மும்பை என்றாலே செல்வச் செழிப்பிற்கு குறைவேது . இங்கு வந்தால் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்பது உறுதி. இதற்கு நானே ஒரு சாட்சி. 1980 ல் வந்திறங்கிய நாலு மணி நேரத்தில் ஒரு வங்கியில் டெம்பரரியா கிளார்க் வேலை கிடைச்சிது. அப்புறமா அங்கிருந்தபடியே வேறு இடங்களில் முயற்சி செய்து பணி சுதாரித்துக்கொண்டேன். கூற வந்தது என்னவென்றால், வந்தவற்கு பிழைக்க வழியும், செல்வம் பல பெற்றும் வாழலாம். அதற்கு இவ்வூர் மக்கள் காரணமாய் கூறுவது மும்பை மஹாலக்ஷ்மியைத்தான்.
தந்தேராஸ் மற்றும் தீபாவளியன்றும் பக்தர்கள் கூட்டம் இந்த கோயிலில் அலைமோதுகிறது. மஹாலக்ஷ்மி கோயிலின் மஹாலக்ஷ்மி தெய்வம் 'ஜாக்ருத்' அல்லது உயிருள்ள தெய்வம் என்று நம்புவதால், நவராத்திரி, தீபாவளி மற்றும் மார்கழி மாதத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் மற்ற தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்த மகாலட்சுமி கோயிலின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. மும்பை மாநகரில் உள்ள பாலம் வழியாக வொர்லி மற்றும் மலபார் மலையை இணைக்கும் பணி நீண்ட காலத்திற்கு முன்பு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான கைவினைஞர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் சுவர் கட்டுவது கடினமாக இருந்தது. பல நாட்கள் முயற்சி செய்தும், சுவர் அமைக்க முடியாமல், பணியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி சன்னிதி.
வரலாற்றின்படி, முஸ்லிம் படையெடுப்பாளர்களால் சிலைகள் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்தப் பகுதி இந்துக்கள் மூன்று தேவிகளின் சிலைகளை வொர்லி சிற்றோடைக்கு அருகில் கடலில் மூழ்கடித்துவிட்டனர். மும்பை மாநகர் ஏழு தீவுகளில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, லார்ட் ஹார்ன்பி வொர்லி-மல்பார் ஹில் க்ரீக் என்ற இரண்டு தீவுகளையும் இணைக்க முடிவு செய்தார். இந்த வேலை ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு என்ற இளம் பொறியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு தீவுகளை (சிற்றோடைகள்) இணைக்க தனது மற்ற பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் முயற்சித்த பொறியாளர். இரு வழிகளை உருவாக்கி இரண்டு தீவுகளை இணைக்கும் நிலையில் அவர்களால் கடல் அலைகள் காரணமாக திட்டத்தை முடிக்க முடியவில்லை. ஒரு நாள் இரவு ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி, ஸ்ரீராம்ஜியின் கனவில் தரிசனம் கொடுத்து, ‘நான் என் சகோதரிகளுடன் வொர்லி சிற்றோடையில் உள்ள கடலின் அடிவாரத்தில் இருக்கிறேன். அனைத்து சிலைகளையும் வெளியே எடுத்து மலையின் உச்சியில் வைய்யுங்கள். பிறகு உங்கள் அணை நிறைவடையும்.. அவ்வாறே, அவற்றைக் கடல்/ சிற்றோடையிலிருந்து வெளியே எடுத்து வந்து குன்றின் மேல் உள்ள கோயிலில் வைப்பதாக தேவியிடம் வாக்குக் கொடுத்தார். அதன்படி, வொர்லி சிற்றோடை மற்றும் மல்பார் மலை சிற்றோடையை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், வொர்லி சிற்றோடையிலிருந்து மாதாஜிகளின் மூன்று சிலைகளையும் வெளியே எடுத்தனர்.
அதன் பிறகுதான் அவர் சொன்ன இரண்டு சிற்றோடைகளையும் இணைக்க முடிந்தது. இந்த வேலை முடிந்ததும், பொறியாளர் ஆங்கிலேய ஆட்சியாளரிடமிருந்து பரிசாக மலையின் மீது நிலத்தைப் பெற்றார். பின்னர் அவர் மலையின் உச்சியில் ரூ.80,000/- செலவில் மகாலட்சுமி கோயிலைக் கட்டினார். கிடைக்கப்பெறும் ஆவணங்களின்படி, இந்த கோவில் 1761 A.D.1771 A.D க்கு இடையில் கட்டப்பட்டது என்று தெரிகிறது
மஹாலக்ஷ்மி வளாகம் அதன் கட்டடக்கலை/தொல்லியல் மதிப்பு, தனித்துவமான தெருக் காட்சி மற்றும் பாரம்பரிய கோயில் கோயில்கள் நிறைந்த வரலாற்று குடியிருப்புகளின் உள்ளார்ந்த தரம் ஆகியவற்றின் காரணமாக ஒரு பாரம்பரிய வளாகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் கட்டிடக்கலை மற்றும் கோவில் வடிவங்களின் தனித்துவமான சூழலைக் கொண்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் மலஹாக்ஷ்மி தேவியின் புனித சன்னதிக்கு வருகிறார்கள், ஏனெனில் தேவி தனது உண்மையான பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக அவர்கள் நம்புகிறார்கள். இக்கோயில் சக்தியின் ஆறு ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்கிகிறது,
கோவில் தினமும் காலை 6:00 மணிக்கு திறக்கிறது, நேரடியாக 'அபிஷேகம்', அதன் பிறகு தரிசனம் முதல் ஆரத்தியுடன் திறக்கும் முன் சிலைகள் வழக்கம் போல் கவசமிடப்பட்டிருக்கும். மூல தேவி விக்கிரகம், ஒரு 'ஸ்வயம்பு' என்பது அதிகம் அறியப்படாத ஒன்று - செதுக்கப்படாமல், தானே கல்லில் தோன்றியவள். இரவு 9:30 மணியளவில் கோயிலுக்குச் செல்வதுதான் அவளைப் பார்க்க ஒரே வழி. இந்த நேரத்தில், கவசங்கள் அகற்றப்பட்டு, கோவில் மூடப்படுவதற்கு முன்பு 15 முதல் 20 நிமிடங்களுக்கு அசல் சிலைகள் தரிசனத்திற்காக திறக்கப்படுகின்றன. ஆனால் கல்லில் ஒரு முத்திரை, மற்றும் மகாராஷ்டிராவில் பொதுவாக இருப்பது போல், சிந்தூரத்தால் மூடப்பட்டிருக்கும்.
தற்போதுள்ள கோயில் 1831 ஆம் ஆண்டு இந்து வணிகரான தக்ஜி தாதாஜி என்பவரால் புதுப்பிக்கப்படது. மகாலட்சுமி கோவிலில் திரிதேவி தெய்வங்களான மகாகாளி, மகாலட்சுமி மற்றும் மஹாசரஸ்வதி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. மூன்று விக்கிரஹங்களும் மூக்குத்தி, தங்க வளையல்கள் மற்றும் முத்து நெக்லஸ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மஹாலக்ஷ்மியின் உருவம் மையத்தில் தாமரை மலர்களை இணைத்தவாறு காட்டப்பட்டுள்ளது. அவளது வலப்புறத்தில் மஹாகாளியும், அவளது இடப்புறத்தில் மஹா ஸரஸ்வதியும் அமர்ந்து அருளாட்சி புரிகின்றனர்.
இந்த முப்பெருந்தேவியரின் பிரதினித்துவம் செய்வதாக இந்த கோயிலின் அருகில் புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் சமீபம் வரை வாழ்ந்து வந்தவர். நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான திரு.முகேஷ் அம்பானியும் இங்குதான் வாழ்கிறார். கோவிலில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள அண்டை பகுதிகளான ‘பிரீச் கேண்டி’, ‘கார் மைக்கேல் ரோடு’, ‘பெடார் ரோடு’ ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெரும் வணிகர்களின் இடமாகும்.
இந்த கோயிலோடு இணத்து கூறப்படும் இன்னுமொரு செவி வழி செய்தி இது தான்.
விஜயதசமியை தொட்டு வரும் பௌர்ணமி மிக விசேஷமானது.
இந்த பௌர்ணமியை மராத்தியத்தில் லஷ்மி பௌர்ணமி - கோஜாகிரி பௌர்ணமி என்று கொண்டாடுவார்கள். அன்றைக்கு லஷ்மி பூஜை செய்வார்கள்.
சாயங்காலம் எல்லோருமே நிலா சோறு தான் - சோறுன்னா சாப்பாடு இல்லை. ஸ்நாக்ஸும் பாலும் தான்.
ஒவ்வொறு காலனி ஒவ்வொறு பில்டிங் டெரசிலும் அன்று ராத்திரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
ஏன் இந்த கொண்டாட்டம் ?
அவள் ஒரு ஏழை பெண்மணி. மாதாந்திர தொல்லை வந்து விட்டது.
இன்று இரவு படுக்க இடமும் ஒரு மாற்று துணியும் வேண்டி இருந்தது.
ஒவ்வொரு இடமாக தேடி வந்தாள்.
வறுமை, வீட்டுக்கு தூரம் யாரோ எப்படி பட்டவளோ எல்லோருமே இடம் கொடுக்க மறுத்து விட்டனர்.
பொழுதும் சாய்ந்து விட்டது. அவள் ஒரு மீனவர்கள் அதிகமாக வாழும் இடத்திற்கு வந்தாள்.
ஒரு வீட்டின் கதவை தட்டினாள்.
"அம்மா நான் வெளியூர். இன்னும் நிறைய தூரமா போகணம். இரவு வரப் போகிறது. பசியில் மயக்கம் வரும் போல் தெரிகிறது. இன்று இங்கு உங்கள் வீட்டில் ஒரு ஓரத்தில் படுக்க இடம் கிடைக்குமா ?'
அந்த கிழவிக்கு வந்தவள் மேல் பரிதாபம் தோன்றியது.
"நீ சகஜமாக இங்கு தங்கிக் கொள்ளலாம்"
"ஆனால்",
"ஆனால் ?"
வீட்டிற்கு விலக்கு என்கிறாய். நான் இங்கு ஒரு உலக்கயை வைக்கிறேன். அதை தாண்டி நீ உள்ளே வரக்கூடாது.
ஒப்புக் கொண்டாள் வந்தவள்.
மறுநாள் அதிகாலை. நான் கடலில் சென்று குளித்து விட்டு சுத்தமாக வருகிறேன் என்றவள் சமுத்திரத்திலிருந்து வரவேயில்லை.
ஆனால் அந்த ஏழை மீனவச்சி குடிசையோ தங்கத்தாலும் வைரத்தாலும் நிரம்பி இருந்தது.
அப்பொழுது ஒரு அசரீரியின் குரலும் கேட்டது.
வந்தது நான் ஸ்ரீமன் நாராயணனின் தர்ம பத்தினி மகாலஷ்மி தான் அந்த பெண்மணியாக வந்து ஒரு நாள் தங்க இடம் கேட்டேன்.
வீட்டிற்க்கு விலக்கு என்று என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டனர். ஆனால் இந்த தீவிலிருக்கும் இந்த மீனவ பெண்மணி மாத்திரம் தான்
எனக்கு தங்க இடம் தந்தாள்.
எனக்கு நீங்கள் தரும் எதுவுமே வேண்டாம். எல்லோரிடமும் அன்புடன் இருங்கள். அந்த இடத்தில் நான் இருப்பேன். இந்த தீவில் தான் இனி இருப்பேன். இங்கு இருப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவே இருக்காது என்று சொல்லியது அந்த அசரீரி.
அந்த தீவு தான் மும்பையின் ஏழு தீவுகளில் ஒன்று. அவள் தங்கிய இடம் மகாலஷ்மி என்கிற கடற்கரை கிராமம்.
இன்னிக்கும் மகாலஷ்மி ஏரியாவில் தான் பம்பாயின் பெரும் பணக்காரர்கள் இருக்கின்றனர்.
அந்த உலக்கையை வைத்த இடத்தில் தான் மகாலஷ்மி கோவில் எழுந்து நிற்கிறது..
பம்பாய் மக்கள் சாப்பாட்டிற்கு ஒரு போதும் கஷ்டபட மாட்டார்கள்.
இது நடந்த நாள் தான் கோஜாகிரி எனப்படும் நவராத்ரியை ஒட்டி வரும் பௌர்ணமி திதி நாள்.
அன்று மகாலஷ்மி பூசை செய்து வழி பட்டால் பண ப்ரச்சனையே வராது என்பது மராத்திய மக்கள்
நம்பிக்கை.
இந்த செய்தியினை கோயிலின் அதிகாரிகளிடம் நேரில் கேட்க அவர்களால் உறுதுப்படுத்தவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், இந்த 1700 களின் நடந்த சிலைகள் மீட்பு என்ற ஒன்று இருப்பின் அங்கு இதற்கு முன் கோயில் இருந்ததற்கான முகாந்திறம் இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க வேண்டும். இந்த கடலோரப்பகுதியில் மீனவர்களே வசிப்பர் என்பதால் இந்த செவி வழி செய்தி உண்மையாயிருப்பதற்கு தகுந்த காரணம் இருக்கிறது.
Leave a comment
Upload