பொங்கல் வருவதற்கான நாட்கள் நெருங்க, நெருங்க, என் மனம் ஒரு 30 ஆண்டுகளுக்கு முன் சென்றது. என் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், நான் என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களோடு ஆனந்தமாகக் கழித்த பொங்கல் கொண்டாட்டங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
நான்கு நாள் பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளான போகியன்று, காலை விடிவதற்கு முன்னாலே வீட்டினர் வீட்டிற்கு வெளியே தெருவில் நெருப்பு மூட்டுவார்கள்.தேவையில்லாதப் பொருட்களை எல்லாம் தீயில் போட்டு சிறு மேளத்தை அடித்து தீயை சுற்றி சுற்றி வருவேன். எங்களுக்கு அதுதான் அன்றைய பான்ஃபைர்(Bonfire) குளிரான மார்கழி மாத இறுதிநாளன்று, நெருப்பின் வெப்பம் கதகதப்பாக, இதமாக இருக்கும்.
பொங்கல் விழாவிலே சிறப்பாக இருப்பது தெருவில் போடும் கோலங்கள்தான்.
எங்கள் தெருவில் நான்கு நாட்களும் எல்லோருடைய வீட்டு வெளியேயும் பெரிய பெரிய கோலங்கள் போடப்படும், நான் அம்மா மற்றும் என் சகோதரிகள் போகியன்று தவிர மற்ற மூன்று நாட்களும் முன் நாளிரவே கோலம் போட்டு விடுவோம். எங்கள் ஊரில் அப்போது நடைபாதை (Platform) கிடையாது. அதனால் வீட்டிற்கு முன்பே பரந்த இடம் இருக்கும். தார்சாலைக்கு அடுத்து மண்சாலை இருக்கும். அங்கே நன்றாக சாணம் போட்டு மெழுகி மூன்று கோலங்கள் போடுவோம்.
அதற்கடுத்து வண்டிகளை மேலே ஏற்றுவதற்கு இலகுவாக, அப்பா போட்ட சாய்வான மேடை இருக்கும். அதில் அம்மா எப்போதும் பொங்கலுக்கு 24 நேர் புள்ளி 24 வரிசையில் ரத்ன ஜமுக்காளம் கோலம் போடுவார்கள். அப்படியே நேரில் பார்ப்பது போல் இருக்கும். சாய்வான மேடைக்கு இரண்டு பக்கமும் உள்ள மண்தரைகளில் இரண்டு கோலங்கள் போடுவோம். மொத்தமாக தெருவில் ஆறு கோலங்கள் போடுவோம். ரோஜாப்பூ, ஸ்வஸ்டிக், யானை, விளக்கு, பொம்மை, ஜோக்கர் எனப் பலவிதமான கோலங்களை நாங்கள் போடுவோம்.
இப்போது இருப்பதுபோல, அப்போது எங்களுக்கு கூகுள் (Google) அண்ணாச்சி கிடையாது கோலப்புத்தகங்கள்கூட அப்போது வரவில்லை. பாட்டி, அம்மா உறவினர்கள் மற்றும் தோழிகளிடமிருந்துக் கற்றுக்கொள்வதுதான்.
எனக்கும், என் சகோதரிகளுக்கும் எங்களுடைய சகோதரர்கள்தான் பாதுகாவலர்களாக எங்குப் போனாலும் கூடவே வருவார்கள். அப்போது அநேகமாக அனைவரின் வீட்டிலும் அப்படிதான் வழக்கமாக இருந்தது. ஆனால் பொங்கல் தினங்களில் மட்டும் எல்லா வீட்டிலும் பெண்கள் இரவில் தனியாக எங்கள் தெருவில் உலா வருவோம். ஒவ்வொரு வீடாகப்போய் அவர்களின் கோலத்தைப் பார்த்து, மதிப்பெண்கள் போட்டு அந்த வீட்டுப் பெண்களுடன் பேசி ஒரே அரட்டைதான். இப்படி நாங்கள் மட்டும் நள்ளிரவில் தனியாகச் சுற்றி வருவது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாவும் இருக்கும்.
எங்கள் வீட்டு இடதுபக்கத்திலுள்ள வீட்டினர், எளிமையான கோலம்தான் போட்டிருப்பார்கள். ஆனால் வெண்மை நிறத்திலான கம்பி கோலத்திற்கு செம்மண் இட்டு, அதன் நடுவில் மாட்டு சாணம் உருட்டி வைத்து, அதில் பூசணிப்பூ வைத்திருப்பார்கள். அவைப்பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும்.
வலதுப்பக்க வீட்டினர் புள்ளி வைத்து கோலம் போடாமல் கடவுள்படம், பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள்கொத்து, கதிரவன் மற்றும் ஏர் உழும் விவசாயி என பொங்கல் காட்சியை அப்படியே மண் ரோட்டில் வரைந்திருப்பார்கள். அவை வண்ணமடித்து, காண்பவர்களின் கண்களை கவரும்படி இருக்கும். இப்படி ஒவ்வொரு வீட்டு கோலத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். நான் அந்தக்காலத்தில் பழுப்பு நிறத்தை தவிர மற்ற வண்ணப்பொடிகளை கடையில் வாங்குவேன். பழுப்பு நிறத்திற்கு மட்டும் அம்மா போடும் ஃபில்டர் காபியிலிருந்து வடிகட்டிய தூளை ,சேகரித்து வெயிலில் காயவைத்து அதனைக் கோலத்திற்கு வண்ணமடிக்க உபயோகப்படுத்துவேன்.
பொங்கலன்று சாயங்கால வேளையில் பாட்டி கரும்பு துண்டை சீவி, சிறிய சிறிய துண்டுகளாக எனக்கு கொடுப்பார்கள். கரும்பின் கறை உடைகளில் படாமலிருக்க நான் பழைய உடையை போட்டுக்கொண்டு, கரும்பை நன்கு மென்று, சாறை உறிஞ்சுவேன். அதன் ருசி, இயந்திரம் வழியாக எடுக்கும் கரும்புச்சாறை விட அதிகமாக இருக்கும்.
பொங்கல் தினத்தன்று எப்போது புதிய ஆடை அணியப் போகிறோம் என ஆவலுடன் காத்திருப்பேன். எங்களுக்கு இப்போது போல நினைத்தால் ஆடை வாங்கும் வழக்கம் எல்லாம் அப்போது கிடையாது. எங்களுக்கு தீபாவளி பொங்கலுக்கு மட்டும் தான் புதிய துணி, பிறந்தநாளுக்கு புதிய துணி எடுப்பதுகூட அதற்குப்பின் காலத்தில் தான் வழக்கம் வந்தது. தீபாவளிக்கு எடுக்கவில்லை என்றாலும் பொங்கலுக்கு மட்டும் நிச்சயமாக புதிய ஆடை இருக்கும் புதிய ஆடை போட்டுக்கொண்டு வலம்வருவது ஆனந்தமாக இருக்கும்.
பொங்கலன்று காலை வாசலில் கோலம் போட்டு செம்மண் இட்டு,புதிய அடுப்பில், புதிய பானையில், புதிய அரிசி போட்டு,பொங்கல் வைப்போம். பால் பொங்கி வழியும்போது, கதிரவனை பார்த்து வணங்கி, நாங்கள் அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று கூச்சலிடுவோம்.
நாங்கள் அனைவரும் பண்டிகை நாட்களில் மட்டும் வரவேற்பறையில் தரையில் வட்டமாக உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். வாழை இலையில் சூடான,கெட்டியான சேமியா பாயாசத்தை ஊற்றி, அதில் சிறு துண்டுகளாக உதிர்த்து போட்ட வடையை சேர்த்து சாப்பிடும் சுவையே தனிதான். ஆனால் இதனைவிட எனக்கு மிகவும் பிடித்தது வெண்பொங்கலில் தயிர் ஊற்றி, வாழைப்பழத்தை துண்டுகளாக்கி அதில் போட்டு, வெல்லத்தை சிறு சிறு கட்டிகளாகப் போட்டுக் கலந்துச் சாப்பிட்டால் வாயினுள் எப்படி வழுக்கிகொண்டு உள்ளே போகுமோ தெரியாது. அந்தப்பதம் மற்றும் சுவைக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.
பொங்கல் விழா நாட்களில் என் மனதுக்கு மிகவும் பிடித்தமான இன்னொன்று வாழ்த்து அட்டைகள். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் வாழ்த்து அட்டை என்பது பொங்கலுக்கு மட்டும்தான் விற்பனை செய்வார்கள். பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே எழுதுபொருட்கள் கடைகளின் (Stationery Shop) வெளியே, வாழ்த்து அட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். நான் கடைக்குப் போய் தோழிகளுக்கு அனுப்பத் தேர்வு செய்வது என்பது மிகவும் பிடித்தமான செயலாகும். பொங்கல் தினங்களில் போஸ்ட் என்று முதலில் தபால்காரர் கூப்பிட்ட உடனே,நானும் என் உடன்பிறந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடிப்போய் வாங்குவோம். எனக்கு தோழிகள் அதிகம் என்பதால் எனக்குத்தான் வாழ்த்து அட்டைகளும் அதிகமாக வரும். பெரும்பாலும் தபால்காரர் வரும்போது வீட்டினர் என்னைக் கூப்பிட்டு உனக்குத்தான் வரும் என்று சொல்வார்கள். நான் பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் போய் வாங்கி, யாரிடமிருந்து வந்திருக்கிறது என பரவசத்துடன் பார்ப்பதில் ஒரு அலாதி சந்தோஷம்.
அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்று அம்மா, அப்போது அறுவடையாகி வரும் காய்கறிகளைக்கொண்டு குழம்பு வைப்பார்கள். நான் அரிசிமாவும் வெல்லமும் சேர்த்து மாவை விளக்கு போல் பிடித்து கொழுக்கட்டை தயார் செய்வேன் நான் அதில் நெய் ஊத்தி, திரிபோட்டு தீபமேற்றியவுடன், அனைவரும் கடவுளை வணங்குவோம். அன்று சாயங்காலம் "ஜல்ஜல்" என சத்தம் தெருவில் கேட்கும்போது, நான் ஓடி வந்து தெருவில் பார்ப்பேன். மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட மாடுகளின் கழுத்தில் சலங்கை போடப்பட்டிருக்கும் இதன் கொம்புகள் வண்ணமடித்து, அதில் பலூன்களும் பூமாலைகளும் சுற்றப்பட்டிருக்கும்.பெண்களும், ஆண்களும் அந்த மாட்டு வண்டியில் உட்கார்ந்துக்கொண்டு "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்" என ஆரவாரமாகச் சத்தங்களை எழுப்பிக்கொண்டுப் போவார்கள். அதனைப் பார்க்கும்போது எனக்கும் ஒரு குதூகலம் ஒட்டிக்கொள்ளும்.
அந்தக் காலங்களில் பெரும்பாலும் கமல், ரஜினி படங்கள் பொங்கலன்று வெளிவரும். கமல், ரஜினி விசிறிகளான எங்களுக்குள் எந்தப்படம் போகனும் என பெரிய சண்டை நடக்கும். கடைசியில் அப்பா அழைத்துப்போகும் திரையரங்கிற்கு நாங்கள் போவோம். கூட்ட நெரிசலைப் பார்த்து எப்படியாவது டிக்கெட் கிடைக்கனும் என கடவுளிடம் வேண்டுவேன். அப்பா தெரிந்தவர்கள் மூலம் டிக்கெட் வாங்கி வந்தவுடன் ஒரு பரவசம் கிடைக்கும் பாருங்கள், அப்படி ஒரு மகிழ்ச்சி கிட்டும்.
அடுத்து காணும்பொங்கல் தினம். காணும் பொங்கல் என்றால் சிறுவர் சிறுமிகளான எங்களுக்கு வசூல் செய்யும் நாள். அன்று காலையிலேயே புதிய பொங்கல் ஆடை அணிந்துக் கொண்டு, அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-இல் கமல் தன் சகாக்களோடு கிளம்புவதுபோல, நான் என் உடன்பிறந்தவர்களோடு வசூல் செய்ய கிளம்பிடுவேன். பெரியவர்களிடம் நாங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம். பெரியவர்கள் பொங்கல் பரிசாக பணம் கொடுப்பார்கள். அவற்றை வீட்டிற்கு வந்து உண்டியலில் சேர்த்து வைப்போம். இதெல்லாம் சிறு வயதில் ஆனந்தமாக இருக்கும். பெரிய பிள்ளைகளுக்கு அதிகமாக பணம் கொடுப்பார்கள், சிறியவர்களுக்கு குறைவாகக் கொடுப்பார்கள் 10 ரூபாயிலிருந்து ஆரம்பித்து, இறங்கு வரிசையில் 10,5,3,2,1 ரூபாய் என குறையும். சற்றுப் பெரியவர்களானதும் பணம் வாங்க கூச்சப்பட்டுக்கொண்டு,யார் வீட்டிற்கும் காணும் பொங்கலன்று போவதில்லை. அன்று வயதில் மூத்தவர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கும் பாராம்பரியமும் நாளடைவில் மறைந்துவிட்டது.
காணும் பொங்கலன்று தோழியின் தெருவில் ஜல்லிகட்டு, கபடி, சிலம்பம், உறியடி முதலிய விளையாட்டுகள் நடக்கும். நானும் என் தோழிகளும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்தவுடன், ஒவ்வொருவரும் அவரவர்களின் மகிழ்ச்சியான பொங்கல் அனுபவங்களை சுவாரசியமாக பகிர்நது கொள்வது ஆனந்தமோ ஆனந்தம்.
ஒவ்வொரு வருடமும் இந்த நான்குநாள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பேன். காலங்கள் நகரநகர, ஒவ்வொன்றாக மறைந்துப் போனது சில ஆண்டுகளில் எங்கள் ஊரில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு நடைபாதை போடப்பட்டது. வீட்டிற்கு வெளியே இருந்த சாய்வான மேடை அகற்றப்பட்டது. ஆறு கோலம் போட்ட இடத்தில் மூன்று கோலங்கள், அதுவும் திட்டமான அளவில் தான் போட முடிந்தது. வயல்வெளிகள் விற்கப்பட்டு அந்த இடத்தில் கட்டிடங்கள் வந்தன. மாட்டுப்பொங்கலன்று, தெருவில் வந்த மாடுகள் காணாமல் போயின. நான் திருமணமாகி, நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்தப்பிறகு பொங்கல் பானையை வாசலில் வைத்து கும்பிடமுடியாது. மண் அடுப்பில் வைத்த மண்பாண்டப் பொங்கலுக்குப் பதிலாக கேஸ் (Gas) அடுப்பில் பாத்திரத்தில் வைக்கும் பொங்கலாயிற்று.
வீட்டிற்கு வெளியே திட்டமான அளவோடு ஒரு கோலம்தான் போடமுடியும்.ஒன்பது புள்ளிக்கு அதிகமாகப் போட்டால் பக்கத்து வீட்டு முகப்பு வரை வரும். தற்போது இணைய தளத்திலே சினிமாவிற்கு டிக்கெட் கிடைக்கின்றது. வீட்டிலே இருந்தபடியே படமும் பார்க்க முடிகின்றது. இன்று நினைத்தால், கடைக்குப்போய் நிறைய ஆடைகள் வாங்குகிறோம். எத்தனையோ சௌகரியங்களும், வாய்ப்புகளும் சுலபமாகக் கிடைக்க இன்று உள்ளது.
ஆனால் அந்த நாளில் கிடைத்த சந்தோஷம் இன்று கிடைக்கவில்லை. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்... ஏன் ... ஏன்...?!
Leave a comment
Upload