நானும் பொம்மை" என்ற பாடலோடு தமிழ்த் திரையில் நுழைந்தார். அந்தப்பாடலில் இவர் குரலைத் தவிர ஒரே ஒரு இசைக்கருவி தான்.
அன்று துவங்கிய சங்கீத மழை இன்று வரை நம்மை நனையவைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்று 83 வது பிறந்த நாள்.
கர்நாடக சங்கீதம் அவருக்கு முற்பிறவி பயனாய் வாய்த்தது. மிக மிக சுத்தமாக ,அட்சரம் பிசகாமல் பாடினார். தியாகராஜ கிருதி பாடினால், ராமன் மேடையில் ப்ரசன்னமானான். நாராயணீயம் பாடினால் குருவாயூரப்பன் குழந்தையாய் இடுப்பில் கைவைத்து நின்று கேட்பான். இசைக்கு மொழி, மதம், நாடு என எந்த பேதமும் இல்லை என்று உலகம் முழுதும் உணர்வைத்தவர் இந்த மஹா கலைஞன்.
ஜேசுதாஸின் குரல் தெய்வீகக் குரல், அது ஆலயமணி போன்ற ஒருமாதிரி வசீகரக் குரல், கேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும் ஒரு பக்தி மிக்க குரல். அதனாலேயே அவர் "கான கந்தர்வன்" என்று பாராட்டப்பட்டார்.
தெய்வீகக் குரல் என்பது அபூர்வம் , அமைந்தாலும் அதை ராகங்களில் இழைத்து பாடுதல் என்பது இன்னும் அபூர்வம்
அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 60 வருடங்களுக்கு மேலாக பாடிக் கொண்டிருப்பவர்
அவரையும் திரை இசைபாடல்களையும், பக்தி பாடல்களையும் பிரிக்க முடியாது.
காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியிருக்கின்றார், கண்ணதாசன், வாலி போன்றோரின் வரிகள் அவரின் குரலால் நம் அனைவரின் நெஞ்சில் பதிந்து விட்டது. "தெய்வம் தந்த வீடு " "மலரே குறிஞ்சி மலரே " "காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டுவைத்து " இன்னும் எவ்வளவோ...
"அம்மா என்றழைக்காத" என்று அக்குரல் உள்ளிறங்கும் பொழுதே ஒரு சிலிர்ப்பும் அமைதியும் ஏற்படும்.
அவர் குரலும் இசைஞானியின் இசையும் இணைந்து "சிந்து பைரவி" என்ற காவியத்தை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் படைத்தார்.
மனதிற்குப் பெரும் நிம்மதியும், உருக்கமும் கொடுக்கும் குரல் அந்த ஜேசுதாசுடையது.அந்த முகம் போலவே அக்குரலும் அமைதியானது, பாடும் பொழுது எவ்வித சலனமும் அவரிடம் இருக்காது, தியானத்தில் பாடுவது போன்றே தோன்றும். ஆன்மாவில் இருந்து எழும் குரல் அவருடையது.
ஆன்மாவில் இருந்து அவர் பாடுவதால் அந்தக் குரலும் ராகமும் எல்லோர் மனதையும் எளிதாகத் தொடுகின்றது.
குருவிடம் சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜேசுதாஸ் பெரும் உதாரணம், "பல்லவி நரசிம்மாச்சாரியாரை " அவரின் வயதான காலத்தில் தன் வீட்டிலேயே வைத்து பராமரித்த அற்புத மனிதர் அவர். இன்றிருப்பவர்கள் அவரிடம் நிறைய படிக்க வேண்டும்.
சபரிமலை எனும் அந்த தெய்வ சந்நதியில் ஒரு தெய்வீக குரல் ஒலிக்க வேண்டும் என்பது அவரின் பூர்வ ஜென்ம தவத்தின் பயனாய் ஐயப்பன் அருளிய வரம் .
அதன்படி "ஹரிவராசனம்" என்னும் அற்புத பாடலை அவரின் ஆத்மாவின் துணைகொண்டு பாடினார் ஜேசுதாஸ்.
சபரிமலை ஐயப்பன் எனும் பேசும் தெய்வத்துக்கு அடுத்து பிரசித்தி பெற்றது, தெய்வீகக் குரலில் பிறந்த "ஹரிவராசனம்" பாடல் என்பதில் இருக்கின்றது ஜேசுதாஸுக்கு தெய்வம் வழங்கிய பெரும் வரம்.
இன்று (10/01/1940) தனது 83 வது பிறந்தநாள் கொண்டாடும் காலத்தை கடந்து நிற்கும் பாடல்களை கொடுத்த, காலத்தால் கொடுக்கப்பட்ட "கான கந்தர்வன்" .
Leave a comment
Upload