முழுமுதற் கடவுள் விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை தமிழகத்தின் பல்வேறு விநாயகர் கோயில்களுக்கும் தனித்தனியே பல அற்புத வரலாறுகளும், அதிசய சக்திகளும் இருக்கின்றன.
உச்சி பிள்ளையார் கோயில் தமிழகத்தின் திருச்சி மாநகரத்தில் உள்ளது. உலகில் வேறெந்த பிள்ளையாரும் மலை உச்சியில் அமர்ந்து இந்த அளவிற்குப் பிரசித்தி பெறவில்லை. இதற்குத் தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் உண்டு.
திருச்சி மலைக் கோட்டை இமாலய மலையைவிட அதிக பழமையானது. நிலவியல் அடிப்படையில், மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்குப் பெயர் வந்தது..
உச்சி பிள்ளையார் கோயில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். இந்த மலைக்கு மலைக் கோட்டை என்ற பெயரும் உண்டு. திருச்சி மலைக் கோட்டை, திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை சுமார் 273 அடி உயரம் கொண்டது. மலைக்கோயிலுக்குச் செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன. இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. திருச்சியில் பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.
இந்த மலையில் மூன்றுகோயில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயில், இடையே தாயுமானவர் கோயில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில்.
இந்த உச்சி பிள்ளையார் கோயிலில் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் திருச்சியின் அடையாளங்களுள் முக்கியமானது. திருச்சியை மலைக்கோட்டை மாநகர் என்றழைக்கும் அளவுக்குப் பெருமையும், சிறப்பும் மிக்கதாகத் திகழ்கிறது.
ஸ்ரீரங்கநாதரைப் பள்ளி கொள்ளச் செய்த விநாயகர்:
இராமாவதாரத்தில், இராவணனை வதம் செய்து, சீதையை மீட்டு இராமர் அயோத்தி செல்லும் போது. விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். விபீஷணன், அயோத்தியில் இராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ஸ்ரீராமரால் அளிக்கப்பட்ட திருமாலின் சயனகோல ரங்கநாதரின் விக்கிரகத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். ஶ்ரீஇராமர் விபீஷணனிடம் அந்த விக்கிரகத்தை எங்கேயும் கீழே வைத்துவிடக்கூடாது, வைத்தால் எடுக்க முடியாது எனும் நிபந்தனையோடு தந்தார். ரங்கநாதர் விக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தார். செல்லும் வழியில் எழில் கொஞ்சும் சோலை நடுவே அகண்ட காவிரியில் நீராடி விட்டு சற்று ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் விக்கிரகத்தைத் தரையில் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையால் செய்வதறியாமல் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு சிறுவன் வடிவில் விநாயகர் தோன்றினார். சிறுவன் வடிவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் விக்கிரகத்தைச் சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து, இதைக் கீழே வைத்து விடாதே. வைத்தால் எடுக்க முடியாது என்று எச்சரித்து சென்றார். விபீஷணன் குளிப்பதற்கு ஆற்றில் மூழ்கினார். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அந்த விக்கிரகத்தைப் பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார். திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் திகைத்துப் போனார். செய்வதறியாது, தரையில் இருந்த ரங்கநாதரின் விக்கிரகத்தை எடுக்க முயன்றபோது அது நகரவில்லை. அந்த சிறுவனைத் தேடிப்பார்த்தால் காணவில்லை. அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தார். அந்த குட்டால் சிறுவனின் தலையில் காயம் உண்டானது. சிறுவனே பிரணவப் பொருளான கணநாதராய், முழுமுதற் பொருளாகத் தோன்றி விபீஷணனுக்கு அருளினார். அவரே அங்குக் காலமெல்லாம் எழுந்தருளி அருள்பாலிப்பதாகவும் வாக்கு அளித்தார். இதனால் இலங்கைக்குச் செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. இன்றும் விபீஷணன் குட்டியதன் வடு உச்சிப் பிள்ளையாரின் தலையில் இருப்பதைப் பார்க்கலாம்.
மலைத் தோற்றம்:
நில எல்லையில் இருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளை (நிலைகளை) உடையதாகத் தோற்றம் அளிக்கும். மலைமேல் மூன்று தள அமைப்பைக் கொண்ட இத்திருத்தலம் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இத்தலம் சிறந்த வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. மலைக்கோட்டையின் மற்றுமொரு சிறப்பான மலைக்கோயில் கிழக்குத் திசையில் இருந்து பார்த்தால் அருளே வடிவமான விநாயகர் போன்று தோன்றும். வடக்கு திசையில் இருந்து பார்த்தால் பெரிய தோகைகளுடன் கூடிய அழகிய மயில் போலத் தோன்றும். மேற்கு திசையில் இருந்து பார்த்தால் (நங்கூரம் பாய்ச்சிய கப்பல்போல) சிவலிங்க மூர்த்தி போல் தோற்றமளிக்கும். தெற்குத் திசையில் இருந்து பார்த்தால் யானை மேல் அம்பாரி இருப்பது போல தலையுயர்த்தி அமர்ந்திருப்பது போலத் தெரியும்.
வரலாற்றுச் சிறப்புகள்:
பல்லவர்கள் ஆட்சியில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த உச்சிப் பிள்ளையார் கோயில், பல்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயில் இயல்பாகவே பாறை கட்டிடக்கலையைக் காட்சிப்படுத்துகிறது. இந்த பிள்ளையார் கோயில் பாறையின் செங்குத்தான படிகளைச் சிறிய பாதையாகக் கொண்டுள்ளது. இந்த கோயிலிலிருந்து கீழே நோக்கிப் பார்த்தால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும் என்பது உச்சிப்பிள்ளையார் கோயில் மகிமை!
17ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது. இப்போது அந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் அரசவையாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது. மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய கதவு ஒன்றும் உள்ளது.
இக்கோட்டைப் பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பீஜப்பூர், கர்நாடகம், மராட்டியர் ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது. பல்லவர்களால் கட்டப்பட்ட பழமையான மற்றும் ஈர்க்கும்படியான கட்டிடக்கலையைக் கொண்டிருப்பதால் இந்த கோயிலை இந்தியத் தொல்பொருள் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
பல்லவர்கள் காலம் தொடங்கிச் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அரசுகளையும் போர்களையும் சந்தித்த சாதனை கொண்டது இந்த மலையும் அதில் உள்ள கோட்டையும் நீண்டு வரும் வரலாறுகளை விலக்கிவிட்டு ஆன்மிகத்தில் நுழைந்தாலும் மலைக்கோட்டை மூன்று பெருமைமிகு வழிபாட்டுக் கோயில்களைக் கொண்டு சிறப்புற்று விளங்கி வருகிறது.
கல்வெட்டுகளும், பாடல்களும்:
உச்சி பிள்ளையார் கோவிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன. 10-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசரான நாராயண வேம்பையர் கோன் காலத்துக் கல்வெட்டு 'சிராமலை’ என்றும், ஸ்ரீராஜராஜனின் கல்வெட்டு 'சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமான சுவாமியும் இவ்வூரை 'சிரகிரி’ அதாவது தலையான மலை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் 'திரிசிரபுரம்’ என்றே இவ்வூரை அழைக்கின்றது.
அதன் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ‘டிரிச்சினாபள்ளி’ என்றும் வழங்கப்பட்டது. இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பதினோரு பாடல்களும், திருநாவுக்கரசரும் மாணிக்கவாசகரும் முறையே நான்கு மற்றும் இரண்டு பாடல்களுமாகத் தேவாரம் பாடியுள்ளனர். மற்றும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர், தாயுமான அடிகள், சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர் கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் இந்நகரின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்து பலவாறு பாடி உள்ளார்கள்.
மலைக்கோட்டையும் மூன்று சீர்மிகு கோயில்களும்:
ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்ற சர்ச்சை எழ, மேரு மலை தூக்கி வீசப்பட்ட போது அதிலிருந்து விழுந்த ஒரு துண்டே சிராப்பள்ளி மலை என்றும், மற்றவை திருக்காளத்தியும், திரிகோண மலையும் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த மலை பக்தர்களால் ‘தட்சிண கயிலாயம்’ என்று போற்றப்படுகிறது.
மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயில், மலையின் மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் இடையே மட்டுவார்குழலம்மை சமேத ஸ்ரீதாயுமானவர் கோயில் ஆகியவை உள்ளன. மலையின் உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையாரை மலை அடிவாரத்தில் எழுந்தருளி உள்ள மாணிக்க விநாயகரைத் தரிசித்து விட்டு சுமார் 417 படிகள் மலை மீது ஏறி உச்சிக்குச் சென்றால் ஓம்கார ரூபமாக அருளும் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். வழியெங்கும் வரலாற்றுச் சுவடுகளும் நினைவு மண்டபங்களும் அமைந்துள்ளன. மலையின் உயரம் நில மட்டத்திலிருந்து உச்சிப் பிள்ளையார் சிகரம் வரை 273 அடி. 178 படிகள் ஏறி முடித்தால் ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை அடையலாம். அடிவாரத்தில் இருந்து 417 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் கோயிலை அடையலாம்.
திருவிழாக்கள்:
மாத சதுர்த்தி நாள்கள், விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபத்திருநாள், ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டுகள் இந்த கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக 14 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி என்பது பிள்ளையார் பட்டிக்கு அடுத்தபடியாக திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. பிள்ளையார் தினமும் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி அன்று 150 கிலோ எடை கொண்ட பெரிய கொழுக்கட்டையை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் நைவேத்தியம் செய்த பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இங்கு கார்த்திகை தீபம் வருடா வருடம் ஏற்றப்படுகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
பிரார்த்தனை:
எந்த காரியங்கள் தொடங்கினாலும் உச்சிப்பிள்ளையாரை வணங்கி விட்டுத் தொடங்கினால் காரியங்களில் வெற்றி நிச்சயம். குழந்தை இல்லாதவர்கள், இக்கோவிலுக்கு வந்து பிள்ளையாரை வேண்டிக்கொண்டால் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
விநாயகர் என்றாலே வினைகளைத் தீர்ப்பவர் என்பது பொருள். எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு வெற்றியை உறுதி செய்ய, உச்சிப்பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
திருச்சியின் மையப் பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கிமீ தூரத்திலும் கோவில் உள்ளது.
உச்சி பிள்ளையாரைத் தரிசனம் செய்வோம்!
வாழ்க்கையில் உயர்வோம்!!
இனி உச்சிப் பிள்ளையாரின் உறைவிடம் இங்கே பல படங்கள்.....
நன்றி படங்கள் : சி.ராமசுப்ரமணியன், திருச்சி. visiongalaxy@gmail.com
Leave a comment
Upload