தொடர்கள்
ஆன்மீகம்
27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி சூரிய கிரகணம்!! - மீனா சேகர்.

2022922071308338.jpg
தீபாவளி பண்டிகை இந்து மதத்தின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்படப் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதேபோல். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 25ஆம் தேதி அன்று நிகழக்கூடிய சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும். வானியல் நிகழ்வுகள் அனைத்தும் முக்கியமான நிகழ்வாகவும், அதிசயமான நிகழ்வாகவும் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக, 27 ஆண்டுகளுக்கு முன்பு 1995-ம் ஆண்டு தீபாவளியன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு நாள் கழித்து ஏற்படும் இந்த கிரகணம், 2022ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் தமிழ் நாட்டில் அக்டோபர் 25ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 5.10 மணி முதல் மாலை 5.45 மணிவரை நிகழும்.
இந்த சூரிய கிரகணம் பகுதி நேரச் சூரிய கிரகணம் நிகழும் என்றும், சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரகணம் எனப்படுகிறது. அப்போது வெகு தொலைவில் இருக்கும் சூரியனை அளவில் சிறிய சந்திரன் மறைப்பது போலத் தோன்றும். வரும் 25-ம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் பகுதி நேரச் சூரிய கிரகணம் நிகழும் என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புவி அறிவியல் துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு:
பகுதி நேரச் சூரிய கிரகணம் 2022 அக்டோபர் 25-ஆம் தேதி (1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள்) நிகழும். இந்தியாவில் சூரிய கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கி பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படும். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதைச் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும். கிரகணத்தின் உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும்.

சூரிய கிரகணம்


கிரகண நேரத்தில் என்ன செய்ய வேண்டும்:

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை நம் முன்னோர்கள் நமக்குக் கூறியுள்ளனர். இதற்குப் பல அறிவியல் காரணங்களும் உண்டு.
கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். தர்ப்பைக்கு எல்லாவிதமான தீயசக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கக் கூடிய தன்மை உண்டு. தர்ப்பை சாதாரண புல் கிடையாது. தர்ப்பை காட்டில் பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் நுழையாது. தர்ப்பை விஷ முறிவாகச் செயல்படக் கூடியது. அதனால் குடிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில், உணவுப் பொருட்கள் வைக்கக் கூடிய குளிர்சாதனப் பெட்டி, சாப்பாட்டுப் பொருட்கள் வைக்கக் கூடிய பாத்திரங்களின் மீது தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டும். சாப்பாட்டுப் பொருட்களில் கிரகணத்தின் போது விஷத்தன்மை கலந்து விடும் என்பதால் தான் கிரகண நேரத்திலும், கிரகண நேரத்தில் வீட்டில் வைக்கக் கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதனால் கிரகண நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். வீடுகளில் உணவுப் பொருட்கள் மீதம் ஆகாமல் இருக்கும் வகையில் சமைக்கத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பால், தயிர் போன்ற பொருட்களில் தர்ப்பை போட்டு வைக்க ஏற்கனவே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணிப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்குச் சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் செல்ல வேண்டி இருப்பவர்கள் பகல் 1 மணிக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்து விட்டு, இரவு 7 மணிக்கு மேல் வெளியில் செல்லலாம். கிரகண நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் ஏதும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், பழ ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். முடிந்த வரை பழச்சாறாக எடுத்துக் கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் தூங்கக் கூடாது என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருந்தால் கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தூங்குவதில் தவறில்லை. கர்ப்பிணிப் பெண்கள் இந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்தல், அரிப்பு ஏற்படும் இடங்களில் சொரிந்து கொள்ளுதல் கூடாது. அப்படிச் செய்தால் குழந்தை பிறந்த பின்னர், அந்த பெண் அரிப்பு ஏற்பட்ட அதே இடத்தில் குழந்தைக்குச் சற்று மங்கலான மச்சம் போன்று தோன்றக் கூடும் என்பது ஐதீகம். கிரகணம் முடிந்த பின்னர் குளித்து, வீட்டில் இறைவனை வணங்குதல், கோயிலுக்குச் சென்று வருதல் நல்லது. கிரகண நேரத்தில் அதன் பலன் அதிகமாக இருக்கும் என்பதால், ஆன்மிக வழிபாடு, ஆன்மிக கதை படித்தால் மிகவும் நல்லது அது குழந்தைக்கும் சென்றடையும் என்பது நம்பிக்கை.

சொல்ல வேண்டிய மந்திரம்:
சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள் - சிவபுராணம் - ருத்ரம் ஆகியவை சொல்லலாம். முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லலாம். மேலும் அபிராமி அந்தாதியும் சொல்லலாம். மந்திர சாஸ்திரத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பௌர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும். அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம்.

வெறும் கண்களால் பார்க்கக் கூடாது:
சிறிது நேரம் கூட இந்த கிரகண சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியனின் பெரும்பகுதியைச் சந்திரன் மறைத்தாலும் அது கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். அலுமினியம் செய்யப்பட்ட மைலார், கருப்பு பாலிமர், நிழல் எண் 14 இன் வெல்டிங் கிளாஸ் போன்ற சரியான வடிகட்டியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது தொலைநோக்கி மூலம் சூரியனின் படத்தை வெள்ளைப் பலகையில் வைப்பதன் மூலமோ சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கான பாதுகாப்பான நுட்பமாகும். முழுவதுமாக சூரியனைச் சந்திரன் மறைக்கும் போது பூமி இருளாகும். வெப்பநிலையிலும் கூட கடும் மாறுபாடு ஏற்படும். அதனால்தான் சந்திர கிரகணத்தை விடச் சூரிய கிரகணத்திற்கு அதிக முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. பகுதி சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது. இந்த கிரகணமானது இந்தியாவில் தெரியும்.

கிரகணத்திற்குப் பின் என்ன செய்யலாம்:
கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, குளித்து, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதோடு, கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். கிரகணம் முடிந்து குளிக்கும் போது அந்த தண்ணீரில் ஒரு பிடி கல் உப்பைப் போட்டுக் குளிக்க வேண்டும். கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் மீது பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி, தீய சக்திகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். கல் உப்பு, நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி கொண்டது.
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் சிவ ஆலயங்களில் உள்ள நவகிரகங்களில் சூரிய பகவானுக்குச் சிவப்பு வஸ்திரம் சாற்றி கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், நைவேத்தியம் படைத்து அரளிப்பூவினால் அர்ச்சனை செய்வது நல்லது. மட்டைத்தேங்காய், கோதுமை தானம் செய்யலாம்.