தொடர்கள்
ஆன்மீகம்
இனிமையான வாழ்க்கையைத் தந்தருளும் கரும்பாயிரம் பிள்ளையார்!! - மீனாசேகர்.

கரும்பாயிரம் பிள்ளையார்


“அருகரும்புத் தரும் வியப்ப அவனியடு
கோட்டு நுனி அமைத்துத் தீயோர்
திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண் வரா
கமும் மகிழத் தேவே என்று
வரு கரும்புள் குலமுழக்கு மலர் கேழல்
புனற்கோட்(டு) ஓர் வணிகன்பாங்கர்
ஒரு கரும்புக்(கு) ஆயிரம் கொண்டுறு கரும்பாயிரக்
களிற்றை உளம் கொள்வாமே!” - திருக்குடந்தைப் புராணம்.

கரும்பு ஒன்றிரண்டு அல்ல; ஆயிரம். கும்பகோணத்திலுள்ள ஒரு பிள்ளையாருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்று பெயர். ஆயிரம் கரும்பின் சுவையாக இருக்கும் அற்புதக் கோயில்.
இக்கோயில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கு திசையில் வராஹ தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் வராஹப் பிள்ளையார் என்றும் இப்போது கரும்பாயிரம் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகின்றார்…
இந்த பிள்ளையார் கோயிலில் ஆகம விதிகளின் படி, வேதம் முழங்கிட நாள் தவறாது வழிபாடுகள் நடக்கின்றன. இந்த பிள்ளையாரை வணங்கி வந்தால் தீராத வினைகளும் நிச்சயம் தீரும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதே போல இந்த கோயிலில் செய்யும் சேவை சிறு புல் அளவாக இருந்தாலும் சரி, வண்டி வண்டியாகத் திருப்பிக் கொட்டிக் கொடுத்து விடுவார். கரும்பாயிரம் பிள்ளையார் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு அளித்து பக்தர்களின் வாழ்வை அடிக்கரும்பு இனிப்பாக மாற்றிடுவார்.

கரும்பாயிரம் பிள்ளையார்

ஸ்தல வரலாறு:
கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. ஒரு சமயம் ஹிரண்யாட்சகன் என்ற அசுரன் பூமாதேவியைப் பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான். அப்போது மகாவிஷ்ணுவானவர் வராஹ அவதாரம் எடுத்துச் செல்வதற்கு முன் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடக்கில் ‘பூவராஹ தீர்த்தம்’ என்னும் குளத்தை அமைத்து அதன் கரையில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து தீர்த்ததில் நீராடி பிள்ளையாரை வேண்டிக் கொண்ட பிறகே பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையார் வராஹ பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த பிள்ளையார் கரும்பாயிரம் பிள்ளையார் என்று இனிமையுடன் அழைக்கப்பட்டு வருகிறார்.

கரும்பாயிரம் பிள்ளையார் பெயர் வரக் காரணம்:
ஒரு முறை கும்பேஸ்வரரை தரிசிக்க வந்த முனிவர்களுடன் ஒரு கரும்பு வியாபாரியும் ஆயிரம் கரும்புகளுடன் வராஹ தீர்த்தக் கரையில் வந்து தங்கினான். அங்கிருந்த பிள்ளையார் அந்தண பாலகனாக வேடம் கொண்டு அந்த வியாபாரியிடம் சென்று தனக்கு ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். ஆனால் வியாபாரி கரும்பு கொடுக்க மறுக்கவே பாலகன் ஒரு கரும்பைப் பிடித்து இழுக்க அதனால் கோபங்கொண்ட வியாபாரி, பாலகனை அடிப்பதற்குத் துரத்திக்கொண்டு செல்ல, அப்போது அந்த பாலகன் வராஹ பிள்ளையார் கோயிலுக்குள் ஓடி மறைந்துவிட்டார். அந்த சமயத்தில் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக் கண்ட வியாபாரி அதிர்ந்து, ‘விநாயகப் பெருமானே!’ என்று அலறினான். தன்னையறியாது கோயிலுக்குள் சென்றான். அப்போது விநாயகர், அந்த ஆயிரம் கரும்புகளுக்கும் மீண்டும் சாற்றைக் கொடுத்தார். அது முதல் அவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது.

பொங்கல் விழாவில் கருப்பஞ்சோலை:

கரும்பாயிரம் பிள்ளையார்


ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது பக்தர்கள் கரும்புகளை நேர்த்திக்கடனாக வழங்குவார்கள். அந்த கரும்புகளைக் கொண்டு கோயில் முற்றத்தில் கருப்பஞ்சோலை(கரும்பு சோலை) அமைத்து, பிள்ளையாருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். மறு நாள் பக்தர்களுக்கு அந்த கரும்புகளைப் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். கரும்பு போல் இனிமையான வாழ்க்கையை தந்தருளும் கரும்பாயிரம் பிள்ளையாரை வணங்கி வளம் பெறலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை : 5.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை: 3.00 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்

கோயிலுக்குச் செல்லும் வழி:
இந்த கோயில் கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்தும், கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்தும் சுமார் 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் இந்தியாவின் பிற பகுதிகளுடன் சாலை மற்றும் இரயில் மார்க்கம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் செல்லும் போது கரும்பாயிரம் பிள்ளையாரைத் தரிசித்து இனிமையான வாழ்க்கையை பெற்றிடுவோம்!!