தொடர்கள்
தொடர்கள்
யார் செய்த கொலை? மினி தொடர் கதை கி.கல்யாணராமன்

202292201233594.jpeg

அதிசயமாக அன்று கடற்கரையில் கூட்டம் அதிகம் இல்லை.

கடல் அலைகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. கூட்டம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் எனக்கென்ன என்று அவை தன் கடமையை செய்துகொண்டிருந்தது.

கூட்டம் இல்லாவிட்டால் பாவம் சுண்டல் விற்கும் வியாபாரிகளுக்கு கஷ்டம். நீலக்கடலை பார்த்து அமர்ந்து கொண்டு நிலக்கடலை சாப்பிடுபவர்கள் அன்று குறைவு. அங்கு அமர்ந்திருந்த சதா என்கிற சதானந் இன்று ஏன் கூட்டம் அதிகம் இல்லை என்று யோசித்துகொண்டிருந்தான்.

“ஒரு வேளை இன்று கிரிக்கட் மேட்ச் ஏதாவது இருக்குமோ? நமக்குத்தான் கிரிக்கட்டைப் பற்றி ஓன்றும் தெரியாதே..கமெண்டரி கேட்டாலும் ஓன்றும் புரிவதில்லை. கமெண்டரி சொல்பவர் அங்கு விளையாடும் பேட்ஸ்மேனுக்கு ஒரு ஷார்ட் லெக்கும் ஒரு லாங் லெக்கும் இருப்பதாக கூறுகிறார். ஒரு கால் நீளமாகவும் ஒரு கால் குட்டையாகவும் இருக்கும் ஒருவர் எப்படி விளையாட முடியும்? நான் பார்த்தவரை அதுபோல் யாரும் அங்கு விளையாடவில்லை. சரி..நமக்கு அதைப்பற்றி என்ன கவலை.. என்ன இந்த மீனாவை இன்னும் காணும். சரியாக ஆறு மணிக்கு வருவதாக கூறிவிட்டு இன்னும் வரவில்லை.’’

சதா தன் கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தான். கடிகாரத்தில் ஒருமுள் தானே இருக்கிறது..ஆச்சரியமாக இருந்தது. பிறகு நன்றாக கவனித்து பார்த்த போதுதான் தெரிந்தது இரண்டு முட்களும் ஓன்று சேர்த்துக்கொண்டு மணி ஆறரை ஆகிவிட்டதை காட்டியது.

“என்ன அப்படி அந்த கடிகாரத்தில் ஆராய்ச்சி?” என்ற குரல் கேட்டதும் மீனா வந்துவிட்டதை உணர்ந்தான்.

“என்ன செய்வது? கடல் அலைகளையே எவ்வளவு நேரம் பார்த்துகொண்டிருப்பது? சற்று கடிகாரத்தையும் பார்க்கலாமே என்று..”

இருவரும் சிறிது நேரம் கடல் அலைகளை ஒட்டி நடந்து சென்றனர். அலைகள் அவர்களின் கால்களை தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றன.

“என்ன சதா..பேசாமல் வருகிறீர்கள்?”

“மீனா உனக்கு கிரிக்கெட் விளயட்டைப்பற்றி தெரியுமா..?

“ஓரளவு தெரியும். கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு தெரியும்.”

“எனக்கு அதில் ஒன்றும் புரிவதில்லை. நேற்று நான் கிரிக்கெட் கமெண்டரி கேட்டேன். அதெப்படி விளையாடும் ஒருவருக்கு ஒரு ஷார்ட் லெக்கும் ஒரு லாங் லெக்கும் இருக்க முடியும். அப்படி இருக்கும் ஒருவரால் எப்படி விளயாட முடியும்?”

இதைக்கேட்டதும் மீனாவுக்கு சிரிப்பு பொங்கியது. வெகுநேரம் சிரித்துகொண்டிருந்தாள். சிரிப்பை அடக்க முடியாமலேயே பதில் சொன்னாள்.

“அதற்குப் பொருள் அப்படி அல்ல. அங்கு விளையாடும் பேட்ஸ்மேனுக்கு லாங் லெக்கில் ஒரு பீல்டரும் ஷார்ட் லெக்கில் ஒரு பீல்டரும் நிருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.”

“இன்னும் எனக்கு புரியவில்லை. அது என்ன ஷார்ட் லெக்கும் லாங் லெக்கும்?”

“அது பீல்டர் நிற்கவேண்டிய இடம். நீங்கள் கிரிக்கெட்டின் அடிப்படை விதிகளை தெரிந்துகொண்டால் அது புரியும்.”

“சரி.,சரி..எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் அவை பற்றி எனக்கு நீ விளக்கமாகச் சொல். இப்பொழுது வேறு விஷயம் பேசலாம்.”

“சதா..உன்னோட பேரு ஒரு பெண்ணோட பேரு மாதிரி இருக்கே..!”

“அந்த பெயரில் ஒரு நடிகை இருப்பதால் சொல்கிறாயா?”

“ஆமாம். உன் பெயர் சதானந்தில் இருக்கும் ஆனந்த் எனக்கு பிடிக்கும். நான் உன்னை ஆனந்த் என்று கூப்பிடலாமா?

“அப்புறம் உன் முழு பெயரை சொல்லி மீனலோச்சனி என்று நான் கூப்பிடலாமா?

“உனக்கு யார் என் பெயர் மீனலோச்சனி என்று சொன்னது?

“அப்படியானால் உன் பெயர் வெறும் மீனா தானா?”

“வெறும் மீனா இல்ல. வெல்லம் போட்ட மீனா..!”

“”அதுதான் உன்ன சுத்தி ஒரே எறும்பா இருக்கா.. இரு உன் மேல எறும்பு மருந்து போடுகிறேன்.”

“வெல்லத்துல எறும்பு வந்தா அது மேலையா மருந்து போடுவாங்க..அப்புறம் வெல்லம் எப்படி சாப்பிடுவது?”

“அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். உன் முழுப் பெயர் என்ன.. அதை சொல்.”

“ஏன் முழுப் பெயரே மீனா தான்.”

“உன் முழுப் பெயர் சதானந் எவ்வளவு நல்ல பெயர் தெரியுமா. சதானந் என்றால் எப்பவும் ஆனந்தம் என்று பொருள். நான் சொல்வது சரிதானே.”

“யாருக்கு தெரியும்... ஏதோ நீ சொல்கிறாய்.. சரியாகத்தான் இருக்கும்.”

“நேற்று என் அக்கா என்ன சொன்னாள் தெரியுமா.? ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்கிறாள்.”

“அது எப்படி?..ஏன் இருக்க முடியாது?’

“நானும் அதைத்தான் கேட்டேன். நான் கூட நம்முடைய நட்பை பற்றி அவளிடம் கூறினேன். நான் எவ்வளவோ வாதாடியும் கூட அவள் ஒப்புக்கொள்ளவில்லை.”

“உன் அக்கா நமது நல்ல நட்பைப் பற்றி என்ன சொல்கிறாள்?”

“கடைசி வரை நல்ல நண்பர்களாக மட்டுமே இருக்க முடியாது. முதலில் நட்பு. பிறகு காதல்..பிறகு கல்யாணம்..அல்லது காதல் முறிவு..இப்படி சொல்கிறாள் அவள்.”

“உன் அக்கா சொல்வதுபோல்தான் இன்று நடக்கிறது. இதற்கு ஒரு விதி விலக்கு நாம்..இல்லையா?

“விதி விலக்காக இருக்கலாம்..அல்லது அக்கா சொன்னது போல நடக்கலாம். ஆனால் நான் என் அக்கா சொன்னதை ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். பிறகு காதல் அல்லது காதல் இல்லை. ..ஏதோ ஒரு காரணத்தால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அப்பொழுதும் அவர்கள் நட்பு ஏன் தொடரக் கூடாது என்று கேட்டேன்..”

“நீ கேட்டது சரிதான். நாம் இருவரும் நண்பர்கள். நீ உனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்துகொள். நான் எனக்கு பிடித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன். நாம் என்றும் நம் நட்பை தொடருவோம். திருமணத்துக்கு பின் நாம் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதா என்ன?”

“நீ சொல்வது சரிதான். அது நமக்கு மட்டும் புரிந்த நட்பு. என் அக்கா இதை ஒப்புக்கொள்ளவில்லை. அவள் அப்படி இருக்க முடியாது..பிரச்சனை வரும் என்கிறாள்.”

“என்ன பிரச்சனை?”

“நீ சொல்வது போல நாம் திருமணத்துக்கு பின் நம் நட்பை தொடர்ந்தால் என் கணவருக்கு உன் மேல் சந்தேகம் வருமாம். அது போல உன் மனைவிக்கு என் மேல் சந்தேகம் வருமாம்...அப்படி எதுவும் வராவிட்டாலும் ஊரில் இருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்களாம். ஏதாவது ஒரு கதையைக் கட்டிவிட்டு பிரச்சனை செய்வார்களாம்..”

“அப்படி பார்த்தால் திருமணத்துக்கு பின்பு எந்த ஒரு ஆணும எந்த ஒரு பெண்ணுடனும் நண்பர்களாக இருக்க முடியாது. இதுதான் உன் அக்காவின் முடிவா.”

“அவள் அப்படி சொல்லவில்லை. நானும் நீயும் அடிக்கடி சந்திப்பது , பேசுவது, பழகுவது எல்லாம் என் அக்காவுக்கு தெரியும். நேற்று நான் வீட்டுக்கு சென்றதும் அக்கா என்னிடம் இதைப்பற்றி கேட்டாள்.

மீனாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

“மீனா..யாருடி அந்த பையன்..உன்னுடன் சுத்துவது? அவன் உன் பாய் ப்ரெண்டா ?”

“சரியாக சொன்னாய் அக்கா.. அவன் என் ஆண் நண்பன்..அவ்வளவுதான்.”

“உங்களுக்குள் வேறு ஏதாவது உண்டா ?”

“நீ கேட்பது எனக்கு புரிகிறது. காதல் எதுவும் இல்லை”

“இப்ப அப்படித்தான் சொல்வாய். யார்தான் காதலிப்பதை அக்காவிடமோ அப்பாவிடமோ நேர்மையாக ஒப்புக்கொள்வார்கள்? கேட்டால் சும்மா நட்பு என்று சொல்வது.. பிறகு காதல் என்று சொல்வது..இல்லாவிட்டால் காதல் கைகூடாமல் ஓ என்று அழுவது..ஏன் தற்கொலை கூட செய்துகொள்வது..எல்லா கதையும் தெரியும்.

“ஏன் அக்கா நல்லதை நினைக்க மாட்டேன் என்கிறாய். காதல் கைகூடி திருமணம் செய்துகொள்ளலாம் இல்லையா..? ஆக நல்ல நண்பர்களாக மட்டும் கடைசிவரை இருக்க முடியாது ..இல்லையா.?

“என்ன நான் சொல்வதெல்லாம் உனக்கு விளையாட்டாக இருக்கா?”

“இல்லை அக்கா..நீ சரியாகத்தான் சொல்கிறாய். ஆனால் அக்கா இதற்கு விதி விலக்கு எதுவும் இல்லையா..”

“அதாவது நீயும் உன் ஆண் நண்பரும் பழகுவது நட்பாக இருப்பது எல்லாம் இந்த விதி விலக்கில் அடங்கும். அப்படித்தானே.?

மீனாவின் அக்கா சுமதிக்கு மீனாவைவிட ஐந்து வயது அதிகம். அவள் பொறியியல் பட்டம் முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தாள். மீனா சுமதி இருவரும் அப்பாவின் செல்ல பெண்கள். அவர்களின் அப்பா அம்மா இருவருமே வேலைக்கு செல்பவர்கள். அதனால் மீனாவுக்கு அவளது அப்பா அம்மாவிடம் அதிகம் பேச நேரம் செலவிட வாய்ப்பு குறைவு. அதனால் அக்காவிடம் தான் அதிகம் பேசுவாள். அக்காவிடம் அவளுக்கு கருத்து வேறுபாடு பல விஷயங்களில் இருந்தாலும் இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு.

சுமதிக்கு பெற்றோர்களாக செய்து வைக்கும் திருமணத்தில் தான் உடன்பாடு என்றாலும் தனக்கு முன்பே நன்கு பழக்கமான ஒருவருடன் திருமணம் நடந்தால் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைத்தாள். நன்கு பழக்கமான என்றால் காதல் என்று அர்த்தமில்லை என்று நினைதுக் கொண்டாள். அவளுடைய சிந்தனைகள் தீர்மானங்கள் எல்லாம் மீனாவுக்கு குழப்பமானதாகவே இருந்தது. சுமதியின் அலுவலகத்தில் அவளது இனிய பழகும் விதத்துக்கும் அவளது அழகுக்கும் நிறைய பேர் அவளை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துடன் அவளை அணுகி தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர். ஆனால் சுமதிக்கு அதில் எந்த நாட்டமோ உடன்பாடோ இல்லை. இதைப்பற்றி எல்லாம் சுமதி வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை. மீனா தனது அக்கா பழைய சம்ரதாயங்களில் நம்பிக்கை கொண்டவள் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.

அக்காவிடம் பேசிய விவரங்களை மீனா சதானந்திடம் கூறினாள்.

“கடைசியில் நீ உன் அக்கா சொன்னதை ஒப்புக்கொண்டு விட்டாயா.? “

“அவளுடன் யார் பேசுவது..அது அவள் கருத்து. இது நம் கருத்து.”

“நீ உன் அக்காவிடம் நான் கேட்பதை சொல். உன் அக்கா திருமணம் செய்து கொள்கிறாள். நீயும் திருமணம் செய்து கொள்கிறாய். உன் கணவர் உன் அக்காவிடம் நல்ல நண்பராக இருக்க முடியாதா..?

“நீங்கள் சொல்வதில் பிரச்சனை இல்லை. காரணம் என் கணவரும் என் அக்காவும் உறவு முறை ஆகிவிடுகிறார்கள். ..சரி. இதைப்பற்றி நாம் நிறைய பேசிவிட்டோம். என்ன நடக்கிறது என்று பிறகு பார்த்துக்கொள்வோம்.. சதா..என் கருத்துக்கும் என் அக்காவின் கருத்துக்கும் ஒப்புதல் இல்லை. அது அப்படியே இருக்கட்டும். நாம் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவே இருப்போம். உன்னோட கருத்தும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்.”

“ஆமாம் மீனா. நமது நட்பு என்றும் தொடரட்டும். எனக்கு இன்று இரவு எட்டு மணிக்கு ஒரு வேலை இருக்கு. இப்போதே கிளம்பினால்தான் நான் அதை கவனிக்க முடியும். என்ன நாம் கிளம்பலாமா?”

மீனா கல்லூரியில் பொறியியல் பட்டபடிப்பு படித்து வந்தாள். சதானந் பொறியியல் பட்டபடிப்பு முடித்து இருந்தாலும், வேலைக்கு போகாமல் தானாகவே ஒரு தொழில் தொடங்கி அதில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தான். அவன் ஒருநாள் மீனா படிக்கும் கல்லூரிக்கு சென்று புதிய தொழில் தொடங்குவதில் உள்ள சவால்கள் பற்றி கல்லூரி மாணவிகளுக்கு பாடம் எடுத்தான். அன்றுதான் மீனா அவனை முதலில் சந்தித்தாள். பாடம் முடிந்ததும் அவனை நேரில் சந்தித்து சில சந்தேகங்கள் கேட்டாள். அதன் பிறகு அவர்கள் பல முறை சந்தித்தார்கள். நண்பர்கள் ஆனார்கள். மீனா சுமதி இருவருமே நல்ல அழகு. பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு.

சுமதி அடுத்த நாள் காலை தனது அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். மீனாவும் கல்லூரிக்கு செல்ல உடை மாற்றிக்கொண்டிருந்தாள்.

“என்ன அக்கா.. தினமும் இப்படி இருவரும் பஸ்ஸில்தான் போக வேண்டுமா? நீ தான் கார் வாங்குவதாக சொன்னாயே.. எப்ப வாங்கப்போற?”

“நோ மீனா..இன்னும் ஒருமாதம்தான் நான் பஸ்சில் போக வேண்டும். அதன் பின் எங்களுடைய கம்பனி கார் வந்து என்னை அழைத்துப் போகும். அதனால் நான் கார் வாங்கும் யோசனையை விட்டு விட்டேன்!”

“போ அக்கா.. நானும் கல்லூரிக்கு காரில் போகலாம் என்றிருந்தேன். என்னுடைய தோழிகள் எத்தனை பேர் காரில் வருகிறார்கள் தெரியுமா? எல்லாம் கனவா?”

“நீயும் நன்றாகக் படித்துவிட்டு பெரிய வேலைக்கு வரும்போது முதல் மாதத்திலேயே கார் வாங்குவாய்.. அதனால் உன் கனவு ஈடேறும்..!”

“என்ன இருந்தாலும் கல்லூரிக்கு காரில் போவது போல் ஆகுமா?”

“பார்க்கலாம்.. நீ சொல்வதை யோசிக்கிறேன். கார் வாங்கினால் நீ அதிலேயே கல்லூரிக்கு போகலாம்.!”

“அக்கான்னா அக்காதான். ஆமாம் .. நீ இப்படியே எத்தனை நாளைக்கு வேலைக்கு போவாய்? உன்னுடைய அவர் வந்தால் நீ தனியாக போய்விடுவாய்.. அப்புறம் நான் எங்கே காரில் கல்லூரிக்கு போவது?!”

“என்னடி உளர்ற..யாருடி அந்த அவர்?”

“ஆமாம்..உனக்கு ஒன்றுமே தெரியாதாக்கும்.!”

“”ஓஹோ..உனக்குதான் எல்லாம் தெரிந்திருக்கே..விளக்கமாக சொல்லலாமே!”

“அட போக்கா.. நீயும் உன்னோட வருங்கால அவரும் மணிக்கணக்கா பீச்ல உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது எனக்கு தெரியாதாக்கும்?”

“எந்த பீச்ல யாரைபார்த்துவிட்டு உளர்ற?”

“நேற்று மாலை ஏழு மணிக்கு நீயும் உன் அவரும் மெரீனா பீச்சில் காந்தி சிலைக்கு நேராக கடல் ஓரம் உட்கார்ந்திருந்ததை நான் மட்டும் அல்ல அங்கு இருந்த எல்லோரும்தான் பார்த்தார்களே.. அப்புறம் எதற்கு ஒன்றும் தெரியாதது போல பாசாங்கு?”

“இரு., இரு.. நேற்று மாலை ஏழு மணிக்கு நான் பார்த்தசாரதி கோவிலில் இருந்தேன். நான் அங்கு இருந்ததற்கு என்னுடைய தோழி கோகிலா சாட்சி!”

“நிஜமாவா அக்கா.. என்னால் நம்ப முடியவில்லை. நீ மட்டும் சொல்வது உண்மையானால் இது அதிசயம்தான். உன்னைப்போலவே அச்சு அசலா அவள் இருந்தாள். நான் சொன்ன அந்த பையனும்.. பையன் என்ன.. அந்த வாலிபனும் மயக்கும் அழகாக இருந்தான்.. அந்த பெண்.. ஆ!.. இப்ப நினைவுக்கு வருகிறது.. நல்ல ஊதா நிறத்தில் புடவை அணிந்திருந்தாள்... ஆமாம்.. உன்னிடம்தான் அந்த நிறத்தில் புடவை கிடையாதே.. அப்படியானால் அவள் வேறு ஒரு பெண் உன்னைப்போலவே ஒருத்தி.... உன் முகத்தின் சாயலில்.. ச்சே.. நான் தான் ஏமாந்து விட்டேன்..”

“நீ சொல்வது எனக்கும் ஆச்சரியமாக இருக்கு. எப்படி அந்த பெண் என்னைப்போல இருக்கா..அவளை நான் பார்க்க முடிந்தால் இந்த குழப்பம் தீரும்..”

“நீ பார்த்தால் குழப்பம் தீராது அக்கா.. குழப்பம் புதிதாக ஆரம்பிக்கும்..!”

“என்ன குழப்பம்?”

“அதை நம் அப்பாவிடம்தான் கேட்ட வேண்டும்.!”

“போடி போக்கிரி..அப்பாவிடம் கேட்டால் உதய் விழும்..”

“சரி அது போகட்டும் அக்கா.. நீ எப்ப உன் புகுந்த வீட்டுக்கு போகப்போற?”

“என்னவோ எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது போலவும், நான் இங்கு வந்து அம்மா வீட்டில் செட்டில் ஆகி விட்டது போலவும், புகுந்த வீட்டுக்கு திரும்ப எப்ப போவது என்று நான் தெரியாமல் இருப்பது போலவும் நீ கேட்கிறாய்!”

“அப்படி இல்ல அக்கா..அதுக்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் ..அதைத்தான் நான் அப்படி கேட்டேன்!”

“ரோம்ப அவசரம் போல இருக்கே. நீ கேட்பதைப்பார்த்தால் உனக்கு மாப்பிள்ளை ரெடியாக இருப்பதுபோல் தெரியுதே? யாருடி அவன்?”

“அதெல்லாம் எதுவும் இல்லை அக்கா. நான் கேட்டதுக்கு பதில். நீ எப்ப புகுந்த வீட்டுக்குப் போகபோற?”

“சிம்பிள் ..எனக்கு கல்யாணம் ஆனவுடன் நான் புகுந்தவீட்டுக்கு போய்விடுவேன்.!

“ஆஹா. என்ன ஒரு கண்டுபிடிப்பு! நீ மட்டும்தான் அப்படி போவியாக்கும். மற்றவர்கள் எல்லாம் புகுந்த வீட்டுக்கு போனபின்புதான் கல்யாணம் செய்து கொள்வார்கள் இல்லையா?”

“ஏன்.. அப்படியும் கூட சிலர் இருக்கிறார்களே!”

“நீ எந்த திட்டத்தில் இருக்கிறாய்..முதலில் கல்யாணமா..அல்லது புகுந்த வீடா..”

“இது இப்ப ரொம்ப அவசியம். யோசித்து சொல்கிறேன். நீ உன் கல்லூரிக்கு போகும் வழியைப் பார்..”

சுமதி அலுவலகம் சென்றுவிட்டாள். மீனாவும் கல்லூரிக்கு செல்ல பஸ் நிலையத்துக்கு சென்றாள்.

அன்று மாலை ஐந்து மணிக்கு சுமதி வீடு திரும்பியதும் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

(அடுத்த வாரம் தொடரும்)